Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் இஸ்ரேல் பயணம்... 11 வருடங்களுக்கு முன்பே போடப்பட்ட ஸ்கெட்ச்!

மோடி

ரு பயணத்துக்காகக் குறைந்தபட்சம் நீங்கள் எத்தனை நாள்களுக்கு முன்பு திட்டமிடுவீர்கள்? அதிகபட்சமாக மூன்று மாதங்கள். ஆனால், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பதினொரு வருடங்களுக்கு முன்பே அதுவும் அவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதே திட்டமிடப்பட்டது என்றால், நம்ப முடிகிறதா? இஸ்ரேலுக்குப் பயணப்பட்ட முதல் இந்தியப் பிரதமராக வேண்டுமானால், மோடி இருக்கலாம். ஆனால், ஓர் அரசியல் தனி நபராக மோடிக்கு இது முதல் பயணம் இல்லை. 2006-ல் இஸ்ரேலுக்கு அவர் பயணம் செய்தபோது, "அடுத்தமுறை இந்த நாட்டுக்கு வரும்போது இந்தியப் பிரதமராக வரக்கூடிய சாத்தியம் அதிகம்" என்று அந்த நாட்டுச் செய்தித்தாளுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

ஆனால், அந்தப் பேச்சு அதோடு முடிந்துவிடவில்லை. 2014-ல் மோடி பிரதமராகப் பதவியேற்றதும் முதலில் வாழ்த்தியவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு. அதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் கொண்டிருக்காத சூழலில்.... அடுத்தடுத்து இஸ்ரேலுடனான இந்திய உறவை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்டிவந்தார் மோடி. இஸ்ரேலிடம் பத்து பில்லியன் டாலர் அளவில் ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யத் தொடங்கியது. இத்தனைக்கும் இந்தியா, ராணுவத் தளவாடங்களை அதிகம் இறக்குமதி செய்வதும் இஸ்ரேலிடமிருந்துதான். அதே 2014-ம் வருடம் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மோடி, பிரதானமாகச் சந்தித்தது நேதன்யாஹுவைத்தான். அப்போது, அவர் மீண்டும் ஒருமுறை விடுத்த அழைப்பை ஏற்றுதான் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளார் மோடி. 

நேதன்யாஹூ மோடி

இஸ்ரேல் - பி.ஜே.பி உறவுநிலை! 

ஆனால், இந்தச் சந்திப்பு இருநண்பர்களின் சந்திப்பாகவோ அல்லது இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பாக மட்டுமோ இருந்துவிடப் போவதில்லை. இஸ்ரேல் மற்றும் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யின்  கொள்கை அளவிலான ஒற்றுமையும் இதற்கு ஒரு காரணம். இருதரப்புமே தங்களது தேசத்தில் இன தேசியவாதத்தைப் பல ஆண்டுகாலங்களாக முன்னிறுத்திவருபவை.

இரண்டு நாடுகளுமே வாக்கு வங்கிக்குத் தேவையான அளவு இஸ்லாமிய சிறுபான்மையினர்களைக் கொண்டது. கடந்த தேர்தல்களில் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் தேவைபட்ட அளவுக்கு 2014 தேர்தலில் சிறுபான்மையினர்களின் வாக்குவங்கிகள் தேவையற்றதாகவே பி.ஜே.பி-யால் கருதப்பட்டது. 10-ல் 1 சிறுபான்மையினர் மட்டுமே பி.ஜே.பி-க்கு வாக்கு அளித்ததாகச் சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட தருணத்தில் பேசிய மோடி, “இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் உட்பொதியப்பட்டுள்ளன” என்றார். ஆனால், அதன்பிறகு தொடர்ச்சியாக நிகழ்ந்த ஹைதராபாத் பல்கலைக்கழகச் சம்பவம் முதல் தற்போதைய மாட்டிறைச்சி அரசியல்வரையிலான அனைத்தும் அவரது பேச்சுக்கு முரணாகவே அமைந்தது எனலாம். மேலும், 2002 குஜராத் கலவரத்தில் மதக்கலவரத்தைத் தூண்டியதாக இன்றும் மோடியின் கட்சியினர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மற்றொருபக்கம் இஸ்ரேல் யூதர்களுக்கான தேசமென்றே பிரசாரம் செய்து வருபவர் பிரதமர் நேதன்யாஹு. அமெரிக்கக் கூட்டு ஆதரவில் பாலஸ்தீனத்துக்கு எதிரான தேசிய எல்லைகளை இன்றும் வரையறுத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். அதன் முந்தைய பிரதமராக இருந்த ஏரியல் ஷரோன், 2003-ல் இந்தியாவுக்கு வருகை தந்தபோது... அவரது இன தேசியவாதக் கொள்கையை எதிர்த்து, 'அவர் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது' என்று குரல் கொடுத்தன இங்குள்ள இடதுசாரி அமைப்புகள். 9/11 தாக்குதல் சம்பவம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்த சூழலில், 2003-ல் ஏரியல் ஷரோனும் அப்போது இருந்த பி.ஜே.பி அரசும் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுப்போம் என்று ஒருசேர தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தின.   

மோடி

காஷ்மீர் பிரச்னை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியில்தான் பெரிய அளவில் உருவெடுத்த சூழலில், இந்திய அரசு இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொஸாட்டின் உதவியுடன் அங்கே பிரிவினையை இன்னும் பெரிதாக்க நிழல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் கட்டமைத்து வருவதாகக் காஷ்மீரின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் கூறினார். இந்திய அரசு, இதனை மறுத்தாலும் காஷ்மீரில் மொஸாட் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிலரும் போலீஸில் பிடிபட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

இத்தனை சம்பவங்களில் உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டதுதான் நேதன்யாஹு - மோடி இடையிலான நட்பும் அதன் தொடர்ச்சியான சந்திப்புகளும்..

இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேல் சென்றுள்ள மோடியும் நேதன்யாஹுவை ஆரத்தழுவி நட்பு விசாரித்த பிறகு, இப்படியாகக் கூறியுள்ளார், “தீவிரவாதத்தை எதிர்த்து நாடுகளைப் பாதுகாப்போம்” என்பதே அது. மத தேசியவாதக் கொள்கைகள், தீவிரவாதத்துக்கு எதிராகக் கொடிபிடிப்பது எத்தகைய நகை முரண்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement