`மானியத்தை விட்டுக்கொடுங்கள்' பயணிகளிடம் கேட்கும் ரயில்வே துறை

ரயில்வே

மிகப்பெரிய அரசுத் துறைகளில் ஒன்று இந்திய ரயில்வே துறை . நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு  66 ஆயிரம் கிலோமீட்டர் நீளம்கொண்ட இருப்புப்பாதைகள் உள்ளன. அவற்றில் 31 சதவிகிதம் இரட்டைப் பாதைகள். இந்த ஆண்டு வெளியான ரயில்வே நிதிநிலையில்கூட கடந்த ஆண்டைவிட அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் மத்திய அரசு ரயில் பயணச் சீட்டின் மானியத்தை விட்டுத்தரக்கோரி ஒரு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதன்படி பயணிகளே தாமாக முன்வந்து பயணத்தொகையில் உள்ள மத்திய அரசின் மானியத்தை விட்டுக்கொடுக்கும் வகையிலான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டத்தில், இணைய முன்பதிவு மற்றும் கவுன்டர்களில் முன்பதிவு  என இரண்டு வகையிலான முன்பதிவின்போதும் பயணிகளிடம் `மானியத்தை விட்டுக்கொடுக்கிறீர்களா?' எனக் கேட்கப்படுமாம். மானியத்தை விட்டுக்கொடுப்பதிலும் இரண்டு வகையான வாய்ப்புகள் வழங்கப்படுமாம்.  `50 சதவிகித மானியத்தை விட்டுக்கொடுக்கிறீர்களா அல்லது 100 சதவிகிதமும் விட்டுக்கொடுக்கிறீர்களா?' என்று கேட்டு, பயணிகளின்  விருப்பத்துக்கு ஏற்றவகையில் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படுமாம். 

தற்போது `இந்திய அரசால் இயக்கப்படும் ரயில்வே துறையில் விதிக்கப்படும் கட்டணத்தொகை என்பது, அதன் அசல் தொகையில் வெறும் 57 சதவிகிதம் மட்டுமே என்றும், இதனால் ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் நட்டமாகிறது' என்று ரயில்வே நிதிநிலையில் தெரிவிக்கப்பட்டது. இதனால்தான் கடந்த சில மாதங்களாகவே பயணச்சீட்டில் `ரயில்வேக்கு பயணத்தொகையில்  57 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது' என்று அச்சிட்டு வழங்கியது. 

மானியம் கொடுப்பதால் எழுந்துள்ள இடர்ப்பாட்டைத் தீர்க்க, மானியம் இல்லாத உயர் ரக ரயில்களையும் இயக்கிவருகிறது. ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில், மற்ற ரயில்களைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் புதிய அறிவிப்பின்கீழ் ஒருவர் தன் மானியத்தை விட்டுக்கொடுத்தால் 300 ரூபாய்க்கு எடுக்கவேண்டிய பயணச்சீட்டை 550 ரூபாய்க்கு எடுக்கவேண்டியதாக இருக்கும். ஏற்கெனவே அரசு இந்த முடிவில் பயணித்துக்கொண்டிருந்தாலும், சில நாள்கள் முன்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு வந்த ஒரு காசோலையும் கடிதமும்தான் இப்படி ஒரு முடிவெடுக்கவைத்ததாகக் கூறப்படுகிறது. 

காஷ்மீரைச் சேர்ந்த அவ்தார் கிருஷ்ணன் என்பவர் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் `நான் பயணம் செய்த சீட்டில் `அந்தப் பயணத்துக்கான தொகையில் 43 சதவிகிதம் நான் மானியமாகப் பெறுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தது.  அதைப் படித்ததிலிருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். வீட்டுக்கு வந்த பிறகும் அது குறித்தே என் சிந்தனை இருந்தது. மூத்த குடிமக்களுக்குப் பயணச்சலுகை அளிக்கும் இந்திய அரசின் நல்ல நோக்கத்தைப் பாராட்டும் அதே நேரத்தில், என்னைப் போன்ற வசதி உள்ளவர்களும் அதை அனுபவிக்கும் நிலை மாறவேண்டும் என எண்ணுகிறேன். இந்தக் கடிதத்துடன் நானும் என் மனைவியும் பயணம் செய்த சீட்டின் அரசு மானியத்தொகைக்கான காசோலையை இணைத்துள்ளேன்' என்று எழுதியிருந்தார். இதைப் படித்த பின்னரே நாடு முழுவதும் இப்படி மனமுவந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் ரயில்வே அமைச்சருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே சமையல் வாயு மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 4,000 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!