Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சபரிமலைக் கோயில் உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி..! என்ன பின்னணி?

சபரிமலை

பரிமலை ஐயப்பன் கோயில் உண்டியலில் பாகிஸ்தான் நாட்டு கரன்சி கிடந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயிலுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். 

கேரளாவின் முக்கியமான கோயில்களில் ஒன்று, சபரிமலை ஐயப்பன் கோயில். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்தக் கோயிலின் நடை திறக்கப்படும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதுடன், கோயிலின் நிர்வாகப் பணிகளையும் தேவசம் போர்டு செய்து வருகிறது. 

இந்தக் கோயிலின் உண்டியல் சமீபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது, அதில், மடிந்த நிலையில் இருந்த ஒரு ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருப்பதைப் பார்த்த போலீஸார், அதனை சோதனையிட்டனர். அது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 20 ரூபாய் மதிப்புடைய கரன்சி எனத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக இதுகுறித்து தங்கள் மேலதிகாரிக்கு தகவல் அளித்தனர். 

கடந்த ஜூன் 28-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கொடிமரம் புதிதாக நிறுவப்பட்டது. அப்போது கோயில் நடை திறக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த கரன்சி உண்டியலில் போடப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.  

பொதுவாக, எல்லைப்புற மாநிலங்களில் பாகிஸ்தான் நாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆனால், நாட்டின் தென்கோடியில் இருக்கும் கேரளாவில் பாகிஸ்தான் நாட்டின் கரன்சி கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதுவும் பாதுகாப்பு மிகுந்த கோயிலின் உண்டியலில் இந்த ரூபாய் நோட்டு கிடந்தது தற்செயலானது தானா, அல்லது தீவிரவாதச் செயலில் ஈடுபடும் எண்ணத்துடன் ஊடுருவிய நபர்கள் கோயில் நிர்வாகத்துக்கு விடுக்கும் எச்சரிக்கையா என்பது குறித்து கேரள மாநில காவல்துறை விசாரணை செய்துவருகிறது. 

இந்த விவகாரம் குறித்து உடனடியாக மத்திய உளவுத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உண்டியல் அருகில் உள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய உருவங்களை வைத்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய கரன்சியை ரிசர்வ் வங்கிக்கு கோயில் நிர்வாகம் அனுப்பி வைத்து உள்ளது. வங்கி அதிகாரிகளிடமும் மத்திய உளவுத் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடக்கிறது.

இது குறித்து பத்தனாம்திட்ட மாவட்ட எஸ்.பி-யான சதீஷ் கூறுகையில், “சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியலில் பாகிஸ்தான் நாட்டு கரன்சி கிடந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதை யார், எதற்காக உண்டியலில் போட்டார்கள் என்பது பற்றி விசாரணை நடக்கிறது. கோயிலின் கண்காணிப்பு கேமராவில் பதிந்த உருவங்களைக் கொண்டும் விசாரணை நடக்கிறது. இது தற்செயலான நிகழ்வா அல்லது திட்டமிட்ட சதிச் செயலா என்பது தெரியவில்லை. விசாரணைக்குப் பின்னரே அது குறித்து விவரங்களைத் தெரிவிக்க இயலும். கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம்” என்றார். 

“கோயிலின் உண்டியலில் இதுவரை டாலர், பவுண்டு, தினார், ரியால் போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள் கிடைத்து இருக்கின்றன. அவற்றை கோயில் நிர்வாகம் தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் செலுத்தி அதற்கு ஈடான தொகையை இந்திய மதிப்பில் வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கரன்சி கோயிலின் உண்டியலில் கண்டெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. நாட்டில் அச்சுறுத்தல் மிகுந்த இடங்களின் பட்டியலில் சபரிமலை கோயிலும் ஒன்று என்பதால்தான் இந்த கரன்சி விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது” என்று சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இந்தியக் கோயில் ஒன்றின் உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி கிடந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில உளவுத் துறையினரும் போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சபரிமலையில் நிஜமாய் நடந்த அன்பே சிவம் சம்பவம் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement