”10 பள்ளி மாணவர்களுடன் வாரம் ஒருநாள் விருந்து!” - ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முயற்சி! 

 ஐ.ஏ.எஸ் அதிகாரி விருந்து

வ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, துணை ஆணையர் பங்களாவில் இரவு விருந்து அளிக்கப்படும். அதற்கு முன்பு, துணை ஆணையர் அலுவலகத்தில் நடக்கும் பணிகளை அந்த மாணவர்கள் கவனிப்பார்கள். அவர்களின் மாவட்டத்தைப் பற்றி துறை ரீதியாக அறிந்துகொள்வார்கள். இது, அவர்களின் மாவட்டத்துக்கு நன்மை செய்யும் திட்டத்தை, கனவுகளை அவர்களுக்குள் விதைக்கும் என்று நம்புகிறேன்” - இப்படி ஒரு அறிக்கையுடன் வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளார், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தமெங்லாங் (Tamenglong) மாவட்டத்தின் துணை ஆணையர் ஆம்ஸ்ட்ராங் பாமே. அட சுவாரஸ்யமா இருக்கே... என்றபடியே அவரை தொலைபேசியில் பிடித்தோம்.

“நான் இங்கே துணை ஆணையராகப் பதவியேற்று ஒரு மாதமாகிறது. இதுதான் என் சொந்த மண். சொந்த மாவட்டத்திலேயே துணை ஆணையராகச் சேர்ந்தது சந்தோஷமாக இருக்கிறது. என் சிறு வயதில், துணை ஆணையர் அலுவலகத்தைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். இந்த அலுவலகம் எப்படி இயங்குகிறது? யாரெல்லாம் இருப்பார்கள்? அவர்களுக்கு என்ன மாதிரி வேலை இருக்கும் எனப் பல கேள்விகள் எனக்குள் எழும். ஆச்சர்யமாக துணை ஆணையர் அலுவலகத்தை பார்த்தபடியே நகர்வேன். அந்த ஆர்வம்தான் என்னை ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கவைத்தது. 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றேன். ஆனால், நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்குக் காரணமாக இருந்த என் அப்பா அப்போது உயிரோடு இல்லை. அவர் ஒரு பள்ளி ஆசிரியர். அவருக்குள் நிறையக் கனவுகள் இருந்தன. நிலவில் முதன்முதலில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்கை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் நினைவாக எனக்கு இந்தப் பெயரைச் சூட்டினார். சகோதர, சகோதரிகளுடன் சேர்த்து நாங்கள் ஏழு பேர்.

என் குடும்பம் ஏழ்மையான சூழலில் இருந்தாலும், எங்கள் படிப்புக்குச் செலவுசெய்ய அப்பா யோசித்ததே இல்லை. அரும்பாடுபட்டுப் படிக்கவைத்தார். நாங்கள் ஜிமா (zema) என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் இனத்திலிருந்து வரும் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி நான்தான். என் மக்களுக்குத் தொடர்ந்து பல நன்மைகள் செய்ய நினைக்கிறேன்'' என்று உற்சாகமாகப் பேசிய ஆம்ஸ்ட்ராங் பாமே, மாணவர்களுக்கான விருந்து விஷயம் பற்றி சொல்லும்போது மேலும் உற்சாகமாகிறார். 

''குழந்தைகளிடம் தலைமைப் பண்புகள் வளர வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தத் துணை ஆணையர் அலுவலகச் சந்திப்பும் விருந்தும். என் நண்பர்கள் பலரும் மருந்துவர்களாகவும் பல துறையின் வல்லுநர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ஸ்கைப்’ மூலம் மாணவர்களிடம் பேசவைக்கப் போகிறேன். இதன்மூலம், மாணவர்களுக்கு உலகில் கொட்டிக்கிடக்கும் கல்வி வாய்ப்புகளை அறிவார்கள். அவர்களின் கனவுகள் விரிவடையும். அவர்களுக்கான தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் அறிமுகப்படுத்துவேன்” என்கிறார் உற்சாகம் குறையாமல். 

இதுபோன்ற வித்தியாசமான திட்டங்களை செய்வது இவருக்குப் புதிதல்ல. 2012-ம் ஆண்டு, அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலத்தின் சாலைகளை மணிப்பூருடன் இணைக்கும் வகையில், ஒரு முயற்சியில் இறங்கினார். தன்னார்வலர்களின் உதவியுடன் நிதி திரட்டி 100 கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலையை அமைத்தார். இந்தப் பணிக்காக தனது சொந்தப் பணத்திலிருந்து ஐந்து லட்சத்தை ஒதுக்கினார். மேலும், இவர் மனைவி அவிடோலி (Avitoli) மற்றும் சகோதரர் ஜெரிமியாவும் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தனர். 

''எந்த ஒரு நல்ல விஷயத்தையும் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அது... ஊர், மாநிலம், நாடு என விரியும்போது நம் கனவுகள் ஜெயிக்கும்'' என்கிறார் ஆம்ஸ்ட்ராங் பாமே. 

அன்று ஊருக்குச் சாலை அமைத்தவர், இன்று குழந்தைகளுக்கு புது வாசலைத் திறந்திருக்கிறார். இவரின் முயற்சிக்கு ஒரு ராயல் சல்யூட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!