வெளியிடப்பட்ட நேரம்: 05:02 (11/07/2017)

கடைசி தொடர்பு:07:38 (11/07/2017)

'அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மோடியே பொறுப்பு': ராகுல் காந்தி தாக்கு!

காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியின் அருகே, அமர்நாத் யாத்ரீக பக்தர்கள்  சென்ற பேருந்தைக் குறிவைத்து காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கோரச் சம்பவத்தில் ஏழு பயணிகள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளைத் தேடும் பணி நடந்துவருகிறது. இந்தத் தாக்குதலை அறிந்து பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி


குறிப்பாக, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, மாநில முதல்வர் மெகபூபா முப்தி சந்தித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்றார்.

 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்," இந்தத் தீவிரவாதக் கோழைகளுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. போதிய பாதுகாப்பின்மையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம். எனவே, பிரதமர் மோடிதான் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற தாக்குதல்கள் இனி நடைபெறாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.