அறிவுசார் சொத்தாக அறிவிக்கப்பட்ட அன்னை தெரசாவின் புடவை! 

தெரசா

ன்னை தெரசாவின் அடையாளமாக விளங்கியதில் மிகப்பெரும் பங்காற்றியது அவருடைய வெள்ளைப் புடவை கொல்கத்தாவில் உள்ள ’மெஷினரி ஆப் சாரிட்டீஸ்' என்ற தொண்டு நிறுவனத்தின் அறிவுசார் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, வெள்ளைப் புடவையில் மூன்று நீலநிற கோடுகள் போடப்பட்டிருக்கும் வடிவமைப்பை, வணிகக் காரணத்திற்காக யாரும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்னை தெரசா அணியும் புடவையை அவரின் தொண்டு நிறுவனங்களுக்கு அறிவுசார் சொத்துரிமையாக்கக் கோரி, 2013 டிசம்பர் மாதம் கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிஸ்வாஜித் சர்கார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, 2016-ம் ஆண்டு இந்தப் புடவையின் வடிவமைப்பு, அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனங்களுக்கே சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. (இதே ஆண்டில்தான், வாட்டிகனில் அன்னை தெரசாவைப் புனிதராக போப் அறிவித்தார்) ஆனால், அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனமான 'மெஷினரி ஆப் சாரிட்டீஸ்' இந்தத் தகவலை விளம்பரப்படுத்த விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், பல நிறுவனங்கள், அன்னை தெரசாவின் புடவை வடிவமைப்பைத் தங்களின் சொந்த லாபத்துக்காகவும், வணிகக் காரணங்களாகவும் பயன்படுத்திவந்தனர். 

மும்பையில் அன்னை தெரசா பெயரில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்று, மதம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் புடவையின் வடிவமைப்பில் அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பல கல்வி நிறுவனங்களும் அன்னை தெரசாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்கறிஞர் பிஸ்வாஜித் சர்கார் (Biswajit Sarkar) தெரிவிக்கையில், “பல கல்வி நிறுவனங்கள் அன்னை தெரசாவின் பெயரிலும், அவரின் புடவை வடிவமைப்பைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சீருடையாகவும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தக் கல்வி நிறுவனங்களுக்கும், மெஷினரி ஆப் சாரிட்டீஸ் தொண்டு நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆரம்பத்தில், நாங்கள் இதனைச் சிக்கலாகக் கருதவில்லை. ஆனால், தொடர்ந்து பல நிறுவனங்கள் அன்னை தெரசாவின் பெயரைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மெஷினரி ஆப் சாரிட்டீஸ், தனக்கான அடையாளத்தை இழந்துவிடுமோ என்று கவலைப்படுகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார். தற்போது, தங்களின் அடையாளத்தை நிலைநாட்டும் பொருட்டு, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். 

அன்னை தெரசாவின் பெயரும் அவருடைய தொண்டு நிறுவனத்தின் சொத்துரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசா, 1910ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 26 தேதி, அல்பேனியாவில் பிறந்தவர். அவரது 21 வயதில், கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிய வந்தார். கொல்கத்தாவின் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை மக்களின் அவலநிலையைக் கண்டு, அவரது வாழ்நாளை எளிய மக்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் தொண்டாற்ற அர்ப்பணித்தார். அன்பையும் எளிமையையும் பரப்பிய இவருக்கு 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவரின் அடையாளமான வெள்ளைப் புடவையை இரண்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு வாங்கினார். ஒருமுறை அன்னை தெரசா தனது புடவை பற்றி பேசுகையில், ''இந்த வெள்ளைப் புடவையையும் இதிலுள்ள நீல நிறத்தையும் சேவையின் அடையாளமாகக் கருதுகிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

ஒரு மதம் சார்ந்த சீருடை, அறிவுசார் சொத்தாக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. தற்போது, ஒவ்வொரு வருடமும் இந்த வடிவமைப்பில் 4,000 புடவைகள் நெய்யப்பட்டு, உலகம் முழுவதும் இருக்கும் கன்னியாஸ்திரீகளுக்கு வழங்கப்படுகிறது. இனி, அன்னை தெரசாவின் பெயரையும், அவர் பயன்படுத்திய புடவை வடிவமைப்பையும், அந்தத் தொண்டு நிறுவனத்தின் அனுமதியின்றி பயன்படுத்தினால், அவர்கள்மீது  சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவும், மெஷினரி ஆப் சாரிட்டீஸூக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!