“வரியினால் ஏற்பட்ட வலி!” - திருப்பூர் ஜி.எஸ்.டி கலந்துரையாடல் #GST

GST awareness conference at Tirupur

த்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்த விழிப்புஉணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி என்ற மத்திய அரசின் சம்பிரதாய சடங்கு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் திருப்பூரிலும் நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்துகொண்டு பேசினார்.

“வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜி.எஸ்.டி’ எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியானது, நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சர்வதேச அளவில் இந்தியா முதன்மைபெற, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மிகவும் அவசியம். அத்தகைய வளர்ச்சிக்கான நடவடிக்கையையே ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் 85 லட்சம் உற்பத்தி நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து நிறுவனங்களையும் கொண்டுவருவதிலும், ஏற்கெனவே வரிவிதிப்பின் கீழ் பதிவுசெய்துள்ள உற்பத்தியாளர்களுக்கு இதன் நடைமுறையைச் செயல்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.

எனவே, மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் நாட்டில் உள்ள தொழில் உற்பத்தி மையங்களுக்கு நேரில் சென்று உற்பத்தியாளர்களைச் சந்தித்து ஜி.எஸ்.டி-யில் அவர்களுக்கு உள்ள சந்தேகங்களை நடைமுறைப்படுத்துவதிலும், அதில் உள்ள சிக்கல்களைக் களைவது குறித்தும் கலந்துரையாடல் நடத்திவருகிறோம். இதில், ஜி.எஸ்.டி. குறித்த அவர்களின் சந்தேகங்கள், வரிவிதிப்புகள், விதிக்கப்பட்ட வரியினங்கள் எனப் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் விளக்கமளித்து வருகிறார்கள். இருப்பினும், ஜி.எஸ்.டி குறித்த சந்தேகங்களுக்கு அதற்கெனத் தனியாக மத்திய அரசு நடத்திவரும் `ஜி.எஸ்.டி கேந்திரா' எனப்படும் சேவை மையத்தையும் உற்பத்தியாளர்கள் அணுகலாம். மேலும், திருப்பூர் உற்பத்தியாளர்களின் மிக முக்கியக் கோரிக்கைகள் சிலவற்றையும் நாங்கள் கவனத்தில்வைத்துள்ளோம். அவை அனைத்தும் மத்திய நிதித் துறையிடம் ஒப்படைத்து, அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம்.

Tirupur meeting about GST

ஜி.எஸ்.டி-யிஸ் வரி செலுத்தும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி மூலம் மத்திய, மாநில வரியினங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வருவாயை உயர்த்தவும் வளர்ச்சி காரணங்களுக்காகவும் நாம் இதை நடைமுறைப்படுத்தவேண்டும். எனவே, நாட்டு மக்கள் அனைவரும் இதைப் புரிந்துகொண்டு, ஜி.எஸ்.டி-க்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்ற வழக்கமான ஜி.எஸ்.டி புராணம் அரங்கேற்றப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறுதொழில் செய்வோர், பின்னலாடை சம்பந்தப்பட்ட ஜாப் வொர்க் செய்வோர் எனப் பலரும் மத்திய அமைச்சரிடம் தங்களின் சந்தேகங்களைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அதில் பலரும் தங்களின் தொழில் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் எதிர்பார்த்து மத்திய அமைச்சரிடம் கேள்விகளைக் கேட்க, பெயர் அளவுக்கு இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு, “நேரமில்லை” என்று கூறிவிட்டுக் கிளம்பினார் மத்திய அமைச்சர்  ஜெயந்த் சின்ஹா.

அதன் பிறகு ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், பார்வையாளர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னலாடை நிறுவன உரிமையாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில்...

“மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், பிரமாண்ட ஏற்றுமதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பார்கள். மத்திய அமைச்சரின் இந்தி கலந்த ஆங்கிலத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எங்களைப் போன்று படிப்பறிவில்லாமல் சிரமப்பட்டு உழைத்து முன்னேறியவர்கள்தான் திருப்பூரில் ஏராளம். மேடையில் பேசிய மத்திய அமைச்சர் உள்பட பலரும் இரண்டு மணி நேரம் என்ன பேசினார்கள் என்றே தெரியவில்லை. சரி, எங்களின் சந்தேகங்களையும் கோரிக்கைகளையும் நேரடியாக அவரிடம் முன்வைத்தால்கூட, ஓரளவுக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அதற்கும் வழி இல்லாமல்போயிற்று.

GST

ஏற்கெனவே, நம் நாட்டின் பின்னலாடை துறைக்கு உள்ள சிக்கல்களால் வங்கதேசம், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுடனான போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம். இதற்கிடையில் இந்த ஜி.எஸ்.டி-யைச் சமாளிப்பது என்பது எங்களைப் போன்ற சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இன்னும் அதிகப்படியான அழுத்தங்களைத்தான் தருகிறது. ‘ஒரே வரி... ஒரே இந்தியா’ என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஜி.எஸ்.டி-க்கு நாங்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு தரத் தயாராக இருக்கிறோம். ஆனால், முதலில் அதை முழுமையாக எங்களுக்குப் புரியவையுங்கள்'' என்றார்.

இவர்களின் வலிக்கும் இந்த அரசு வரி போடாமல் இருந்தால் சரி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!