வெளியிடப்பட்ட நேரம்: 09:51 (14/07/2017)

கடைசி தொடர்பு:09:51 (14/07/2017)

வாதிடும் இந்தியர்களும்... பசு தேசியமும்...!

அகில்லேஸ்

அகில்லேஸ், கிரேக்க காவியமான ஹோமரின் 'இலியட்' கூறும் மாபெரும் வீரன். உலக வரலாறு இதுவரையிலும், இதற்குப் பிறகும் கண்டிராத ஒரு வீரனாக அவனை வர்ணித்திருப்பார் ஹோமர். தேவதையான தீட்டஸ் என்பவளுக்கும், மனிதப்பிறவியான அரசன் பீலஸ்-க்கும் பிறந்தவன். தன்னைப்போல தன் மகனையும் சாகாவரம் பெற்றவனாக்க நினைத்த தீட்டஸ், அவனது குதிகாலைப் பிடித்தபடி அமரத்துவ நீரில் குழந்தையான அகில்லேஸை குளிப்பாட்டி விடுவான். ஆனால், அவனது குதிகால் அந்த நீரில் நனைந்திருக்காது. அதனால், அந்தஇடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற நிலை. அகில்லேஸின் கதையைச் சுற்றித்தான், கிரேக்க நாகரிகத்தைத் தீர்மானித்த ட்ராய் நகரம் மற்றும் அதன்மீது தொடுக்கப்பட்ட ட்ராஜன் போர் என அத்தனையும் நிகழ்ந்தது. இதைத்தான் ஹோமர் படைத்த காவியமான ' இலியட்' கூறுகிறது. 

ட்ராஜன் போரின் இறுதியில் தனது குதிகாலில் அம்பு தைத்துதான் அகில்லேஸ் இறப்பதாக ஹோமர் எழுதியிருப்பார். ட்ராய் நகரத்தைப் பற்றியும் அகில்லேஸ் பற்றியும் ஹாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. இதன் உச்சக்கட்டமாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிறுவனம் முதன்முதலாக தனது அகராதியில் குதிகாலுக்கோ அல்லது ஒரு பலமிக்க சூழலின் வலுவற்ற பகுதியை மட்டும் குறிப்பிடவோ 'அகில்லேஸ் ஹீல்' என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. ஆனால், கிரேக்க வரலாற்றை ஆராய்ச்சி செய்த வரலாற்று அறிஞர்கள், ட்ராய் நகரம் இருந்ததற்கான தடயம் மட்டுமே இருப்பதாகவும், ஆனால் இலியட்டில் கூறப்படும் அகில்லேஸ் இருந்ததற்கான எவ்வித தடயங்களும் இடம்பெறவில்லை என்பதுமாக உண்மை நிலவரங்களை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்கள். இதற்கு நடுவே, ட்ராய் என்னும் நகரமே வெறும் கற்பனைதான் என்கிற ரீதியிலான கருத்தாக்கங்களும் எழுந்தன. 

பதிமூன்றாம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்படும் உண்மைச்சம்பவம் காலப்போக்கில் மாற்றம்பெற்று தனது 20-ம் நூற்றாண்டு வரையிலான பயணத்தில் வெவ்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. வரலாறு என்று நமக்கு போதிக்கப்படுவது, எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை என்பதற்கு ட்ராயும், ட்ராஜன் போரும் மிகப்பெரும் அத்தாட்சி. யார் எங்கிருந்து வந்தார்கள்? யார் இந்த நிலத்தில் முன்னரே இருந்தவர்கள்? என்பதுபோன்ற கேள்விக்கு இன்றும் விடைகிடைக்காத சூழலில், இருக்கும் இந்திய தேசத்தின் வரலாற்றிலும் ட்ராய் போன்ற பக்கங்கள் இன்னும் விடை தேடப்படாமலே இருக்கின்றன.

இந்த நிலையில்தான் "தி ஆர்க்யுமென்டேடிவ் இந்தியன்" (The argumentative Indian) எனப்படும் வரலாற்று மறுஆய்வு ஆவணப்படத்தின் மீது தனது கத்தரிக்கோலை தன் போக்கில் ஏவியுள்ளது மத்திய திரைப்படத்தணிக்கைக் குழு. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரும், பொருளாதார வல்லுநருமான அமர்த்தியா சென் எழுதி 2005-ல் வெளிவந்த அதே பெயரிலான புத்தகத்திலிருந்து எழுப்பப்படும் விவாதங்கள்தான் இந்த ஆவணப்படம். இயக்குநர் சுமன் கோஷ் இயக்கத்தில் பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசுவுடனான அமர்த்தியா சென்னின் இந்த விவாத ஆவணங்களை கொல்கத்தாவில் தணிக்கைக்காகப் பார்வையிட்டது மத்திய குழு. திரையிடலின் இறுதியில் தணிக்கைக்குழு அமர்த்தியா சென் உபயோகித்திருக்கும் குஜராத், பசு, இந்துத்துவம், இந்து, இந்தியா போன்ற வார்த்தைகளை 'பீப்' செய்தால் மட்டுமே படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கமுடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அமர்த்தியா சென்

அமர்த்தியா சென்னுக்கு அவரது கருத்தை வெளியிட உரிமை இல்லையா என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ளன. இத்தனைக்கும் அமர்த்தியா சென்னின் 'தி ஆர்க்யுமென்டேடிவ் இந்தியன்' புத்தகத்தின் மையக் கருத்தே 'இந்திய தேசம் தனது வரலாற்றைத் தவறாக மாற்றியமைத்து அதனைப் பல தலைமுறைகளுக்குக் கடத்துவதன் மூலம் ஓர் ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தன்மைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறது'என்பதுதான். அமர்த்தியா சென் அப்படிக் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது. "பசுவைப் புனிதம் என்றும் அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறும் இதே பசுப் பாதுகாவலர்களின் வேதங்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்பாடும் இப்படியாக இருந்திருக்கவில்லை" என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என். ஜா. அவரின் 'பசுவின் புனிதம்; மறுக்கும் ஆதாரங்கள்' என்னும் நூலில் இப்படியான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

"...உணவு விஷயத்தில் வேதகால கடவுள்கள் மத்தியில் பெரும் வேறுபாடு ஏதுமில்லை. பால், வெண்ணெய், பார்லி, எருது, வெள்ளாடு, செம்மறியாடு போன்றவை அவர்களின் வழக்கமான உணவாக இருந்தன. இருப்பினும் சில கடவுள்கள் சில விசேஷமான உணவுவகைகளை விரும்பின என்று தெரிகிறது. இந்திரனுக்குப் பிடித்த உணவாக காளை இருந்தது. இந்திரனைப் போல அக்னி, பெருங்குடிகாரனாக இல்லை என்ற போதிலும் குதிரை, காளை, பசு ஆகியவற்றின் இறைச்சியை அவன் பெரிதும் விரும்பி வந்தான். சாலைகளின் காவலனான பல்லில்லாத பூஷன் தனக்குப் படைக்கப்பட்ட இறைச்சி எதுவாக இருந்தாலும் சாப்பிட்டான். இத்தெய்வத்துக்கு விலங்குகளை (கால்நடைகள் உள்ளிட்டவை) பலி தருவது பெரும்பாலான ரிக்வேத வேள்விகளில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது...வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 250 விலங்குகளில் குறைந்தது 50 விலங்குகளாவது வேள்விகளில் பலிக்குத் தகுதியானவையாக இருந்தன". 

பசு

அதாவது, "தெய்வம், மனிதன் ஆகிய இருவரின் நுகர்வுக்கும், பொதுவானவையாக விலங்குகள் இருந்தன" என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது என்று தனது ஆய்வு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் டி.என்.ஜா. இதுமட்டுமில்லாமல் புத்தகத்தின் தொடக்கத்திலேயே பசு படையல் பொருளாக இருந்ததற்கான வேதகால ஆதாரங்களைக் கொண்டு தொடங்குகிறார் அவர். "மற்ற அனைத்து விலங்குகளைப் போலவே பசுவும் பார்க்கப்பட்டுவந்த சூழலில் அதன்மீதான புனிதத்தன்மை கட்டமைக்கப்பட்டது வேதகாலத்திற்குப் பிறகான அரசன் மனுவின் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்" என்பது அவரது வாதம். அவரது கருத்துபோலவே மனுவின் காலத்தில் பசுவதை சிறுகுற்றமாகச் சேர்க்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. ஆனால். அதற்கான பெரியளவிலான தண்டனைகள் எதுவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் ஒவ்வொரு சமூகத்தினரும் வளர்க்கும் பசுக்கள் கொல்லப்படும்நிலையில், அதைக் கொல்பவர்களுக்கு ஒவ்வொரு விதமான தண்டனை என்று மாற்றம் பெற்றுள்ளது.  கி.பி.1,100-ம் ஆண்டு வரை இந்தப் பாகுபாடு நிறைந்த புனித கட்டமைப்புகள் பற்றிய கேள்விகளும், யக்ஞவால்கியர் போன்றவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால், "பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்குப் பிறகான இந்தியாவில்தான், பசுவின் மீதான பிம்பங்கள் அதிகம் திணிக்கப்பட்டுள்ளன" என்கிறது டி.என். ஜாவின் ஆய்வு.

தற்காலத்தில் அமர்த்தியா சென்னின் கேள்விகள், யக்ஞவால்கியர் போன்றோர் விட்டுச்சென்றதன் நீட்சிதான். இலியட்டில் அகில்லேஸ் பாத்திரம் நுழைந்ததால் வரலாறு எப்படியாக மாற்றப்பட்டதோ அப்படியான நிலைதான் தற்போது பசுவின் மீது வைக்கப்படும் வாதமும் பிரதிவாதமும். உலகமே அறிவுஜீவி என்று ஏற்றுக்கொண்டு, நோபல் பரிசு அளிக்கப்பட்ட ஓர் அறிவியலாளரின் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் இங்கே தணிக்கை மட்டுமே பதிலாக அமைகிறது. உண்மை வரலாறுகள் அறியப்படவேண்டுமெனில் தணிக்கைகளும், சில நேரங்களில் தணிக்கை செய்யப்பட வேண்டியதும் அவசியமாகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்