Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணவீக்கம் குறைந்தாலும் விலை குறையவில்லை... தொழில் துறை மந்தம்! என்ன செய்யப்போகிறது அரசு?

பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மசோதாக்கள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றால் என்ன பலன் கிடைத்திருக்கிறது எனக் கேட்டால், வடிவேலு மாதிரி `இப்ப நான் என்ன சொல்றது?' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. உதாரணமாக, பணவீக்கம் குறைந்தபோதிலும் விலை குறையவில்லை.

விலை

மத்திய புள்ளிவிவரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், `பணவீக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளது. மே மாதம் 2.2 சதவிகிதமாக இருந்த சில்லறைப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 1.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சில்லறைப் பணவீக்கமானது இதற்கு முன் 1999 மற்றும் 1978-ம் ஆண்டுகளில்தான் குறைவாக இருந்தது. இது ரிசர்வ் வங்கி வைத்துள்ள வரம்பான நான்கு சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. காரணம், உணவுப் பொருள்களின் விலை குறைந்ததுதான் எனச் சொல்லப்படுகிறது. உணவுப் பொருள்களின் விலை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஜூன் மாதத்தில் 2.12 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், மே மாதத்துடன் ஒப்பிட்டால் 1.05 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் பார்க்க முடிகிறது.

நுகர்வோர்கள் ஆடைகளுக்குச் செய்யும் செலவு 4.17 சதவிகிதமாகவும், எரிபொருளுக்கான செலவு 4.54 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் காய்கறிகள் மற்றும் தானியங்களின் விலை 16 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதைக் கேட்டதுமே, `உணவுப் பொருள்களின் விலை குறைந்ததா! (என்ன... சிவாஜி செத்துட்டாரா!)' என்பது போன்ற ரியாக்‌ஷன்தான் நம்மில் பலருக்கும் இருக்கும். ஏனெனில், விலை ஏறுவதையோ இறங்குவதையோ நாம் பெரிதாகக் கவனிப்பதே இல்லை. 

இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு வரை நுகர்வோர் பணவீக்கக் குறியீடானது 1.70 சதவிகிதமாக இருக்கும் என்றுதான் ராய்ட்டர்ஸின் கருத்துக்கணிப்பில் பலரும் கூறிவந்தனர். ஆனால், அதற்கும் குறைவாக நுகர்வோர் பணவீக்கக் குறியீடு பதிவாகியிருப்பது ஆச்சர்யம்தான். பணவீக்கம் குறைந்ததற்கான எந்தப் பலனையும் நுகர்வோராகிய நாம் அனுபவிக்கவில்லை. உணவுப் பொருள்களின் விலை குறைந்ததாக அறிக்கைச் சொன்னாலும், நுகர்வோர்களாகிய நாம் வாங்கும் பொருள்களின் விலை ஒருபோதும் குறையவில்லை. காரணம், நிறுவனங்கள் தங்களின் விற்பனை உத்திகளைச் சந்தைக்கேற்ப கையாள்வதுதான். சந்தையில் மொனாபொலியாக விளங்குபவர்கள், தேவை அதிகமாக இருக்கும்போது உற்பத்தியைக் குறைப்பது, பற்றாக்குறையின்போது பதுக்குவது இப்படிப் பல்வேறு விதங்களில் உத்திகளைக் கையாள்வார்கள். இதனால் பணவீக்கம் குறைந்தாலும் நம்மால் அந்த விலைக் குறைவை அனுபவிக்க முடியாது.    

ஆனால், இப்போது நடந்திருப்பது அந்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழில் துறை குறியீடு மோசமாக இருக்கிறது என்பதுதான் அது. தொழில் துறையில் வளர்ச்சி உண்டாகவில்லை. தொழில் துறை வளர்ச்சிக் குறியீடு 1.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மே மாதம் 8 சதவிகிதமாக இருந்தது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. உற்பத்தியும் குறைந்து காணப்படுகிறது. உற்பத்தித் துறை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 8.6 சதவிகித வளர்ச்சியை அடைந்தது. ஆனால், தற்போது வெறும் 1.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. பணவீக்கம் குறைந்துள்ள நிலையில் தொழில் துறை வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளது. வட்டிவிகிதத்தைக் குறைப்பதன் மூலம் தொழில் துறையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த முடியும். நடைபெற்ற ரிசர்வ் வங்கிக் கூட்டங்களில், வட்டிவிகிதம் குறைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வட்டிவிகிதத்தைக் குறைத்தால்தான் முதலீடுகள் அதிகரிக்கும். `முதலீடுகளை அதிகரிக்க வட்டிக் குறைப்பு அவசியம்' என மத்திய அரசும் வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ரிசர்வ் வங்கி இப்போதாவது வட்டிவிகிதக் குறைப்புக்கு ஆவணசெய்ய வேண்டும். 

அரசும் இந்த விஷயத்தில் ஏதேனும் செய்தாகவேண்டியிருக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம் விலை எப்படி அதன் சந்தைக்கேற்ப மாறுபடுகிறதோ, அதேபோல் பணவீக்கத்தின் அடிப்படையில் நுகர்வுப் பொருள்களின் விலையும் மாறுபட வேண்டும். மேலும், தொழில் துறையின் வளர்ச்சி என்பது, வேலைவாய்ப்போடும் பொருளாதாரத்தோடும் பிணைந்திருக்கிறது. இதையெல்லாம் அரசும் ரிசர்வ் வங்கியும் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement