Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அணு உலைகளை டார்கெட் செய்யும் ஹேக்கர்கள்... அமெரிக்காவும் தப்பவில்லை!

நமது முக்கியமான இணையத் தகவல்களையும், கணினியில் சேமிக்கும் தரவுகளையும் நூறு சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. இது, கணினி உலகில் இணையம் பயன்படுத்தும் பயனாளர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். உலகின் வல்லரசு நாடுகளில் முக்கியமான நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் கூட தகவல்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறன. இணையப் பாதுகாப்பில் அந்நாடுகளுக்கு ஈடு கொடுக்கக்கூடிய சைபர் செக்யூரிட்டி இந்தியாவிடம் இல்லை என்பதையும் இங்கே மறுக்கவும் முடியாது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சில வங்கிகளின் சேமிப்புக் கணக்கு, ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கும் மேல் இருக்கும். இதனால் உலகளவில் பெரும்பாலும் இணையப் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் கூடங்குளம் அணுஉலை ஹேக்கர்களின் கையில் போகப்போகிறது, என்ற பகீர் தகவலை வெளியிட்டிருந்தார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன். 

வெடித்த அணு உலை ஹேக்கர்கள்

“பொதுவாகவே உலகளவில் கணினிகளை ஊடுருவி பயனாளர்களை ஏமாற்றியோ அல்லது அவருக்குத் தெரியாமலோ ஹேக்கிங் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்காக சில அமைப்புகளும், சில நெட்வொர்க்குகளும் சில நாடுகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் முக்கிய குறிக்கோள் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பததுதான். அவற்றில் சில முயற்சிகள் வெற்றியும் பெற்றுள்ளன. சில முயற்சிகள் தோல்வியிலும் முடிந்துள்ளன.

இப்போது உலக நாடுகளுக்கு ஹேக்கர்களால் புதிய தொல்லை ஆரம்பமாகியுள்ளது. ஆம், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் அமெரிக்காவிலுள்ள 12 அணுஉலைகளை ஹேக்கர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். இனி எந்நேரமும் அணு உலை ஹேக்கர்களின் கைகளுக்கு வந்துவிடலாம். ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து அழிப்பதை விட இந்த முறையில் அணுஉலைகளைத் தன் வசம் கொண்டுவந்து வெடிக்கச் செய்தால் மிகப்பெரிய இழப்பை ஒரு நாடு சந்திக்கும். உலகின் எந்த மூலையிலும் இருந்து கொண்டு இந்தச் செயலைச் செய்யலாம். அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்குக் காரணம் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்தான் எனக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் நடத்தப்போகும் மெய் நிகர் தாக்குதலுக்கான பணிகளுக்கான ஆரம்பகட்ட செயல்தான் இது எனவும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஹேக்கிங்

இந்தச் செயல் நடைபெறுவது அணு உலைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கும், நெட்வொர்க் சிஸ்டத்துக்கும் தனியாக இருக்கும் அறையில்தான். அந்த அறையில்தான் அணுஉலை இயங்கக்கூடிய கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அந்தக் கட்டளைகளுக்கு ஏற்பத்தான் அணுஉலை செயல்படும். இதில் ஹேக்கர்கள் முதலில் வேலை செய்யும் விஞ்ஞானிகளைக் குறிவைத்து மெயில் அனுப்புவார்கள். அதன் மூலம்தான் கணினியை ஹேக் செய்வர். உதாரணமாக 100 டிகிரிக்கு மேல் அணுஉலையின் வெப்பம் இருக்கக் கூடாது என்றால் கணினி மூலமாகத்தான் அதற்கான கட்டளைகள் கொடுக்கப்படும். அந்தக் கணினிகளின் கட்டளையில் 100-க்கு பதில் 1000 டிகிரியாக மாற்றிவிட்டால், அணுஉலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடக் கூடும். நூதன முறையில் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் போர் என்றே இதனைச் சொல்லலாம். அப்படியானால் அமெரிக்கா எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர முடியும். இனி அந்த 12 அணு உலைகளிலும் ஹேக்கர்கள் வைத்ததுதான் சட்டம். இதனைத் தடுக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கூடங்குளம்

இதேபோல 2015-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் ஹேக்கர்கள் மூலம் ஊடுருவி, அந்த நாடு முழுவதும் மின்சார விநியோகத்தைச் சீர்குலைத்தது, ரஷ்யா. ஹேக்கிங் விஷயத்தில் அமெரிக்காவும் சளைத்தது அல்ல. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் அணுசக்தி திட்ட கணினிகளை "stuxnet" என்ற வைரஸ் மூலம் ஊடுருவி பெரிய விபத்தை ஏற்படுத்தின. ஊடுருவிய வைரஸ்கள் அணு சக்தியின் சென்டிரிஃபியூஜ் குழாய்களை, எப்போதும் சுற்றுவதை விட அதிக வேகத்தில் சுற்றவைத்து உலைகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. ஆனால் இப்போது அமெரிக்காவே என்ன செய்வது எனத் தெரியாமல் போராடி வரும் சூழல் இருக்கும்போது, இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்கும் என்பது நிச்சயம். நம் நாட்டில் இருக்கும் அணுஉலைகளால் இவ்வளவு நாள் சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை வள அழிப்பு, சுனாமி எனப் பல பாதிப்புகள் இருக்கும்போது, ஹேக்கிங் அதை விடப் பெரிய பாதிப்பாக இருக்கும். நம் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுஉலையில் மேலும் புதிய யூனிட்களும் திறக்கப்பட உள்ளன. இப்போது இந்திய அரசு கொண்டு வந்த இந்த அணுஉலையை எப்படி பாதுகாக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறிதான். ஏனெனில் இது தீவிரவாதம், ஆயுதம், அணுகுண்டுகள் என ஏதும் இல்லாமல் நடத்தப்படும் ஒரு 'சைபர் அட்டாக்'தான். ஆனால் இதன் விளைவு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியா இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close