வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (14/07/2017)

கடைசி தொடர்பு:19:08 (14/07/2017)

”மத்திய அரசு நியமித்த எம்.எல்.ஏக்கள் நாங்கள் தான்” - தொடரும் புதுச்சேரி கலாட்டா

புதுச்சேரி

புதுச்சேரியில் பி.ஜே.பி. நிர்வாகிகள் எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் வேறுசிலர், "மத்திய அரசு பரிந்துரை செய்தது எங்களைத்தான். அதனால் எங்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வையுங்கள்” என்று சொல்லி மனு அளித்தனர். இதற்கு பி.ஜே.பி மாநிலத் தலைவர் சாமிநாதன் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரை இல்லாமல், மாநில பி.ஜே.பி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் தனியார் பள்ளியின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை புதுச்சேரி சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏ-க்களாக நியமித்து ஜூலை 3-ம் தேதி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அதற்கான உத்தரவு நகலை ஆளுநர் மாளிகையில் பெற்றுக்கொண்ட இந்த மூவரும் மறுநாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தைச் சந்தித்து தங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படிக் கூறினர். ஆனால், “மத்திய அரசின் இந்த உத்தரவில் மூன்று பேரின் பெயர்கள் மட்டுமே இருக்கின்றதே தவிர, அவர்களின் பெற்றோர் பெயர், விலாசம் உள்ளிட்ட எந்த விவரமும் இடம்பெற்றிருக்கவில்லை. அதனால் பதவிப்பிரமாணம் செய்துவைக்க முடியாது" என்று சபாநாயகர் மறுத்துவிட்டார். அவர்கள் மூவருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ரகசியமாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றச் செயலரைச் சந்தித்து சட்டமன்றத்தில் தங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கச் சொல்லி மனு அளித்தனர். ஆனால், "சபாநாயகர் இல்லாததால் அவர் வந்ததும் தெரிவிக்கிறேன்" என்று மனுவைப் பெற்றுக்கொண்டார் செயலர். 

இந்நிலையில், சாமிநாதன், சங்கர், செல்வகணபதி என்ற பெயர்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் சட்டமன்றச் செயலரிடம் அளித்தக் கடிதத்தில், தங்களைத்தான் எம்.எல்.ஏ-க்களாக நியமித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியிருக்கிறது என்றும், தங்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படியும் மனு அளித்து கலகலப்பூட்டினர்.

இந்நிலையில், இன்று மீண்டும் சட்டமன்றச் செயலர் வின்சென்ட் ராயரைச் சந்தித்த பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள் மூவரும் தங்களுக்கு இருக்கைகளும், அலுவலகமும் ஒதுக்கச் சொல்லி மனு அளித்தனர். அப்போது, "எங்கள் மூவரைத்தான் மத்திய அரசு எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது. ஆனால், எங்கள் பெயர்களைக் கொண்ட வேறுசிலர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி கொடுத்த மனுவை நீங்கள் எப்படிப் பெறலாம்? எங்கள் மூவருக்கும் இனிஷியல் வேறுபாடு இருக்கின்றது. அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் மனுவைப் பெறலாம்? யார் வந்து அளித்தாலும் மனுவைப் பெற்றுக் கொள்வீர்களா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். 

அதற்கு சட்டசபை செயலர், "யார் மனு கொடுத்தாலும் பெற்றுக்கொள்வோம். ஆனால், அதைப் பரிசீலனை செய்தபிறகே நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஜே.பி புதுச்சேரி மாநிலத் தலைவரும், நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான சாமிநாதன், "துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் ஆளும் காங்கிரஸ் அரசு மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றது. இது, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எப்போதும் துணைநிற்கும். மத்திய அரசின் நியமன எம்.எல்.ஏ-க்கள் நாங்கள்தான் என்று கூறி, போலி நபர்கள் சிலர் மனு அளித்திருக்கின்றனர். மத்திய அரசின் உத்தரவை அவமதித்த அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்