இந்தியா - சீனா எல்லை விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவு!

இந்தியா - சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் எனத் தேசிய எதிர்க்கட்சிகள் ஒருமித்தமாக  தெரிவித்துள்ளன.

இந்தியா- சீனா எல்லை

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத் தொடர்ந்து, இருநாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மத்திய அரசின் சார்பில் கலந்துகொண்டனர். இதேபோல் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து சீத்தாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியிலிருந்து முலாயம் சிங், இன்னும் பல கட்சித்தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் சிக்கிம் எல்லை விவகாரம் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் சீன விவகாரத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!