வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (17/07/2017)

கடைசி தொடர்பு:14:11 (17/07/2017)

இரண்டே மணிநேரத்தில் தமிழகத்தில் நிறைவடைந்த வாக்குப்பதிவு

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், நாடு முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது.


நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், ஆளும் பா.ஜ,க.சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில், மீரா குமார் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடிவடைந்து இன்று தேர்தல் நடைபெற்றது. காலை சரியாக பத்து மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, இரண்டே மணிநேரத்தில் நிறைவடைந்தது. மொத்தம் 234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டசபையில் திமுக தலைவர் மு. கருணாநிதி ஓட்டுப் போட வரவில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி கருணாநிதி வாக்களிக்க வரமாட்டார் என்று செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியில் மறுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அந்த இடம் காலியாக உள்ளது. மீதம் இருக்கும் 232  உறுப்பினர்களும் காலையிலேயே வாக்களிக்க வந்துவிட்டதால் இரண்டே மணிநேரத்தில் தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

தமிழக எம்எல்ஏ-க்கள் தவிர கேரளா எம்எல்ஏ., அப்துல்லா மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்னைத் தலைமைச் செயலகத்தில்தான் வாக்களித்தனர். அவர்களுடன் சேர்த்து மொத்தமாக 234 பேர் வாக்களித்துள்ளனர்.