வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (29/07/2012)

கடைசி தொடர்பு:08:33 (29/07/2012)

செல்போன் கோபுர,மொபைல் போன் கதிர்வீச்சை குறைக்க உத்தரவு!

புதுடெல்லி: செல்போன் கோபுர மின்காந்த கதிர்வீச்சு செப்டம்பர் 1-ம் தேதி முதல் குறைக்கவும்,மொபைல் போன் கதிர்வீச்சினை 50 சதவீதம் குறைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் செல்போன் நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வீடுகளின் மொட்டை மாடி, குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சால் பொதுமக்களுக்கு புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த நிலையில்,நாடு முழுவதும் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு அளவை 10-ல் ஒரு பங்கு குறைக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 1-ம்  தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிமுறையின்படி, ஒவ்வொரு செல்போன் நிறுவனமும், அதன் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சு அளவை 10-ல் ஒரு பங்கு குறைக்க வேண்டும்.

செல்போன் சேவை பாதிக்கும்

"இந்த புதிய விதிமுறைக்கு செல்போன் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய முறை அமல்படுத்தப்பட்டால், நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கமான பகுதிகளில் செல்போன் கோபுரங்களின் சக்தி குறையும். அதாவது, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு அளவை குறைக்கும்போது, செல்போன் கோபுரங்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு, அந்த பகுதியில் செல்போன்கள் வேலை செய்யாமல் போகும். அதனால் செல்போன் சேவை பெரிதும் பாதிக்கும்.

அதாவது, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளபடி, பொதுமக்களுக்கு தரமான செல்போன் இணைப்பு சேவையை வழங்க முடியாமல் போய்விடும். எனவே, புதிய விதிமுறையை அமல்படுத்த வேண்டாம்" என்று செல்போன் நிறுவனங்களின் சங்கமும், ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும், மத்திய தொலைத்தொடர்பு துறையை கேட்டுக் கொண்டுள்ளன.

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க, மத்திய தொலைத்தொடர்பு துறை மறுத்துவிட்டது.

மொத்த செல்போன் கோபுரங்களில் 5 சதவீத கோபுரங்களில் மட்டுமே அதிகளவு மின்காந்த கதிர்வீச்சு வெளியாகிறது என்று சமீபத்தில் மத்திய தொலைத் தொடர்பு துறையின் தொழில்நுட்பப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அதனால், அந்த 5 சதவீத செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் அதிக மின்காந்த கதிர்வீச்சை குறைப்பதுடன்,அதனால் ஏற்படுவதாகக் கூறப்படும் செல்போன் சேவை பாதிப்பினை தற்போதைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சரி செய்துவிட முடியும் என்றும் மத்திய தொலைத் தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, செல்போன் சேவையை அதிகரிக்க வேண்டியதிருந்தாலும், பொதுமக்களின் உடல் ஆரோக்கியமும், பாதுகாப்பும் அதைவிட முக்கியம் என்பதால், இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று செல்போன் நிறுவனங்களிடம் மத்திய அரசு திட்டவட்டாக கூறிவிட்டது.

செல்போன் கதிர்வீச்சு 50 சதவீதமாக குறைப்பு


செல்போன் கோபுரத்தைப் போல, மொபைல் போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சை தற்போதைய அளவில் இருந்து 50 சதவீதமாக குறைக்கவும் மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு செல்போனிலும், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவு எவ்வளவு என்பதை செல்போன் திரையில் காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இந்த உத்தரவை, நடைமுறைப்படுத்த தங்களுக்கு ஓராண்டு காலஅவகாசம் வேண்டும் என்று நோக்கியா, சாம்சங் போன்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தங்கள் நிறுவனம், தற்போதைய மின்காந்த கதிர்வீச்சுக்கு ஏற்றவாறு ஏராளமான செல்போன்களை தயாரித்து விற்பனை செய்துள்ளதால், புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த தங்களுக்கு கூடுதல் காலஅவகாசம் தேவைப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்