வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (18/07/2017)

கடைசி தொடர்பு:13:49 (18/07/2017)

'குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லை...' : பிரதமரிடம் புகார் அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் குரங்குகளின் தொல்லை தாங்கமுடியவில்லை என மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

எய்ம்ஸ்

நாய்கள் மற்றும் குரங்குகளிடம் இருந்து மருத்துவர்களையும் மாணவர்களையும் பாதுகாக்க வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர் மருத்துவர்கள். டெல்லி மருத்துவர்கள் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘குரங்குகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவர்களும் மாணவர்களும் உடல் அளவிலும் மனதளவிலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நோயாளிகள் பலரையும் குரங்குகள் கடித்து வைத்துவிடுகின்றன. தெரு நாய்களை எப்படி வளாகத்துக்குள் இருந்து விரட்டுவது எனத் தெரியவில்லை’ என்றுள்ளனர்.

மேலும், ’இந்தப் புகார் கடிதத்தை இறுதியாக, கடைசிகட்ட முயற்சியாக உங்களுக்கு அனுப்பியுள்ளோம். பலவாறு முயற்சி செய்தாகிவிட்டது. ஆனாலும், தெரு நாய்கள் மற்றும் குரங்குகளின் தொல்லையால் டெல்லி எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள அனைவரும் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளோம், நம்பிக்கையிழந்து இறுதியாக உங்களிடம் உதவி கேட்கிறோம்’ என மருத்துவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.