வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (18/07/2017)

கடைசி தொடர்பு:17:46 (18/07/2017)

கர்நாடக மாநிலத்துக்குத் தனிக் கொடி? சித்தராமையா புதுக் குழு அறிவிப்பு

கர்நாடக மாநிலத்துக்கென்று தனிக் கொடி உருவாக்குவதற்கு, ஒன்பது பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையா அமைத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்துக்கென்று தனிக் கொடி உருவாக்க வேண்டுமென்று, கர்நாடக அமைப்புகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்துவந்தன. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்துக்குத் தனிக் கொடி அமைப்பது தொடர்பாக, ஒன்பது பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையா  அமைத்துள்ளார். அந்தக் குழுவுக்கு, கர்நாடக கலாசாரத்துறை முதன்மைச் செயலாளர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநிலத்துக்கென்று தனிக் கொடி அமைப்பதில் ஏதேனும் சட்டச் சிக்கல் உள்ளதா, அரசியலைமைப்புச் சட்டம் அதைத் தடைசெய்கிறதா என்பதை ஆய்வுசெய்வதற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, 2012-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்  காலத்தின்போது, கர்நாடக மாநிலத்துக்கென்று பிரத்யேகமாக மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடி உருவாக்கியிருந்தது. ஆனால், 'மாநிலத்துக்குத் தனிக் கொடி உருவாக்குவது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது' என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்தியாவில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் பிரத்யேகமான கொடி உள்ளது. ஆர்ட்டிக்கல் 370-ல் அளித்துள்ள உரிமையின் அடிப்படையில், அந்தக் கொடி பயன்பாட்டில் உள்ளது.