50 வயது ராஜ்தூத் பைக்கை 5 லட்ச ரூபாய்க்கும் விற்க மறுத்த காதலர்! | Offered Rs. 5 lakh for a 50-year-old bike, owner refuses to sell

வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (20/07/2017)

கடைசி தொடர்பு:08:06 (20/07/2017)

50 வயது ராஜ்தூத் பைக்கை 5 லட்ச ரூபாய்க்கும் விற்க மறுத்த காதலர்!

சில விஷயங்களைக் காசு கொடுத்தாலும் வாங்கிவிட முடியாது என்பதற்கு உதாரணமாக,  ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கேட்டும் ராஜ்தூத் பைக்கை விற்க மறுத்துள்ளார் ஒருவர். 

    அழகிய ராஜ்தூத் ரக பைக்

அந்தக் காலத்தில் `பாபி ' என்ற இந்திப் படம் மிகவும் பிரபலம். இந்தப் படத்தைப் பார்க்க தமிழ்நாட்டு ரசிகர்களும் ஏங்கிய காலம் அது. நடிகை டிம்பிள் கபாடியா குட்டைப் பாவாடை அணிந்து நடித்த படம். இவரின் கவர்ச்சியால், படத்தில் வந்த மோட்டார் சைக்கிளும் படு ஃபேமஸாகி சாலையை ஆக்கிரமித்தது. `பாபி ' படத்தில் ஹீரோ ரிஷிகபூரும் டிம்பிள் கபாடியாவும் பைக்கில் காடு மேடாகச் சுற்றுவார்கள். `ஹம் தும் ஏக்கு கம்ரோமே பந்து ஹோ...' என்றெல்லாம் பாடுவார்கள். அந்த பைக்தான் ராஜ்தூத் ஓடிஎஸ் 175. அப்போது, இதற்குப் பெயரே `பாபி' பைக்தான்!

டூ வீலர்களில் எப்போதுமே ராயல் என்ஃபீல்டுதான் கிங். இதற்குப் போட்டியாக எந்த டூ வீலரும் இந்தியாவில் எந்தக் காலத்திலும் இல்லை. அந்த ராயல் என்ஃபீல்டுக்கே கொஞ்ச காலம் லந்து கொடுத்தது இந்த ராஜ்தூத். இந்திய இளைஞர்களின் மனதைக் கொள்ளைகொண்ட இந்த பைக், பழையன கழிதலும் வகையில் கழிந்துபோனது. ஆனாலும், இத்தகைய வண்டிகள் மீது காதல்கொண்டு அலைபவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்!

கேரள மாநிலம் கொட்டராக்காராவைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவரும் `பாபி' காலத்து ஆள்தான். பழைய மாடல் ராஜ்தூத் ஓ.டி.எஸ் பைக் ஒன்று இவரிடம் இருக்கிறது. பைக்கின் வயதைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள், தற்போது 50 வயதாகும் அந்த பைக், இப்போதும் கொட்டாராக்காரா சாலைகளில் சுர்... புர்... என ஓடிக்கொண்டிருக்கிறது. 1968-ம் ஆண்டு மாடல் இது. ஆயிரம் டூ வீலர் மாடல்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருந்தாலும், அலெக்ஸின் காதல் இதன் மீதுதான். குழந்தை மாதிரிதான் இந்த பைக்கை அலெக்ஸ் பராமரித்துவருகிறார். 

தன் ராஜ்தூத் பைக்குடன் அலெக்ஸ்

அலெக்ஸ் மட்டுமல்ல, இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியிடம்கூட இதே ராஜ்தூத் ரக பைக் இருக்கிறது. ஒருமுறை, இந்த பைக்கைப் பிரித்துப் போட்டுவிட்டு, மீண்டும் `அசெம்பிள்' பண்ண முடியாமல் தோனி தவித்த கதையும் நடந்திருக்கிறது. சரி... அலெக்ஸ் வைத்திருக்கும் இந்த ராஜ்தூத் பைக்கில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? இந்த பைக்கை ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க அலெக்ஸின் வீட்டுக்கு ஒருவர் நடையாய் நடந்திருக்கிறார். `நீங்க ஒரு கோடி கொடுத்தால்கூட இந்த பைக்கைத் தர முடியாது' என அலெக்ஸ் கறாராகச் சொல்லிவிட, ஏமாற்றத்துடன் சென்றிருக்கிறார் அந்த மனிதர்.

 

``என்கூட பிறந்த பொறப்புபோல இதை நான் பார்க்கிறேன். இந்த வண்டியில போகும்போது எனக்கே பெருமையா இருக்கும். ரோட்டுல புதுசு புதுசா  டூ வீலர் போனாலும், நம்ம வண்டிக்குத்தான் கெத்து. காசு இருந்தா பென்ஸ் கார்கூட வாங்கி ஓட்டிப்பார்க்கலாம். ஆனா, இப்போ இந்த மாதிரி பைக்குல கோடி ரூபா கொடுத்தாலும் போக முடியுமா? பென்ஸ் கார்ல வந்துகூட ஒருத்தர் இந்த பைக்கைக் கேட்டுப்பார்த்தார். அவருக்கும் `நோ ' சொல்லிட்டேன்'' எனக் கூறும் அலெக்ஸ், யாராவது ஓட்டிப்பார்க்கக் கேட்டால் மட்டும் உடனே கொடுத்துவிடுகிறார். ``அடுத்தவங்களோட சின்னச் சின்ன ஆசைக்குத் தடையா இருக்கக் கூடாது'' என்றும் காரணம் சொல்கிறார். 

கொட்டாரக்காராவில் இந்த ப்ளு கலர் ராஜ்தூத் பைக்தான் அலெக்ஸின் அடையாளம். ஹெட்லைட்டின் மேல் சாவித் துவாரம். இன்ஜினிலிருந்து புறப்படும் தட்டையான சைலென்ஸருடன் அழகுற ஓடும் 50 வயது ராஜ்தூத்தில் கம்பீரமாக வலம்வருகிறார் அவர்.

காசு கொடுத்து, காதலை வாங்கிவிட முடியுமா?

Credits : Mathrubhumi News

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்