Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"நீங்களும் கைவிட்டுவிட்டீரே...!'' மோடியை குற்றஞ்சாட்டும் கமல்

கமலை சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

த்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்பது ஆச்சர்யப்படக் கூடிய செய்தியில்லை. ஆனால், நடிகர் கமல் விமர்சிக்கிறார் என்றால், அது சற்று ஆச்சர்யமான ஒன்றுதான். தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான அ.தி.மு.க-வை வறுத்தெடுக்கும் அளவுக்குக்கூட மத்திய அரசை பொதுவாக அவர் எதிர்த்ததில்லை. பிரதமர் மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்தபோது, முதல் ஆளாக ஆதரவு தெரிவித்து, அத்திட்டத்துக்குத் தூதுவரானவர் கமல். ஆனால், அப்படிப்பட்ட கமல், ஒரு முக்கிய நிகழ்வுக்காக தன்னைச் சந்திக்கவந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம், மத்திய பி.ஜே.பி அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் என்பது உண்மையிலேயே ஆச்சர்யத்துக்குரிய ஒன்று. 'அவர் அப்படி என்னதான் விமர்சித்தார்?' என்று பார்ப்பதற்குமுன், அந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்குகிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா.
 

நடிகை ரோஹிணியை சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தினர்

"பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு நிறைவடைந்து விட்டது. மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல காரணங்களால் இதுவரை நாடு முழுவதும் 28 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இஸ்லாமியர்கள், தலித் மக்களை குறிவைத்துத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. பல்வேறு மொழி, பண்பாடு, கலாசாரங்களைக் கொண்டதே 'இந்தியா'. அப்பேற்பட்ட பன்முகத்தன்மையே நம் நாட்டின் அழகு. இந்தியாவுக்கு சுதந்திரமும் பல்வேறு பிரிவினர், பண்பாடு கொண்ட மக்கள் இணைந்து போராடியதால் கிடைத்தது. ஆனால், தற்போது பி.ஜே.பி ஆட்சியில் இந்துத்துவ மதவாதம் தூண்டிவிடப்படுகிறது. எப்படி பிரிட்டிஷ் ஆட்சி பல பிரிவினை சூழ்ச்சிகளை நிகழ்த்தி, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்ததோ, அதுபோல் மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்கிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி. இந்திய மக்களிடையே, அண்மைக்காலமாக மதவெறி தூண்டப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் இந்திய மக்கள்  பாதுகாப்பற்றதொரு சூழலிலேயே வாழ்கிறார்கள். இந்தநிலையை மாற்ற, மக்கள் ஒற்றுமையுடன் வாழ, மனிதநேயம் தழைக்கச் செய்யும் நோக்கில் "மதவெறி மாய்ப்போம்" என்று ஒரு இயக்கம் நடத்தினோம். இந்தியளவில் மதவெறிக்கு எதிரான பிரசாரத்தை ஜூலை 5 முதல் 12-ம் தேதிவரை நடத்தினோம். இதில், நாடு முழுக்க மதவாதத்துக்கு எதிராகவும், பி.ஜே.பி ஆட்சியில் பறிபோகும் கருத்துச் சுதந்திரம், உணவு பண்பாட்டில் கைவைக்கும் அரசின் எதேச்சதிகாரம் போன்றவற்றை எதிர்த்து மனு ஒன்றைத் தயாரித்தோம். இந்தப் பிரச்னைகளில் இருந்து மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிகை குரல் அந்த மனுவில் ஒலிக்கச் செய்தோம். இந்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த முயற்சிக்கு ஆதரவுகேட்டு திரைக்கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்தோம். பாடகர் டி.எம் கிருஷ்ணா, நடிகை ரோகிணி, நடிகர் கமல் ஆகியோரைச் சந்தித்தோம்.

டி.எம் கிருஷ்ணாவை  சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தினர்

தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கொடுக்க இருக்கும் மனுவை கமலிடம் கொடுக்க, அதை அவர் முறைப்படி வெளியிட்டார். இந்தச் சந்திப்பின்போது, கமல் எங்களுடன் மனம்விட்டுப் பேசினார். மத்திய பி.ஜே.பி ஆட்சியின் மீதான தனது விமர்சனங்களை அவர் முன் வைத்தார். 'இஸ்ரேலுக்குப் பயணம் செய்த நம்ம பிரதமர் மோடி, பாலஸ்தீன மக்கள் மீதும், குறிப்பாக குழந்தைகள் மீதும் கடுமையான தாக்குதல் நிகழ்த்தும் இஸ்ரேல் அரசின் வன்முறை குறித்துப் பேசாதது வருத்தத்துக்குரியது. பாலஸ்தீனத்தை இந்தியாவும்கைவிட்டு விட்டதே' என்று தெரிவித்து கமல் அப்போது வேதனைப்பட்டார். மேலும் அவர், 'சங் பரிவார அமைப்புகள் நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளாக அவர்கள் முயற்சித்து வந்ததற்கான பலனை தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபக்கம் ஏகாதிபத்தியத்தை நோக்கி, சார்புத்தன்மையோடு இந்த ஆட்சி பயணிக்கிறது. இது, மேலும் ஆபத்தையே விளைவிக்கும். இந்தத் தீமைக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் முன்னிற்க வேண்டும். இளைஞர்கள் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன்' என்றார் உணர்வுபூர்வமாக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் குறித்த அவரின் உற்சாகமான நினைவுகளையும் கமல் எங்களுடன் அப்போது பகிர்ந்துகொண்டார். நியாயமான விஷயங்களுக்காக கமல் போன்ற திறமையான கலைஞர்கள் குரல் கொடுக்கும்போது, அதற்கு கூடுதல் அழுத்தம் கிடைக்கிறது. தீர்வை நோக்கிய பயணத்தின் வேகத்தையும் அது கூட்டுகிறது" என்றார் பாலா மிகுந்த எதிர்பார்ப்போடு.

மக்களுக்கான குரலை ஒலிக்கும் கலையும், கலைஞர்களும் வரலாற்றில் நிச்சயம் பேசப்படுவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close