Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“இந்தியாவில் 11,400 விவசாயிகள் தற்கொலை!” - மத்திய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்

விவசாயிகள் தற்கொலை பற்றி ராதா மோகன் சிங் சொன்னது

நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்ற முடியாமலும் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா விவசாயிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்தது.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்திவருகிறார்கள். பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாய சங்கத்தினரும் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகள் 

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் எம்.பி-யான ஜோதிராதித்ய சிந்தியா விவசாயிகள் பிரச்னை தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். ‘விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்’ எனப் பேசினார். 

இதற்குப் பதில் அளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சரான ராதாமோகன் சிங், ''2016-ம் ஆண்டுக்கான தேசிய குற்றப் புள்ளிவிவர அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாக இருக்கும் அந்தப் புள்ளிவிவர அறிக்கையின்படி, 2016-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 2015-ம் ஆண்டில் 12,602 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க வேண்டுமானால், அவர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான அளவுக்கு பொருளாதார நிலை மேம்பட வேண்டும்.  அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்காக மத்திய பட்ஜெட்டில் விவசாயத் தேவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2014 தேர்தலுக்குப் பின்னர் விவசாயிகளின் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையானது முன்பு இருந்ததை விடவும் 1.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 

விவசாயிகள்

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு 3,560 கோடி ரூபாய் பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன், 3,548 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 2015-2016-ம் ஆண்டுக்கான பிரீமியமாக விவசாயிகளிடமிருந்து 3,760 கோடி ரூபாய் பெறப்பட்ட நிலையில், 4,710 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.  இந்த நிலையில், பயிர்க்காப்பீடு தொடர்பாக தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்காணிக்க, விண்வெளித் திட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க உள்ளோம். 

அத்துடன், மாநில அரசுகள் தாங்களாகவே காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்தி விவாசாயிகளுக்கு உதவலாம். அதன் மூலமாக விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும். பஞ்சாப், குஜராத் மாநில அரசுகள் தாங்களாகவே காப்பீட்டு நிறுவனம் அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அதனைப் பின்பற்றி அனைத்து அரசுகளும் காப்பீட்டு நிறுவனம் அமைக்குமாறு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் தனியார் நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். இந்தக் கடன் விவகாரத்தால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை உருவாகிறது. அதனால் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்காக இந்த ஆண்டு, 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், கூட்டு விவசாய முறை, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகள் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close