வெளியிடப்பட்ட நேரம்: 08:49 (25/07/2017)

கடைசி தொடர்பு:12:37 (26/07/2017)

“சாதாரண வேலை கிடைத்தாலே இரவில் நிம்மதியாக இருப்பார்கள்!” - நீதிபதியான திருங்கையின் கோரிக்கை

 

ல்வி, பொருளாதாரம், சமூகச்சூழல் என அனைத்தும் கிடைத்து சாதிப்பவர்களைவிட, இந்தச் சமுதாயத்தில் எதுவுமே கிடைக்காமல் சாதித்து இலக்கணம் படைக்கும்  மனிதர்களைப் பற்றிப் பேசுவதில்தான் இங்கு "சாதனை", என்ற சொல் பெருமையும் அர்த்தமும் கொள்கிறது . அப்படிப்பட்ட ஒருவர்தான் "ஜோயிதா மோண்டல் ". இவர் ஒரு திருநங்கை. பல பிரச்னைகளையும், தடைகளையும் கடந்து மேற்குவங்க மாநில லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே திருநங்கை ஒருவர், நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. 

ஜோயிதா மோண்டல் -திருநங்கை

அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு முக்கியக்காரணம், அவர் மேற்குவங்கத்தில் மேற்கொண்ட சமூகப் பணிகள்தான் என்று அவரின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவரான ஜோயிதா, கடந்த 2009-ம் ஆண்டில் ரயிலில் பயணம் செய்தபோது போகும் இடம் தெரியாமல் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரில் இறங்கியுள்ளார். தனித்து விடப்பட்ட ஜோயிதா, உறவுகளோ, உடைகளோ இல்லாமல் வலிகளையே வாழ்க்கையாகக் கடந்துவந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கேயே சிலகாலம் இருந்தவர், அங்குள்ள திருநங்கைகளை ஒன்று திரட்டி, சங்கம் ஒன்றை தொடங்கினார். இச்சங்கத்தின் மூலம் அங்குள்ள திருநங்கைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஜோயிதாவை பொறுப்புகள் தானாகத் தேடி வந்துள்ளன. சமூக அக்கறையுள்ள  செயல்களில் ஈடுபடுவோருக்கு லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. அந்த அடிப்படையில் ஜோயிதாவை லோக் அதாலத் நீதிபதியாக நியமித்துள்ளனர். நீதிபதியாக பதவி ஏற்றுள்ள அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. நீதிபதியாகி உள்ள ஜோயிதாவின் செயல்பாடுகளையும், தனித்திறமைகளையும் அவரது நண்பர்கள் சமுக வலைதளங்களில் சிலாகித்து எழுதி வருகின்றனர்.

 

ஜோயிதா

நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜோயிதா, "சமூக சேவையாற்றியதற்காக எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளனர். இந்தப் பதவியை நான் பெறுவதற்கான வழிவகைகள் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலான வழக்குகளை நான் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அதுமட்டுமன்றி, சில பிரச்னைகளுக்கு நடவடிக்கைகளின் மூலம் தீர்வு ஏற்படச் செய்துள்ளேன். போக்குவரத்துச் செலவுக்கு கௌரவ ஊதியமாக மாதம் 1,500 ரூபாய் தரப்படுகிறது. இதைவிட இந்தப் பதவியால் கிடைக்கும் பெருமைதான் முக்கியம். மாதத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோதான் லோக் அதாலத் கூடும். எனவே, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கான எனது வழக்கமான சமூகப் பணிகள் எதுவும் பாதிக்காது. தொடர்ந்து என் பணிகளில் கவனம் செலுத்துவேன். திருநங்கைகளில் வாழ்வு மேம்படும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் இருக்கும். என்றாலும், என் போன்ற சிலரால் மட்டுமே அவர்களுக்கான முழுமையான முன்னேற்றத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே, திருநங்கைகள் வாழ்வில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கம்தான். அவர்களுக்கு அரசுத்துறைகளில் பணி வழங்கவேண்டும். திருநங்கைகளைப் பொறுத்தவரை, சாதாரணமாக ஒரு வேலை கிடைத்தால் போதும். அவர்கள் இரவில் நிம்மதியாக இருப்பார்கள்" என்றார்.

 

ஜோயிதா

திருநங்கை தோழி ஒருவர் பகிர்ந்த வலிதான் நம் நினைவுக்கு வருகிறது. "வாடகைக்கு வீடு தேடி அலைந்திருக்கிறேன். என்னால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கமுடியவில்லை. கடைசியில் என்னுடைய  நண்பர்களின் அறையைப் பகிர்ந்துகொண்டு படித்து வேலைக்குச் சென்றேன்" என்று அழுகையுடன் கூறிய அந்தத் தோழியின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. 

இதுபோன்ற சகோதரிகளை சமூகத்தின் அவலமான பார்வையில் இருந்து விடுவிக்க, ஒரு ஜோயிதா மோண்டல் போதாது. ஓராயிரம் ஜோயிதா மோண்டல்கள் தேவை என்பதே நிதர்சனம். வாழ்வில் அவர்களும் ஏற்றம்பெற வழிவிடுவோம்...!


டிரெண்டிங் @ விகடன்