இந்திய ரயில்வேயை பலப்படுத்தப் போகும் சூரிய சக்தி... ஒரு புள்ளி விவரம்! | Gains from Solar Powered Trains in India

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (25/07/2017)

கடைசி தொடர்பு:15:15 (25/07/2017)

இந்திய ரயில்வேயை பலப்படுத்தப் போகும் சூரிய சக்தி... ஒரு புள்ளி விவரம்!

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான டீசல் ரயில் இன்ஜின்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றை இயக்க, டீசலுக்காக பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. அதோடு, கரியமில வாயுவையும் டீசல் இன்ஜின்கள் அதிகளவு வெளியிடுகின்றன. ரயில்வேத் துறையின் மொத்த செலவில் எரிபொருளுக்காக மட்டும் 26. 16 சதவிகிதம் செலவிடப்படுகிறது. அதில், 14.72 சதவிகிதம் டீசலுக்காகவும் 9.44 சதவிகிதம் மின்சாரத்துக்கும் செலவாகிறது. 2014-15-ம் ஆண்டு மட்டும் ரூ. 22 ஆயிரத்து 716 கோடிக்கு டீசல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2.6 பில்லியன் லிட்டர் டீசல் வாங்கப்பட்டுள்ளது.

train

எரிபொருள் செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுவைக் குறைக்கும் வகையில், சூரிய ஒளியில் இயங்கும் ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த இன்ஜின்கள் 1,600 குதிரைத் திறன் கொண்டவை. சென்னையில் உள்ள இந்தியன் கோச் ஃபேக்டரியில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்படுவதற்கு ஏற்ற வகையில் ரயில்வே பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சூரிய ஒளி ரயில் ஒன்றால் ஆண்டுக்கு 21 ஆயிரம் லிட்டர் டீசல் செலவு தவிர்க்கப்படும். டீசல் ரயில் ஆண்டுக்கு 9 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது. அதுவே, சூரிய ஒளி சக்தி ரயில்களாக மாறும்போது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகிறது.

புதியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி ரயில் பெட்டியில் 89 பேர் பயணிக்க முடியும். ஒவ்வோர் பெட்டியின் மேலும் 16 சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொருத் தகடும் நாள் ஒன்றுக்கு 300 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்படும் வகையில் ரயில் பெட்டியைத்  தயாரிக்க ஒரு கோடி ரூபாய் செலவாகும். ரயிலின் முன்னும் பின்னும் பேட்டரி பொருத்திய இரு பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். இவை உற்பத்தியாகும் சூரிய சக்தியை சேமித்து வைக்கும். இரவு நேரங்களில் அல்லது சூரிய ஒளி சக்தி கிடைக்காத போது, இன்ஜின் பேட்டரி சக்தியைக் கொண்டு இயங்கும். பேட்டரி கொண்ட பெட்டிகளைத் தயாரிக்க இரண்டரை கோடி வரை செலவாகியுள்ளது. 

Solar train

சூரிய ஒளி பெட்டி  ஒன்று ஆண்டுக்கு 7,452 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும். இது, 1,862 லிட்டர் டீசலுக்கு சமம். நாடு முழுவதும் ஓடும்  63,511 பெட்டிகளில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்படுகையில், 43 கோடியே 31 லட்சத்து 45 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகும். இதன் மூலம் ஆண்டுக்கு 10 கோடியே 84 லட்சத்து 76 ஆயிரம் லிட்டர் டீசல் மிச்சமாவதோடு, 2 லட்சத்து 88 ஆயிரத்து 339 டன் கரியமில வாயு வெளியாவதும் தவிர்க்கப்படும்.

நாட்டின் முதல் சூரிய ஒளி ரயில் 22-ம் தேதி டெல்லியில் இருந்து ஹரியானாவில் உள்ள கார்கி ஹர்சார் நகருக்கிடையே ஓடத் தொடங்கியது. ஆறு மாதங்களில் மேலும் 4 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த ரயிலில் உள்ள லைட்டுகள், விசிறிகள் அனைத்துமே சூரிய சக்தியில்தான் இயங்கவுள்ளன. ஜேக்ஸ்ன் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் பெட்டிகளில் சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்தும் பணியை மேற்கொண்டது.  ரயிலின் வேகம் மணிக்கு 80 கி.மீ ஆகும். படிப்படியாக வேகமும் அதிகரிக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி எரிபொருள் செலவு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்