வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (26/07/2017)

கடைசி தொடர்பு:14:41 (26/07/2017)

'இனி விமான நிலைய விலைதான், ரயில்வேயிலும்!' - தாரைவார்க்கப்படும் சென்னை சென்ட்ரல்

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தை 45 வருடங்களுக்கு ரூ.350 கோடிக்கு தனியாருக்கு ஏலம் விடுவது எனத் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் ஊழியர்கள். ' இதனால் ரயில்வே துறைக்கு எந்தவித நிர்ணய உரிமையும் இல்லாமல் போய்விடும்' என எச்சரிக்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள். 

chennai central
 

நாட்டில் ‘ஏ-1’ மற்றும் ‘ஏ’ பிரிவுகளின்கீழ் மொத்தம் 407 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், முதல்கட்டமாக 23 ரயில் நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு ரயில்வே துறை தீர்மானித்துள்ளது. இதன்படி, தென்னக ரயில்வேயிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் கோழிக்கோடு ரயில் நிலையமும் தனியாருக்கு ஏலம் விடப்பட உள்ளது. கடந்த 24-ம் தேதி கோழிக்கோடு ரயில் நிலையத்தை ஏலம் விடுவது குறித்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் வருகிற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெண்டர் பிரிக்கப்பட உள்ளது.

தட்சின ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் உதவித் தலைவர் இளங்கோவன் கூறுகையில், " 45 வருட குத்தகை அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஏலம் விட உள்ளனர். இதனால், ரயில் நிலையத்தில் தூய்மை மற்றும் சுகாதாரம், வணிகக் கடைகள், பார்க்கிங் பகுதி, பராமரிப்பு, உணவு மற்றும் தண்ணீர் என அனைத்தையும் குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுதவிர, ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தில், மால் கட்டவும் முடிவு செய்துள்ளனர். தற்போதுள்ள மூர் மார்க்கெட் பகுதி முழுவதும் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளனர்" என ஆதங்கப்பட்டவர், " டெண்டருக்காக விண்ணப்பித்திருக்கும் தனியார் நிறுவனங்களின் முக்கியக் கோரிக்கை, உரிமை பிரச்னை. இதன்படி, ரயில் நிலையம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்,  ரயில்வே துறை எந்தவித உரிமையும் கோரக்கூடாது. உணவு, தண்ணீர், பார்க்கிங் என அனைத்துக்கும் குத்தகை எடுக்கும் தனியார் நிறுவனமே விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும். இதன் விளைவாக, இனி விமான நிலையங்களில் உள்ளது போலவே, ரயில் நிலையங்களிலும் பொருள்களில் விலை அதிகரிக்கும்" என்றார் வேதனையுடன்.