மாயாவதியின் ராஜினாமா பின்னணி என்ன? தொல்.திருமாவளவன் சொல்லும் காரணம் | Thol thirumavalavan cites this reason for mayawati's resignation

வெளியிடப்பட்ட நேரம்: 09:47 (27/07/2017)

கடைசி தொடர்பு:10:29 (27/07/2017)

மாயாவதியின் ராஜினாமா பின்னணி என்ன? தொல்.திருமாவளவன் சொல்லும் காரணம்

மாயாவதி

த்தரபிரதேச மாநிலம் Saharanpur-ல் தலித்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்து கடந்த 18-ம் தேதி மாநிலங்களவையில் உ.பி முன்னாள் முதல்வரும், எம்.பி-யுமான மாயாவதி பேசினார். தொடர்ந்து பேசுவதற்கு அவரை சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கொந்தளித்த மாயாவதி, "என்னை பேச அனுமதிக்காவிட்டால், நான் எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். நான் இப்போதே வந்து என்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளேன்" என்று கோபமாகப் பேசினார்.

இதனால், ஒட்டு மொத்த மாநிலங்களவையும் பரபரப்பு அடைந்தது. சொன்னதைப் போலவே மாயாவதி தமது எம்.பி பதவி ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை சபாநாயகர் ஹமீது அன்சாரிடம்  கொடுத்தார். மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று இரண்டு நாள்களாக குழப்பம் நீடித்தது. கடந்த 20-ம் தேதி மாயாவதியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி-யில் பி.ஜே.பி அரசின் ஆதரவோடு, ஆளும் கட்சியினர் தலித்களுக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Saharanpur-ல் கடந்த மே மாதத்தில் தக்கூர் (Thakur)சமூகத்துக்கும், தலித்களுக்கும் மோதல் வெடித்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவாகரம் குறித்துத்தான் மாயாவதி பேச முயன்றார்.  
இது போல உத்தரபிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தலித்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்றுதான் மாயாவதி தமது நியாயமான கோபத்தை மாநிலங்களவையில் வெளிப்படுத்தினார் என்கின்றனர்.

மாநில அரசியலில் கவனம்

மாயாவதியின் ராஜினாமா ஒரு நாடகம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவருடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முடிவடைகிறது. மீண்டும் பதவியில் தொடர வேண்டும் எனில் உ.பி சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் அல்லது சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் தேவை. மீண்டும்  எம்.பி- ஆக முடியாது என்பதால் இப்போது இருந்தே பி.ஜே.பி-க்கு எதிரான அரசியலை உ.பி-யில் முன்னெடுக்க வேண்டும் என்பதில் மாயாவதி உறுதியோடு இருக்கிறார் என்கிறார்கள்.  
வரும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உ.பி-யில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் மாயாவதியின் திட்டம். அதற்காக இப்போதிருந்து பி.ஜே.பி-க்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வலுப்படுத்தவேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்.   
தொடர் தோல்விகள்
2012-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி, 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தோல்வி, இப்போது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி என்று தொடர் தோல்விகளில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மாயாவதி மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியைத் தழுவிய போதிலும், அவரது கட்சிக்கு 22 சதவிகிதத்துக்கும் அதிகமான தலித் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. தலித் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்கின்றனர். எனவே, தலித் வாக்குகளைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் மாயாவதி உறுதியாக இருக்கிறார். இது தவிர, 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் உயர் ஜாதியினர் ஆதரவு இருந்ததால்தான் அதிக தொகுதிகளைப் பெற்று மாயாவதி ஆட்சியைப் பிடிக்க முடிந்ததாகச் சொல்கின்றனர். எனவே, வரும் லோக்சபா தேர்தலில் உயர்  ஜாதியினர் வாக்குகளைப் பிடிக்கவும் அவர் திட்டம் தீட்டி உள்ளதாகச் சொல்கிறார்கள்.   
அதே நேரத்தில் தனியாக பி.ஜே.பி-யை எதிர்க்க முடியாது என்றும் மாயாவதி நினைக்கிறார். பீகாரைப் போல பி.ஜே.பிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்கும் திட்டத்திலும் மாயாவதி இருக்கிறார். அதற்கான நீண்ட பயணத்தை தொடங்குவதற்காகவே இப்போதைக்கு தமது டெல்லி அரசியலை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

சரியான முடிவு

தலித் பிரச்னைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் மட்டும் அல்ல சட்டசபைகளில் கூட பேச முடியவில்லை என்று கடந்த காலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சில கருத்துகளை முன் வைத்திருக்கிறார். அவரிடம் பேசினோம். "மாயாவதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக எடுத்த முடிவு சரியான ஒன்றுதான். தலித்களின் பிரச்னைகளைப் பேசும்போது திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது.  இது போன்ற பிரச்னைகளைப் பற்றிப் பேசும் போது அனுமதிப்பது இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தலித் தலைவர்களைத் தவிர வேறு யாரும் தலித்களின் பிரச்னைகள் பற்றி பேசுவது இல்லை. பல நாள்கள் பொறுமையாக இருந்த பின்னர்தான் மாயாவதி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இதற்கு முன்பு ராஜினாமா செய்தவர்கள்...
(1)1992-ம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, காவிரி பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகக் கூறி, அமைச்சரவையில் இருந்து வாழப்பாடி ராம மூர்த்தி ராஜினாமா செய்தார்.
(2)2006-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாகச் சர்ச்சை எழுந்தபோது சோனியா காந்தி தமது மக்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
(3)2007-ம் ஆண்டு பிப்ரவரி-யில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி-யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த நடிகர் அம்ப்ரீஷ், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக ராஜினாமா செய்தார்.
(4)2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ல் மன்மோகன் சிங் அரசின் போது, தெலுங்கானா தனிமாநிலம் பிரிக்கப்படும் முடிவை எதிர்த்து ஏழு காங்கிரஸ் எம்.பி-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
(5)2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி காஷ்மீரின் மக்கள் ஜனநாயக க் கட்சி மக்களவை எம்.பி Tariq Hameed Karra தமது எம்.பி. பதவியை  ராஜினாமா செய்தார். கட்சியை விட்டும் விலகினார். காஷ்மீரில் தொடரும் படுகொலைகளுக்கு எதிராக மத்திய அரசும் காஷ்மீர் ஆளும் கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காரணம் சொன்னார்.

தொல். திருமாவளவன்

நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது 2004-ம் ஆண்டு பிப்ரவரியில் ராஜினாமா செய்தேன். நான் ராஜினாமா செய்ததற்கு தலித் பிரச்னைகளை பேச முடியவில்லை என்பதும் ஒரு காரணம். அந்த சமயத்தில் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி கிராமங்களின் பிரச்னைகள் பற்றி நான் பேசுவேன். நான் பேச எழுந்தாலே அப்போது சபாநாயகராக இருந்த காளிமுத்து அனுமதி தரமாட்டார். மைக் இணைப்பைத் துண்டித்து விடுவார்.  
மக்களவையில் எம்.பி-க்கள் பேசுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலான விவாதங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்.பி-க்கள் பேசுவார்கள். 8 எம்.பி-க்கள் கொண்ட கட்சியை நாடாளுமன்ற கட்சி என்ற ரீதியில் அங்கீகரிப்பார்கள். அவர்களுக்குப் பேச வாய்ப்புக் கொடுப்பார்கள். 5 எம்.பி-க்கள் இருக்கும் கட்சிக்கு நாடாளுமன்ற குழு என்று அங்கீகரிப்பார்கள். இந்த இரண்டு வரையறையிலும் சேராத 5-க்கும் குறைவான எம்.பி-க்களைக் கொண்ட கட்சிகளை உதிரி கட்சிகள் என்பார்கள்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இப்போது போதுமான எம்.பி-க்களின் பலம் இல்லை. அதனால் அவருக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன். எப்போதாவது இரண்டு அல்லது மூன்று நிமிடம் மட்டும் பேச வாய்ப்புக் கொடுப்பார்கள். இந்த நெருக்கடியை மாயாவதி உணர்ந்திருக்கிறார் என்று கருதுகிறேன்.  அதனால்தான் அவர் தம் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்
மக்களவையில் உதிரி கட்சியாக இருந்த எனக்கு முக்கியமான விவாதங்களில் பேச அனுமதிக்கவில்லை.  யாரும் பேசவில்லை என்றாலோ, ஆர்வம் இல்லாமல் இருந்தாலோதான் உதிரி கட்சிகளின் எம்.பி-க்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதுவும் இரவு எட்டு மணிக்கு வாய்ப்புத் தருவார்கள்.
நாம் பேச விரும்புவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு சபாநாயகர் அனுமதி மறுப்பதும் உண்டு. ஒரு முறை ஒரு பத்திரிகையில் நேரு, அம்பேத்கரை சாட்டையால் அடிப்பது போன்ற ஒரு கார்டூன் போட்டிருந்தனர். இது குறித்து நான் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டேன். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை. எனவே அவையின் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலிட்டேன். இஸ்லாமிய எம்.பி. ஓவைசி எனக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் மேலும் சில எம்.பி-க்கள் ஆதரவு தெரிவித்து கூச்சலிட்டதும், பிறகு நான் பேசுவதற்கு அனுமதி கொடுத்தனர்" என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்