'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா?-எகிறும் எதிர்பார்ப்பு! | TN Seeks Exemption from NEET

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (27/07/2017)

கடைசி தொடர்பு:16:11 (27/07/2017)

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா?-எகிறும் எதிர்பார்ப்பு!

நீட் தேர்வு துயரம்

" 'நீட்' தேர்வானது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதித் தேர்வல்ல; ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவப்படிப்பை ஒட்டுமொத்தமாக முடக்கிப்போடும் தந்திரத்தேர்வு" என்ற முழக்கங்கள், தமிழ்நாட்டின் பெருவாரியான பகுதிகளில் இருந்தும் கிளம்பியுள்ளன. " 'நீட்' தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோது எழுந்த எதிர்ப்பைக்காட்டிலும், அந்தத் தேர்வு நடத்தப்பட்ட பின் ஏற்பட்ட போராட்டங்களின் வீச்சுஅதிகம். அந்தளவுக்கு நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவபூர்வமாக தமிழ்நாட்டு மாணவர்கள் உணர்ந்துள்ளார்கள்" என்கின்றனர் கல்வியாளர்கள். தேர்வு எழுதச்சென்ற மாணவ, மாணவிகளிடம் பரிசோதனை என்றபெயரில் அவர்களின் ஆடைகளைக் கிழித்ததில் தொடங்கி, தமிழ்நாட்டிற்கு கடினமான கேள்விகளைத் தொகுத்ததுவரை நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். இதன் தாக்கத்தால், சமூக-ஜனநாயக இயக்கங்கள், கல்வி அமைப்புகள் தொடங்கி அரசியல் கட்சிகள்வரை, இந்தத் தேர்வுக்கு எதிராகக் கடுமையானப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் மனிதச்சங்கிலி போராட்டத்தை தி.மு.க. இன்று (ஜூலை 27) அறிவித்தது. இதற்கு பல்வேறு மாணவர் அமைப்புகளும், மாணவ சமுதாயத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பான பிரச்னையில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு ஆதரவு பெருகுவதை உணர்ந்த, ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு, இப்பிரச்னை பற்றி பேச்சுநடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவை பிரதமர் மோடியைச் சந்திக்க அனுப்பி வைத்தது. அதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஜூலை 25-ம் தேதி டெல்லிசென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரைச் சந்தித்தபோது, "தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி இரண்டு மசோதாக்கள்  சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரவேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகள் மனித சங்கிலி போராட்டம்

இப்படியான பரபரப்பான சூழலில், தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடப்போவதாகவும் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வலம் வந்தன. "இது சாத்தியமா? இதனால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்புண்டா?" என்ற கேள்விகளோடு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவைத் தொடர்பு கொண்டோம்.

"சட்டமன்றம், நாடாளுமன்றம், அரசு, நீதித்துறை ஆகிய அமைப்புகள் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுவனவாகும். இவை அனைத்துக்கும் தனித்தனியான பொறுப்புகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களுக்கு கூடுதல் பொறுப்பும், பங்களிப்பும் உண்டு. நீதித்துறை என்பது இதன்வழி நிறைவேற்றப்படுபவைகளுக்கான பாதுகாவலன் ஆகும். அந்தவகையில், 33 எம்.பி-க்களைக் கொண்டுள்ள சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட பரிந்துரைப்படியே நீட் தகுதித்தேர்வு கொண்டு வரப்பட்டது. அதேநேரம் அந்த பரிந்துரையில் 'அகில இந்தியளவில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், 'நீட்' விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றிய நிலையில், மத்திய பி.ஜே.பி அரசு அதற்கு ஏன் ஒப்புதல் கொடுக்கவில்லை? மாறாக, நாடு முழுவதும் நீட் தகுதித்தேர்வை திணித்தனர். தமிழகத்தின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தர வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நீதியரசர் எம்.எம் புன்சி குழு மத்திய-மாநில அரசின் உறவுகள் குறித்து பேசும்போது, 'குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது, ஆறு மாத காலத்திற்குள் பதில் அனுப்பவேண்டும்' என்று பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2016 ஜூலை மாதம் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா தனது சார்பில் உரையை அமைச்சர் மூலம் அனுப்பியிருந்தார். அதில், 'ஆறு  மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் எனும் பரிந்துரையை வரவேற்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டது. வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதம் நிறைவடைகிறது. ஆனால், இதுவரை குடியரசுத் தலைவரிடமிருந்து அதன்மீது எந்தப் பதிலுமில்லை. உரிய பதிலைப் பெற்றுத்தர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காலவரையற்ற மௌனம் நியாயமாகுமா? தற்போது நீட்-க்கு எதிரான போராட்டங்கள், தமிழ்நாடு முழுக்க வலுத்து வருகின்றன. இந்நிலையில், ஓராண்டுக்கு 'நீட்' தேர்வில் இருந்து விலக்குக் கொடுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்படியொன்று நடந்தால் அது,  முழுக்கமுழுக்க சட்டமன்றத்தை அவமானப்படுத்தும் செயலாகும். வெறும் கண்துடைப்பாகவும் அமைந்து விடும். மத்திய பி.ஜே.பி அரசின் நோக்கமே, எப்படியாவது நீட் தேர்வைத் திணித்துவிட வேண்டும் என்பதுதான். ஒரு வாதத்துக்காக கேட்கிறோம்.  ஓராண்டுக்கு விலக்குக் கொடுக்க மத்திய அரசால் முடியும் என்கிறபோது, ஏன் நிரந்தரமாக  விலக்குக் கொடுக்க இயலாது? தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவது மட்டுமே உண்மையான நீதி. இல்லையேல் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நம் மாணவ சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதியே ஆகும்" என்றார் ஆழமாக.

'நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்' என மாணவ சமூகம் எதிர்பார்ப்பது உண்மையான நீதியே!


டிரெண்டிங் @ விகடன்