'நிதிஷை கடவுள்போல நினைத்தேன்... துரோகம் இழைத்துவிட்டார்!' - வேதனையில் லாலு!

'கடவுள்போல நிதிஷை நினைத்தேன். ஆனால், அவர் துரோகம் இழைத்துவிட்டார்' என்று பீகார் முதல்வர் நிதிஷின் திடீர்க் கூட்டணி விலகல் குறித்து லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். 

லாலு பிரசாத் யாதவ்

பீகாரில், கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. தேர்தலில் வெற்றிபெற்ற அந்தக் கூட்டணியில், ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் முதல்வராகவும் ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில், லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். துணை முதல்வர் தேஜஸ்வி வீட்டில் ஊழல் புகார் காரணமாக சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில், தேஜஸ்வியை நிதிஷ் குமார் பதவி விலக வலியுறுத்துவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில், 'தேஜஸ்வி துணை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யமாட்டார்' என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜ.க-வின் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தெரிவித்தார் நிதிஷ். கருத்து வேறுபாடுகள் முற்றியிருந்த நிலையில், திடீரென பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க ஆதரவுடன் தற்போது நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ், 'நிதிஷ் குமார் எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டார். இந்த அரசியல் தலைவர்கள் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பா.ஜ.க - ஜனதா தளம் கூட்டணியில் தற்போது அமைந்துள்ள ஆட்சிக்கு எதிராக வழக்குப் போடலாமா என்று யோசித்து வருகிறேன். மோடி - ஷா கூட்டணி பீகாருக்குள் நுழையக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் நிதிஷுடன் கூட்டணி வைத்தோம். அவரை சிவன்போல பூஜித்தேன். ஆனால், அவர் எங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார். எனக்கு எந்தவித பேராசையும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்திப்பேனா?' என்று கொட்டித் தீர்த்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!