'மன்னிப்பு கேட்க முடியாது': சசிகலா விவகாரத்தில் ரூபா திட்டவட்டம்! | Ready to face defamation suit, Says Roopa

வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (28/07/2017)

கடைசி தொடர்பு:15:35 (28/07/2017)

'மன்னிப்பு கேட்க முடியாது': சசிகலா விவகாரத்தில் ரூபா திட்டவட்டம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐ.பி.எஸ் துணிச்சலாகத் தெரிவித்தார். சசிகலா சிறை அறையில் சமையலறை, குளிர்சாதனப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சத்திய நாராயண ராவ் உள்ளிட்ட சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்தார்.

ரூபா

இது, கர்நாடக அரசியலிலும் ஐ.பி.எஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பணியாற்றிய ரூபா, போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதோடு, ரூபாவால் குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை உயரதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, சிறைக்குள் சசிகலா உலாவுவது போன்ற வீடியோ வெளியாகி, மேலும் பரபரப்பைக் கிளப்பியது. இதனிடையே,  சத்திய நாராயண ராவ், ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், "தன்மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்காக, ரூபா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள ரூபா, "எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது உண்மைதான். ஒரு டி.ஐ.ஜி-யாக நான் எனது கடமையைத்தான் செய்தேன். இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த வழக்குகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில், விசாரணையின் முடிவில்தான் உண்மைகள் வெளியில் வரும்" என்றார்