வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (29/07/2017)

கடைசி தொடர்பு:15:08 (29/07/2017)

கோயம்பேட்டில் 45 ரூபாய்... வெளி மார்க்கெட்டில் 75 ரூபாய்! - மிரள வைக்கும் தக்காளி விலை!

டெல்லி, கொல்கத்தா, இந்தூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 17 முக்கிய நகரங்களில் தக்காளியின் விலை 90 ரூபாயைத் தாண்டிவிட்டது. காய்கறி வரத்து குறைவால், இந்தநிலை ஆகஸ்ட் மாத இறுதிவரை நீடிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.


tomato price

வடமாநிலங்களில் பெய்த கனமழை, வெள்ளம் போன்ற காரணங்களால் காய்கறிகள் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வெங்காயம் சப்ளை செய்யும் மொத்தவிலை வெங்காய விற்பனை சந்தை மகாராஷ்டிராவில் உள்ள லசல்கவுனில் உள்ளது. அங்கு வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு 1,300 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதால், நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தக்காளி விலையைப் பொறுத்தவரை சென்னையில் ஏப்ரல் மாதத்தைவிட ஐந்து மடங்கு விலை கூடியுள்ளது. தக்காளி விலை உயர்வு குறித்து கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நலச் சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''முன்பெல்லாம் கோயம்பேடு சந்தைக்கு ஆற்காடு, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்படும். ஆற்காட்டை சுற்றி தோல் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதால்  அவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்தது. இதனால் அப்பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்து மதுரை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி இறக்குமதிச் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அப்பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துதான் தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது.

தக்காளி வரத்து இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை இன்று கிலோ 45 ரூபாய்க்கு குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் விலை 45 ரூபாய். மாநிலத்தின் பிற பகுதிகளில் வியாபாரிகள் விலைக் கூட வைத்து விற்கிறார்கள். வெங்காய விலையில் இன்று கிலோ 15 ரூபாயில் இருந்து 19 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு கனமழை பெய்ததாக கேள்விப்பட்டேன். எனவே வெங்காய வரத்தும் குறையலாம். அவ்வாறு குறைந்தால் வெங்காய விலை பலமடங்கு உயரும். தமிழகத்தில் விவசாயத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாலே காய்கறி பஞ்சம் இருக்காது’  என்றார் விரக்தியுடன்.

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் தக்காளி விலை இன்று கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் சில்லறை வியாபாரிகள் கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இது குறித்து அவர்களிடம் கேட்டப்போது, வாகனச்செலவு, கூலி ஆகியவற்றை நாங்கள் தக்காளி விலையை கூடுதலாக வைத்து விற்கிறோம். இருந்தாலும் தக்காளியை வாங்க பொதுமக்கள் அதிகம் ஆர்வம்காட்டவில்லை. ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது கால் கிலோ, அரைக்கிலோ வாங்கிச் செல்கின்றனர். இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களால் விலையை குறைத்து விற்பனை செய்யமுடியவில்லை. முதலுக்கே மோசம் அடைந்த நிலையில் நாங்கள் இருந்து வருகிறோம்" என்றார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க