வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (30/07/2017)

கடைசி தொடர்பு:10:19 (31/07/2017)

மக்கள் தொகை பெருக்கம்... சீனாவை முந்தும் இந்தியா! - இனி என்ன நடக்கும்?

சீனாவில் பெருகிவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு, கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மக்கள் தொகை

குடும்பத்துக்கு ஒரு குழந்தை

மாவோ காலம் முதலே பேசப்பட்டுவந்த ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ திட்டம், 1970-ம் ஆண்டு முதல் சீனாவில் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி தம்பதியர் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் ஒரு பெரும் தொகையை அபாராதமாகச் செலுத்த வேண்டும். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா..? மூச்... அதற்கெல்லாம் அனுமதி இல்லை. டிசம்பர் 2013-ம் ஆண்டில் இந்தத் திட்டம் தளர்த்தப்பட்டு, இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் தீர்மானத்தை சீனா நிறைவேற்றியது.

சீனாவின் மக்கள்தொகை பரவல்

2016-ம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை 137 கோடிக்கும் அதிகமாக இருந்தது. இது, உலக மக்கள்தொகையான 740 கோடியில் 18.74 சதவிகிதம். அந்த நாட்டின் பிறப்புவிகிதம் 1,000 நபர்களுக்கு 12 ஆகவும், இறப்பு விகிதம் 1,000 நபர்களுக்கு 7 ஆகவும் இருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 0.47 சதவிகிதம்.

ஒரு சதுர கிலோமீட்டருக்கு  134.7 நபர்கள் சீனாவில் வசிக்கிறார்கள். இந்த மக்கள்தொகை அடர்த்தி, மக்கள்தொகை வளர்ச்சி வீதம் ஆகியவை பிற தெற்காசிய நாடுகளை ஒப்பிடும்போது சற்று குறைவானதே.

சீனா உணர்ந்த பாதிப்புகள்...

சீனா நடைமுறைப்படுத்திய, `ஒரு குழந்தை’ திட்டத்தால் கோடிக்கணக்கான குடும்பங்களில் வயதான பெற்றோர் இருவரையும் அவர்களின் ஒரே குழந்தை கவனிக்கவேண்டிய நிலை உருவானது. இந்த நிலைமைக்கான தீர்வாக அந்த நாட்டின் ஹெனான் (Henan) மாகாணம் ஒரு தீர்மானம் இயற்றவேண்டி வந்தது. அதன்படி, அறுபது வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இருந்தாலோ அல்லது பெற்றோர் மருத்துவமனையில் இருந்தாலோ அவர்களை கவனித்துக்கொள்ள சம்பளத்துடன்கூடிய மேலதிக விடுமுறை, ஆண்டுக்கு 20 நாள்கள் வழங்கப்படுகிறது.

இதேபோல் நகரமயமாதலைக் குறைக்கும் நோக்கத்துடன் கொண்டுவந்த திட்டம் ஆறு கோடிக் குழந்தைகளை தனிமையில் தவிக்கவிட்டுள்ளது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்குச் சென்று வேலை செய்யும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல முடியாது. அவர்களின் குழந்தைகளுக்கு நகரப் பள்ளிகளில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று, தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு, அவர்களின் நிலை என்னவென்றே அறியாமல் வேலை செய்கிறார்கள் பெற்றோர்.

வெற்றி பெறப் போகிறதா சீனா?

மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைவதால், 2024-ம் ஆண்டுக்குள் சீனா தனது முதல் இடத்தை இந்தியாவிடம் கொடுக்க நேரிடும். இது இந்தத் திட்டத்தின் வெற்றியைக் குறிக்கிறதா என்றால், அது விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய ஒன்று. ஏனெனில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தக் கடுமையான திட்டங்கள் இல்லாத பல நாடுகளிலும் பிறப்புவிகிதம் குறைந்திருக்கிறது.

சீனாவில் கடந்த இரு ஆண்டுகளில், பிறந்த குழந்தைகளில் அறுபது சதவிகிதத்துக்கும் மேலான குழந்தைகள் அவர்களின் பெற்றோர்க்கு இரண்டாம் குழந்தை. சீனா மக்கள்தொகையைக் குறைப்பதில் வெற்றி பெற்றுவிடும். அதன் விளைவுகளாக தனித்துவிடப்படும் குழந்தைகள், ஆதரவில்லாமல் தவிக்கும் பெற்றோர்கள், அவர்களைப் பார்த்துக்கொள்ளத் தேவைப்படும் அதிக விடுமுறை... இந்த விளைவுகளையெல்லாம் எப்படி வெல்லப் போகிறது? இது குறித்து விரிவாகப் பேசுகிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மருதன்... 
“மக்கள்தொகை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது மிகப் பெரிய அபாயம் என்று அவ்வப்போது சில மலைக்கவைக்கும் எண்களை வெளியிட்டு பீதியூட்டுவது ஆய்வாளர்களின் வழக்கம். இன்னும் சில ஆண்டுகளில் மக்கள்தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும் என்று இப்போது சொல்லப்படுகிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றி இப்போதே பலரும் கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர்.

மருதன்18-ம் நூற்றாண்டில்  தாமஸ் மால்தஸ் முதன்முறையாக விரிவான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, மக்கள்தொகைப் பெருக்கம் குறித்த அச்ச உணர்வை உலக மக்களிடையே ஊட்டினார். `இயற்கையும் வளங்களும் அப்படியே இருக்க, மக்கள்தொகை மட்டும் அதிகரித்துக்கொண்டே போவது மனிதகுலத்துககு நல்லதல்ல’ என்று அவர் வாதிட்டார்.  இந்த வாதத்தைச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ள ஆரம்பித்தன.

இதற்கு இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன. மக்களுக்குப் போதுமான விழிப்புஉணர்வை ஊட்டி, அவர்களாகவே குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி தூண்டுவது. இரண்டாவது, மிகுதியான குழந்தைப் பிறப்பை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவது. பல நாடுகள் முதலாவது வழியைக் கையாண்டன. சீனா, இரண்டாவதை முயன்று பார்த்து இப்போது தன் பாதையை மாற்றிக்கொண்டிருக்கிறது.

உண்மையில், மக்கள்தொகை அதிகரிப்பு இந்தியாவின் முதன்மையான அபாயம் இல்லை என்றே சொல்வேன். (சீனாவுக்கும்கூட இது பொருந்தும்). மக்களுக்கான கல்வி, அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில்தான் நாம் அக்கறை செலுத்த வேண்டும். விழிப்புஉணர்வு அதிகரிக்கும்போது தானாகவே அதிகக் குழந்தைளைப் பெற்றுக்கொள்வது தடுத்து நிறுத்தப்படும். 

ஆக, அடிப்படை பிரச்னை என்பது மக்கள்தொகை அதிகரிப்பு அல்ல. வளங்கள் குறைவது. சுற்றுச்சூழல் சுரண்டப்படுவது. ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும் அதிகரித்துவருவது. இதையெல்லாம் தீர்ப்பதில்தான் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும். வெறுமனே மக்கள்தொகை அதிகரிப்பு பீதியைக் கிளப்புவதில் பலனில்லை. மால்தஸ் சொன்னதைப்போல் மக்கள்தொகை அதிகரித்து பூமி வெடித்துவிடவில்லை. இந்தியாவும் சீனாவும்கூட வெடித்துவிடாது’’ என்கிறார் மருதன்.


டிரெண்டிங் @ விகடன்