Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”14-வது குடியரசுத் தலைவரால் சாத்தியப்படுமா நீட் விலக்கு?” - களத்தில் இருப்பவர்கள் கருத்து என்ன?

ராம்நாத் கோவிந்த்

"நாம் ஒரு வலுவான, வளரும் பொருளாதாரத் தன்மை, கல்விச் சுதந்திரம், நன்னெறி மற்றும் பகிர்ந்துகொள்ளும் இயல்புடைய சமூகத்தையும், ஒரு சமத்துவ சமுதாயத்தையும் உருவாக்க வேண்டும்" - இந்தியத் திருநாட்டின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது ஆற்றிய உரையில் ராம்நாத் கோவிந்த் இவ்வாறு கூறினார். காரணம், பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதன் கல்வி முன்னேற்றத்தைக் கொண்டே வரையறுக்கிறார்கள். நாட்டின் ஆட்சியாளர்கள் பொதுவாகத் தங்களின் பதவிப் பிரமாணங்களின்போது, கல்வி, வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் குறித்துப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், பீகார் மாநில முன்னாள் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த், அதனைக் கூறும்போது சற்று உற்றுநோக்கத்தான் வேண்டியிருக்கிறது.

2012-ம் வருடக் கணக்கீட்டின்படி, பீகார் மாநில தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் வெறும் 21% பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். கடைசியாக 2017-ல் எடுக்கப்பட்ட மற்றொரு கணக்கீட்டின்படி 60% மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்கள். இதற்குக் காரணம் அங்கே கல்வியில் புழுத்துக் கிடக்கும் ஊழல் என்று மட்டுமே கூறப்படுகிறது. ஆனால், உயர்கல்வித்துறையில் மாற்றங்களைக் கொண்டுவந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக இருந்த ராம்நாத் கோவிந்த் பீகார் ஆளுநராகப் பதவி வகித்த 2015-2017 காலகட்டத்தில் அங்கே கல்விச் சூழலில் கவனிக்கத்தக்க சில மாற்றங்களைக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, தனது பதவிக்காலத்தைக் கடந்து, பணிநீட்டிப்பில் இருந்த துணை வேந்தர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்த ராம்நாத் கோவிந்த், அடுத்தபடியாக வரவிருந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை சிறப்புக் கமிட்டி ஒன்றை அமைத்துத் தேர்வு செய்தார். அதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கான, 'பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?' என தனி விரிவுரை வகுப்புகளையும் டெல்லி மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த முனைவர்களைக் கொண்டு நடத்தினார். இப்படி பீகார் உயர்கல்வித் துறையில் ராம்நாத் கோவிந்த் செய்த மாற்றங்கள்தான், முதல்வர் நிதீஷ் குமாருடனான இவரது நட்புறவு வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகிர் ஹுசைன், ராதாகிருஷ்ணன்போல இவருக்குக் கல்வியியல் சார்ந்த பின்னணி இல்லை என்றாலும், பீகார் மாநிலத்தின் கவர்னராக இவர் மேற்கொண்ட செயல்பாடுகளை, நாடு முழுவதும் உள்ள பல மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க, மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதித் தேர்வான "நீட்"--க்கு விலக்குக் கேட்டு, தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்தபோது அவரது பார்வைக்கு அனுப்பப்பட்ட மசோதா எதுவும் நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருக்கும் நிலையில், உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராம்நாத் கோவிந்த், அதன்மீது நடவடிக்கை எடுப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பிரின்ஸ் கஜேந்திரபாபுஇதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "பீகார் கவர்னராக இருந்தபோது அம்மாநிலத்தில் கல்வியியல் மாற்றங்களைக் கொண்டுவந்ததாகக் கூறப்படுபவர், தற்போது பதவியேற்றுள்ள நிலையில், ஐந்து மாதங்களாக மத்திய அரசிடம் கிடப்பில் இருக்கும் 'நீட்' தொடர்பான கடிதத்தின் நிலை என்ன ஆனது? என்று அவரே கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். பீகார் மாநில மாணவர்கள் நிலைகுறித்து அக்கறை உடையவராக பிரதிபலிக்கப்பட்டவர், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நிலைகுறித்து எதுவும் கேள்வி எழுப்பவில்லை. தமிழகத்திலிருந்து அமைச்சர்கள் தொடர்ச்சியாக டெல்லி பயணப்பட்டு வருவது மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.

"பீகாரில் கல்வியியல் மாற்றம் கொண்டுவந்திருந்தால் எதற்காக அங்கிருந்து இளைஞர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு தமிழகத்திற்குப் படையெடுக்கப்போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற முன்னாள் அரிபரந்தாமன்நீதிபதி அரி பரந்தாமன், "நிதிஷ் - லாலு பிரசாத் இடையிலான கூட்டணி பிளவுபட மட்டுமே அங்கே ராம்நாத் கோவிந்த் செயல்பட்டாரே தவிர, கல்விக்காக இல்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அவர் அடையாளப்படுத்தப்பட்டாலும், இன்றளவும் பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீடு அமலில் இல்லை. அதற்கான எந்த நடவடிக்கையையும் அவர் எடுத்ததாகவும் தெரியவில்லை. நீட் தொடர்பாகப் பேசுகையில், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற இருக்கும் கடிதம் என்றில்லாமல் 'மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கான கடிதம்' என்றே நாம் பார்க்க வேண்டும். அடிப்படையில் ராம்நாத் கோவிந்த், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. சார்புநிலை உடையவர் என்பதால், இவரின் நிலைப்பாடு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை” என்றார்.

ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் ஏற்றபோது கூறிய வார்த்தைகளை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியதாகிறது. "வளரும் பொருளாதாரத் தன்மை, கல்விச் சுதந்திரம் ஆகியவற்றை உடைய சமத்துவ சமுதாயம்...", இறுதிவரை கனவாக மட்டுமே எஞ்சியிருக்குமா? 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close