Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் வர்த்தகத்துக்குச் செவ்வாய்கிழமை மிகவும் மோசமான நாள், ஏன்?

நஷ்டத்தின்போது `இவ்வளவு ரூபாய் நஷ்டம்' எனச் சொல்பவர்கள், லாபம் வந்தால் அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்களா...' இதுதான் யதார்த்தமான உண்மை. இது பங்குச்சந்தைக்கு மட்டுமல்ல, பொதுவாக எந்த ஒரு முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும் நம்மில் பலரும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறோம், ஆண்டுக்கு எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறோம் என்பதை பிறரிடம் சொல்வதே இல்லை; சொல்லவும் விரும்புவதில்லை. 

சென்செக்ஸ், நிஃப்டி

ஆனால், பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் மூலம் பலரும் பணம் சம்பாதித்துவருகின்றனர். மற்ற முதலீட்டுத் திட்டங்களைவிட பங்குச்சந்தையில் பணத்தை பன்மடங்காகப் பெருக்க முடியும், போதிய அறிவும் நேரமும் இருந்தால். இந்திய பங்குச்சந்தையைப் பொறுத்தவரை தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ) மற்றும் மும்பை பங்குச்சந்தை (பி.எஸ்.இ) என இரண்டு முக்கியப் பங்குச்சந்தைகள் இருக்கின்றன. 

1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 1993-ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, என்.எஸ்.இ-க்கு  பங்கு பரிவர்த்தனையாக அங்கீகரித்தது. இதையடுத்து 1994-ம் ஆண்டு முதன்முதலாக கடன் சந்தை வணிகத்தை என்.எஸ்.இ தொடங்கியது. அதன் பிறகு 1996-ம் ஆண்டு நிஃப்டி 50 குறியீட்டை என்.எஸ்.இ அறிமுகப்படுத்தியது. 

மொத்த சந்தை மதிப்பீடு (market capitalization) அடிப்படையில், இதுவே ஆசியாவின் இரண்டாவது பங்குச்சந்தை. மேலும், உலகில் வேகமாக வளர்ந்துவரும் பங்குச்சந்தைகளில் முன்னணியில் உள்ளது. நிஃப்டி, இந்தியாவில் பொருளாதாரப் பரிமாற்றங்களை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் சட்டக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்களின் பங்கு விலையைக் கொண்டு நிறையிடப்பட்ட சராசரி (weighted average) முறை மூலம் நிஃப்டி 50 குறியீடு கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டின் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு மொத்த பங்குச்சந்தை செல்லும் போக்கை அறியலாம். நிஃப்டி முதல்முறையாக ஜனவரி 2004-ம் ஆண்டில் 2,000 புள்ளிகளைக் கடந்தது. ஜனவரி 2006-ம் ஆண்டில் 3,000 புள்ளிகளும், 2006 டிசம்பரில் 4,000 புள்ளிகளும் கடந்த நிஃப்டி, ஜூலை 2017-ம் ஆண்டில் 10,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

நிஃப்டி, சென்செக்ஸ்

பி.எஸ்.ஈ சென்செக்ஸ் (BSE Sensex) என்னும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் என்பது மும்பை பங்குச்சந்தையின் 30 மிகப்பெரிய அதிகம் வியாபாரம் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட ஒரு பங்குச்சந்தை குறியீடு. ஏப்ரல் 1979-ம் ஆண்டில் 100 புள்ளிகள் அளவில் உருவாக்கப்பட்டது. `சென்செக்ஸ்' எனும் வார்த்தை புனேவைச் சேர்ந்த பங்குச்சந்தை ஆய்வாளர் தீபக் மொஹனி என்பவரால் சூட்டப்பட்டது.

பி.எஸ்.இ சென்செக்ஸ், 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்பட்டது. அந்நாளில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 549.43 புள்ளிகளில் நிறைவடைந்தது. வரலாற்றுரீதியாக இதுவரை சென்செக்ஸ் வர்த்தகத்துக்குச் செவ்வாய்கிழமை மிகவும் மோசமான நாளாகவும், வெள்ளிக்கிழமை சிறந்த நாளாகவும் காணப்படுகிறது. சென்செக்ஸ் முதல்முறையாக 1990, ஜூலை 25 அன்று 1,000 புள்ளிகளைக் கடந்தது. 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் 10,000 புள்ளிகளைக் கடந்தது. 2007-ம் ஆண்டு டிசம்பரில் 20,000 புள்ளிகளைக் கடந்தது. 2007-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையே வெறும் 17 வர்த்தக நாள்களில், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் அதிகரித்தது. சென்செக்ஸ் குறியீடு ஆரம்பித்தபோது இருந்த 30 நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் அண்ட் டூப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல் என ஆறு நிறுவனங்கள் மட்டுமே தற்போது உள்ளன. 

தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை செயல்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது. இந்தப் பங்குச்சந்தையில் பொதுமக்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய இயலாது. சந்தையில் உறுப்பினர்களாக உள்ள தரகர்களிடம் கணக்குத் தொடங்கி அவர்கள் மூலமாகவே வர்த்தகம் செய்யலாம். அவ்வாறு வர்த்தகம் செய்ய விரும்பும் ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், நிரந்தர கணக்கு எண் (PAN- Permanent Account Number) உடையவராகவும் இருக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க, மேதாவியாக இருக்க வேண்டும் என எந்த ஒரு தேவையும் இல்லை. ஒன்றுமே தெரியவில்லை என்றால்கூட பணம் சம்பாதிக்கலாம். பங்குச்சந்தை குறித்து அடிப்படையான சில விஷயங்களைக் கவனித்தாலே போதும், நீங்களும் சம்பாதிக்கலாம்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close