சாலைப் பறவையாய் பறந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! #JagrutiHogale

JagrutiHogale

மும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர், ஜாக்ருதி ஹோகலே (Jagruti Hogale). பைக் காதலர்.  'பைக்கர்னி மோட்டார் சைக்கிள் கிளப்” உறுப்பினர். இதுதான் இந்தியாவின் அனைத்துப் பெண்களுக்கான முதல் பைக் கிளப். சாலைகளில் பறவையாய் பறந்தவர். 35 வயதான இவருக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

ஜூலை 23-ம் தேதி காலை 9:00 மணி அளவில், தஹானு – ஜாவார் நெடுஞ்சாலையில் இருக்கும் ஜாவார் அருவிக்குத் தனது நண்பர்களுடன் கிளம்பினார் ஜாக்ருதி ஹோகலே. தனது ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் பைக்கில் சென்றவர், ஒரு லாரியை ஓவர் டேக் செய்ய முற்பட்டார். அப்போது, சாலையிலிருந்த குழியினால் நிலைதடுமாறி, லாரியின் பின்சக்கரத்தில் விழுந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை நசுங்கி இறந்துபோனார் ஜாக்ருதி. 

JagrutiHogale

“அவர் ஒரு பாதுகாப்பான ஓட்டுநர். இதுபோன்ற ட்ரிப் அடித்த அனுபவங்கள் நிறைய உண்டு. விபத்துக்குக் காரணம், ஆழமான பள்ளம் இருப்பதே தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கி இருந்ததுதான். விபத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்பு அதே சாலை வழியே நான் குஜராத்துக்குச் சென்றேன். ஒட்டுமொத்த சாலையும் குழிகளால் நிரம்பி இருந்தது” என்று கோபமும் வேதனையுமான குரலில் சொல்கிறார் ஜாக்ருதி கணவர் விராஜ். 

ஆனால், வழக்கைப் பதிவுசெய்த காசா காவல் நிலைய துணை ஆய்வாளர் ஜெயபிரகாஷ் குடே, “ஜாக்ருதி ஹோகலே லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, அதிக மழை பெய்துகொண்டிருந்தது. கடைசி நொடியில் பள்ளத்தை கவனித்து இடது பக்கம் சட்டெனத் திரும்பியதால் பலியானார். ஜாக்ருதி மீது 304(a) பிரிவில் (நிதானமில்லாமல் வாகனம் ஓட்டுதல்) வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் பைக் ஓட்டியபோது இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து இருந்த காரணத்தினால், வலது புறம் திரும்பி இருந்தால், காப்பாற்றப்பட்டிருக்கலாம்'' என்று சொல்லியிருக்கிறார். 

JagrutiHogale

விபத்தினால் இறந்தவர் மீது வழக்குப் பதிவுசெய்யும் வினோதம் இந்தியாவில்தான் அரங்கேறும். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா மாநிலப் பொதுப் பணித்துறை அமைச்சர் சொன்ன கருத்து அதிர்ச்சி ரகம். “எல்லாச் சாலைகளும் பொதுப் பணி துறையின் கீழ் வராது. அரசு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளைச் சரிசெய்யும் பணி, மழை ஓய்ந்த பிறகு தொடங்கும்” என்று சொல்லியிருக்கிறார். 

மற்றொரு அமைச்சரான சந்திரகாந்த் பாட்டில், “மழையின் காரணமாக ஜாக்ருதி சென்ற சாலைச் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இதனால், அவர் சென்ற இருசக்கர வாகனம் வழுக்கி விழுந்தது. பின்னால் வந்துகொண்டிருந்த லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். எனவே, இந்த விபத்து சாலையில் இருந்த குழியினால் நடைபெறவில்லை” என்று பொறுப்பான (?) விளக்கம் அளித்துள்ளார். 

இப்படியெல்லாம் பழி போடுபவர்கள், ரோடு போட்டு இருந்தால், இன்று ஒன்பது வயது சிறுவன் தாயில்லாமல் நின்றிருக்க மாட்டான். இயற்கை எழில் கொஞ்சும் நாடு இந்தியா. அந்த அழகிய காட்சிகளை நம் மனதில் பதிவுசெய்யும் வழிகளில் ஒன்று, மோட்டார் சைக்கிள் பயணம். ஆனால், ஒவ்வொரு முறை சாலையில் இறங்கும் முன்பு மறந்துவிடாதீர்கள். இந்த நாடு ஊழல் அரசியல்வாதிகளால் நிரம்பியது. சாலைகளில் குழி இருக்காது; குழிகளில்தான் சாலை இருக்கும். நீங்கள் உங்கள் பயணத்தை முடித்துவிட்டு உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் திரும்பி வேண்டும். எனவே, விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!