Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிமானிட்டைசேஷன் முதல் காஸ் மானியம் ரத்து வரை... மோடி அரசு சாமானியனுக்கு வைத்த செக் பாயின்ட்ஸ்!

மோடி, ஆட்சியில் அமர்ந்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் மக்களுக்கானது என்றே அவர் பிரகடனம் செய்தார். ஆனால், ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதையே ஊகிக்க முடியாத அளவில்தான் நிலைமை இருக்கிறது. 

மோடி modi

`மக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக' எனச் சொல்லப்பட்டு எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. கேட்டால் மோடி முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை `பொறுத்திருங்கள். இதற்கான பலனை அடைய சில ஆண்டுகள் ஆகும்' என்று வாயடைத்துவிடுகிறார்கள். மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, தனிநபர்கள் மீது அவை ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்...

ஆதார் கட்டாயம்:

நின்றால் ஆதார், அமர்ந்தால் ஆதார் என எல்லாவற்றுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியது. ஆதார் எண் மூலம் அனைத்து சேவைகளும் விரைவாக நடத்த முடியும் எனக் கூறப்பட்டது. ஆனால், முன்பு எந்த வேகத்தில் இந்த அரசு இயந்திரமாகச் செயல்பட்டதோ, அதே வேகத்தில்தான் இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆதார் எண்ணை இணைத்த பிறகும்கூட அரசின் மானியங்கள் பெரும்பாலானவர்களுக்கு ஒழுங்காக வந்து சேரவில்லை. ஆதார் கார்டு மூலம் விரைவாகக் கிடைப்பது ஜியோ சிம் மட்டுமே. ஆதார் கார்டு இல்லாததால், மாணவர்களுக்கு மதிய உணவு நிராகரிக்கப்பட்ட சம்பவத்தையெல்லாம் என்னவென்று சொல்வது? இதில் ஆதார் கார்டு தகவல்கள் எல்லாம் கசியத் தொடங்கியுள்ளன.  

டிமானிட்டைசேஷன்:

‘கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்' எனச் சபதமிட்டு ஆட்சியில் அமர்ந்தவர் மோடி. 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்று, கறுப்புப் பணத்தின்மீது போர் தொடுத்ததாக அவர் கூறினார். இந்த நடவடிக்கையால் மக்கள் படாத துன்பமில்லை. 100-க்கும் மேலானோர் பலியானார்கள். ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பணமும் வங்கிக்கு வந்தது. ஆனால், மோடி சொன்ன கறுப்புப் பணம் மட்டும் வரவே இல்லை. உடனே டிமானிட்டைசேஷன் தோசையை டிஜிட்டலைசேஷனாகத் திருப்பிப் போட்டார் மோடி. இதனால் நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கியது. சிறு, குறு தொழில்முனைவோர்கள் எல்லாம் காணாமல்போனார்கள். 

2,000 ரூபாய் நோட்டு:

2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அதன் படம் சமூக வலைதளங்களில் உலா வந்தது. மோடி அரசின் ரகசியம் காக்கப்படும் தன்மையைச் சொல்ல இது ஒன்றே போதும். கறுப்புப் பணம் வைத்திருந்த முதலைகள் எல்லாம் வங்கிகளோடு கைகோத்துக்கொண்டு கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிய சம்பவங்களைக் கண்கூடாகப் பார்த்தோம். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்றிரண்டு 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த சாமான்யர்களுக்குச் சில்லறை கொடுக்க ஆள் இல்லை. 

பினாமி சட்டம்:

டிமானிட்டைசேஷனில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. கறுப்புப் பணம் எல்லாம் பினாமி சொத்துகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பதால் `பினாமி சட்டம்' கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி `எல்லோரும் தங்களின் சொத்துகளுக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும்' எனச் சொல்லப்பட்டது. சொத்துகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லாவிட்டால், அவை பறிமுதல் செய்யப்படும் என்பதே திட்டம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

ஆதார் - பான் இணைப்பு:

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டது. அப்போதுதான் ஒருவரது வருமானத்தை, சொத்துகளைச் சரியாகக் கணக்கிட முடியும்; பதிவுசெய்ய முடியும் என அரசு தரப்பு கூறியது. `இனி வருமானவரி, சொத்துவரி போன்றவையெல்லாம் எளிதில் தாக்கல் செய்ய முடியும், அனைத்தும் விரைவாக நடைபெறும்' எனச் சொல்லப்பட்டது. ஆனால், ஆதார்-பான் இணைப்பிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள். பெயரில் சிறு மாற்றங்கள் இருந்தாலும்கூட இரண்டையும் இணைக்க முடியவில்லை. வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஆதார் - பான் இணைப்பு செய்யப்படாத பான் கார்டுகள் ரத்துசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திவால் சட்டம்:

நிறுவனங்கள் எல்லாம், மக்களின் பணத்தை வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கி, புதிய புதிய பெயர்களில் பதவிகளை உருவாக்கி, தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அதிகச் சம்பளம் கொடுத்து, விளம்பரத்துக்குக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவுசெய்வது என எல்லாவற்றையும்  இஷ்டத்துக்குச் செலவு செய்துவிட்டு லாபம் ஈட்ட முடியாமல் முடங்கிப்போகின்றன. அவற்றின் கடன்களை மீட்க, திவால் சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அந்த நிறுவனங்களின் கடன்களை அரசே தன் சிரமேற்கொண்டு அவற்றின் சொத்துகளை விற்று, கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டத்தின்படியே பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து பணத்தைச் சுருட்டியதற்கெல்லாம் யாருக்கும் எந்தத் தண்டனையும் இல்லை. வாழும் உதாரணம் விஜய் மல்லையா. 

நீட் தேர்வு:

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. எவ்வளவோ எதிர்ப்புகள் எழுந்தும் அனைத்தும் வீணானது. தரமில்லாத கல்வியைப் படித்துவிட்டு கனவுகளை வளர்த்துக்கொள்ளும் மாணவர்களுக்கு, தேர்வுகள் எல்லாம் தலைவலிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சமயத்தில் மேலும் மேலும் தேர்வுகள் புதிதாகக் கொண்டுவரப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களை மானபங்கப்படுத்தாத குறையாக நடத்தினார்கள் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள்.  

ஜிஎஸ்டி:

`ஜிஎஸ்டி வரி மசோதா வந்துவிட்டால், நாடே தலைகீழாக மாறிவிடும்', `விலைவாசி குறையும்', `பேக்கிங் செய்யப்படாத பொருள்களுக்கு வரி இல்லை' என்றார்கள். பேக்கிங் செய்யப்படாத பொருள்களின் விற்பனை ஓர் இலக்க சதவிகிதத்தில் சுருங்கிப்போய் பல ஆண்டுகள் ஆகின்றன என்பதை மறந்துவிட்டதா அரசு? உயிர் காக்கும் மருந்துகளுக்குக்கூட வரி விதிக்கப்பட்டிருக்கிறது. எதிலும் விலை குறையவில்லை. மாறாக, சாதாரண மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழுந்ததுதான் மிச்சம். 

200 ரூபாய் நோட்டு:

2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறப்போவதாகச் செய்திகள் உலாவருகின்றன. அரசு தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், 200 ரூபாய் நோட்டுகள் வரப்போவதை அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அப்படியெனில், 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. மீண்டும் மக்கள் எல்லோரும் வங்கியில் வரிசையில் நிற்கவேண்டிய நிலை வருமோ? 

காஸ் மானியம் ரத்து:

இலவச காஸ் இணைப்பு கொடுத்து, `மகளிருக்குப் பெருமை கிடைத்தது' என விளம்பரப்படுத்திக்கொண்டார் மோடி. ஆனால், காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்துசெய்து, அதே மகளிருக்குக் கூடுதல் செலவை வைத்துவிட்டார். காஸ் மானியத்தைத் தானாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் கோரிக்கையை வைத்தபோதே இப்படியெல்லாம் நடக்கும் என முன்பே சொன்னார்கள். நடந்துவிட்டது. வரி இல்லாமல் இருந்த காஸ் சிலிண்டருக்கு ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்ததோடு மட்டுமல்லாமல், இப்போது மானியத்தையும் ரத்துசெய்துவிட்டது. 

அனைத்துக்கும் மக்களைப் பழக்கப்படுத்தும் முயற்சியில் இந்த அரசு இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. எவ்வளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் அரசு அசைவதாகவும் இல்லை. வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே மக்களில் பெரும்பாலானோருக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது போதாத நிலையில், யாரை எதிர்ப்பது? அனைத்தையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தாகவேண்டிய நிலைதான் மக்களின் நிலையாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement