“நீங்கள் என்னை தந்தையாக வழிநடத்தியுள்ளீர்கள்!” - பிரணாப் முகர்ஜியைப் புகழ்ந்த மோடி

மோடி

ந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. அவரது ஐந்தாண்டு பணிக்காலத்தில் சிறப்பாகப் பணியாற்றினார் என்று மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். மேலும், பிரணாப் முகர்ஜிக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார் மோடி. அதில், அவரது அரசியல் தலைமைப் பண்புகளைப் புகழ்ந்துள்ள மோடி, 'நீங்கள் எனக்குத் தந்தை போன்றவர்' எனக் குறிப்பிட்டுள்ள வார்த்தை பிரணாப்பை மிகவும் நெகிழ வைத்துள்ளது. இந்தக் கடிதத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரணாப்முகர்ஜி, "இன்றுதான் குடியரசுத் தலைவராக என் அலுவலகத்தில் பணிபுரியும் கடைசிநாள். எனக்கு மோடியிடமிருந்து இதயத்தைத் தொடும் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

மோடி பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய அந்தக் கடிதம் :

பிரணாப் முகர்ஜிக்கு மோடி எழுதிய கடிதம்

டியர் பிரணாப்,

நீங்கள் உங்கள் வாழ்க்கையின் புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறீர்கள். நீங்கள் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கும் இந்தச் சேவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குறிப்பாக குடியரசுத் தலைவராகக் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்த பணி அளப்பரியது. உங்களது எளிமை, கொள்கைகள், தலைமை ஆகியவை எங்களை வியக்க வைத்திருக்கிறது. 

3 வருடத்துக்கு முன்பு நான் சாதாரண ஓர் ஆளாக டெல்லிக்கு வந்தபோது என் கண்முன் நின்ற சவால்கள் அதிகம். இப்போது என்னை ஒரு தந்தையாக வழிநடத்தியிருக்கிறீர்கள். உங்கள் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் எனக்கு நம்பிக்கையையும், வலிமையையும் தந்துள்ளது. அது எனது அரசாங்கத்துக்கு மிகவும் உதவியாக உள்ளது. 

நீங்கள் ஒரு நல்ல ஆசானாக இருந்துள்ளீர்கள். அரசியல் முதல் கொள்கைகள் வரை, பொருளாதாரம் முதல் வெளியுறவுக் கொள்கை வரை, தேசிய மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு என்று எல்லாவற்றிலும் உங்கள் ஆலோசனை எங்களுக்கு உறுதுணையாக இருந்தது.

Pranab Mukherjee

நீங்கள் எனக்கு அன்பானவர், ஆறுதலானவர். 'உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள்' எனும் உங்களது ஒரு தொலைபேசி அழைப்பு என்னை புத்துணர்ச்சியாக்கும். உங்களது அரசியல் பயணம் பல கட்சிகளின் கட்டமைப்பை சீரமைத்துள்ளது. எங்களது ஐடியாலஜி சில நேரங்களில் மாறியிருக்கிறது. கொள்கைகளில் மாறுபாடு இருந்தாலும் உங்களோடு இணைந்து பணிபுரிந்ததைக் கண்டு மகிழ்கிறேன்.

உங்களது அரசியல் பணி மற்றும் குடியரசுத் தலைவர் பணிக்காலத்தில் நாட்டைப் பெருமைப்படுத்தும் விஷயங்களைச் செய்துள்ளீர்கள். ராஷ்ட்ரபதி பவன் முன்னெடுப்புப் பணிகள், இந்திய இளைஞர்களின் திறமைக்கு மரியாதை போன்ற செயல்கள் இதில் அடங்கும். 

நீங்கள் பல தலைமுறை தலைவர்களைக் கடந்து வந்துள்ளீர்கள். இந்தச் சமூகத்துக்கு சுயநலமின்றி பணியாற்றி இந்திய மக்களுக்கு உந்துதலாக இருக்கிறீர்கள். உங்களால் இந்தியா எப்போதும் பெருமைப்படும். நீங்கள் மரியாதையான மக்கள் சேவகர், அருமையான தலைவர்.

உங்களது புதிய வாழ்க்கைப் பயணத்துக்கும், எதிர்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள். உங்களது ஆதரவு, தன்னம்பிக்கை, வழிநடத்தும் திறமை ஆகியவற்றுக்கு நன்றி. சில நாள்களுக்கு முன்பு என்னைப்பற்றி நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கும் நன்றி! 

ராஷ்ட்ரபதி ஜி உங்களுடன் பிரதமராகப் பணியாற்றியது எனக்குப் பெருமையளிக்கிறது. 

ஜெய்ஹிந்த்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!