’ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ’ - தக்காளியை பாதுகாக்கும் புதிய வங்கி!

மும்பை போன்ற பெருநகரங்களில் தக்காளியை பாதுகாப்பதே இப்போது பெரிய வேலையாக இருக்கிறது. வீட்டுக்குள் வைத்திருக்கும் தக்காளி கூட திருடு போய் விடுகிறது. தக்காளி வண்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. சந்தைக்குள் புகுந்து 70 ஆயிரம் மதிப்புள்ள கூடைகளைத் தக்காளி கொள்ளையர்கள் கொள்ளையடித்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பல வாரங்களாக தக்காளி விலை கிலோ ரூ. 100- ஐ தாண்டியே விற்பனையாகிறது.

தக்காளிக்கு தனி வங்கி தொடக்கம்

தக்காளி விலை ஏற்றத்தைக் கண்டித்து லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தக்காளியைச் சேமித்து வைக்க தனி வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்கு 'ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் தக்காளியை இந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாஸிட் செய்யலாம். தக்காளி லோனும் வழங்கப்படும். அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படும். 

காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கேலி செய்யும் விதத்தில் தக்காளி வங்கியைத் தொடங்கினாலும் மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதால்,  அவர்களே நினைத்தாலும் இனி தக்காளி வங்கியை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வங்கியை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளனர். டொமாட்டோ வங்கியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

வங்கியில் தக்காளி டெபாஸிட் செய்த ஒருவர் '' நான் 500 கிராம் தக்காளி டெபாஸிட் செய்துள்ளேன். 6 மாதத்தில் ஒரு கிலோவாக திரும்பக் கிடைக்கும்'' என்கிறார்.  பல்வேறு இடங்களில் கிளைகள் திறக்கவும் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ ' நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

தக்காளிக் கொள்ளையர்களும் சுறுசுறுப்படைந்துள்ளனர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!