Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

40,000 பேரின் ஆதார் கார்டு தகவல்களைத் திருடிய ஐ.ஐ.டி இளைஞர்!

`பொது இடங்களில் இருக்கும் கட்டணக் கழிப்பிடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால்கூட, ஐந்து ரூபாயுடன் சேர்த்து ஆதார் கார்டின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்' எனச் சொன்னால், ஆச்சர்யப்பட முடியாத காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றின் வரிசையில் ஆதார் கார்டும் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இடம்பிடித்திருக்கிறது. நாட்டு குடிமகனின் கருவிலிருந்து கைபேசி எண் வரை எல்லா தகவல்களையும் உள்ளடக்கிய இந்த அடையாள அட்டை அத்தியாவசியம் என உணர ஆரம்பித்தபோது, `இது தனிமனித மீறல், நாட்டு மக்களின் தகவல்களை எளிதில் திருடிவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது' எனச் சமூக ஆர்வலர்கள் பலர் குரல்கொடுத்தார்கள். அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் சமீபத்திய செய்தி, நம் அந்தரங்கங்கள் குறித்த மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கிறது. ஐ.டி துறையைச் சார்ந்த இளைஞர் ஒருவர், இதுவரை  40,000 பேரின் ஆதார் தகவல்களைத் திருடியிருக்கிறார்.  

அதாவது நம்முடைய பெயர், முகவரி, அலைபேசி எண், பாலினத் தகவல், மின்னஞ்சல் முகவரி ஆகியவை. திருடிய தகவல்களை வைத்து ஒரு மொபைல் செயலியை உருவாக்கி, கூகுள் ப்ளேவில் அதைப் புழக்கத்துக்கு விட்டு அதில் வரும் விளம்பர வருமானத்தில் மாதத்துக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்.

ஆதார் கார்டு தகவல் திருட்டு

பெங்களூரில் இருந்த அந்த இளைஞரை, சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைதுசெய்தது. அவர், பெங்களூரில் உள்ள ஓலா நிறுவனத்தில் பணிபுரிகிறார். உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த அவரின் பெயர், அபினவ் ஸ்ரீவத்சவ். கோரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி-யில் எம்.எஸ்ஸி., படித்து முடித்த தன்னுடைய அறிவை, இந்தச் செயலுக்குப் பயன்படுத்தி இருக்கிறார். `அவர் திருடியிருந்தாலும் அவரால் மக்களின் கருவிழி, கைரேகை ஆகியவற்றைத் திருட முடியவில்லை' எனக் காவல் துறை சொல்லியிருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற மனநிலையையே வெளிப்படுத்துகிறது.

நம்முடைய தகவல்களைச் சேகரித்துவைத்திருக்கும் `Unique Identification Authority of India' என்கிற அரசாங்க இணையதளத்தின் சர்வருக்குள் நுழைந்து, அவர் திருடியிருக்கிறார். மக்களுக்குப் பீதி ஏற்படக் கூடாது என்பதற்காக `பயோமெட்ரிக் தகவல்களைத் திருடாதவரை ஒரு பிரச்னையும் இல்லை' என்று துறை சார்ந்தவர்கள் நம்மை ஆற்றுப்படுத்தினாலும், UIDAI-யின் பலவீனத்தையே இது வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

இந்நிலையில், பான் கார்டையும் ஆதார் அட்டையையும் இணைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையும் நம்மை நெருக்குகிறது. இன்னும் என்னென்ன தகவல்களை ஆதாருடன் ஒன்றிணைத்து நம்மை விலைபேசப் போகிறார்கள் என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனிமனிதனின் எல்லா தகவல்களும் அரசாங்கத்திடம் இருந்தால், அவன் எளிதில் கண்காணிப்புக்குள்ளாவான். அரசுக்கு எதிராக அவன் செய்யும் சின்னஞ்சிறிய எதிர்வினைகள்கூட  எளிதில் ஒடுக்கப்படும். ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகாரம் இதன்மூலம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். அரசின் பாதுகாப்புக்காகவும், இந்திய மக்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கும் எளிமையான திட்டம்தான் ஆதார். என்றாலும், இந்த ஆதார் கார்டு மக்களின் பாதுகாப்பை எந்த அளவுக்கு உறுதிசெய்யப்படாமல் இருக்கிறது என்பதைத்தான் கேலி செய்திருக்கிறார் ஐ.ஐ.டி-யில் படித்த இந்த சைபர் திருடர்.   

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், “நாட்டு மக்களுடைய தனிமனிதச் சுதந்திரத்தை, தேச முன்னேற்றம் போன்ற எதற்கு மாற்றாகவும் விலை பேச முடியாது” என்றார். அரசாங்கம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement