வெளியிடப்பட்ட நேரம்: 08:38 (06/08/2017)

கடைசி தொடர்பு:08:38 (06/08/2017)

பி.ஜே.பி-யில் வெங்கைய நாயுடுவின் வெற்றிப்பயணம் !

வெங்கய்ய நாயுடு

நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக வெங்கைய நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலும், துணை ஜனாதிபதி தேர்தலும் முடிவடைந்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களே வெற்றிபெற்று, அவற்றுக்கான பதவியில் அமர்ந்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜியைத் தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.வெங்கைய நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதியே நாடாளுமன்ற மாநிலங்களவையையும் வழிநடத்தக்கூடியவர் என்பதால், நாடாளுமன்ற நடைமுறைகளை நன்கு உணர்ந்த, மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த ஒருவரே அந்தப் பதவியில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். அதன் காரணமாகவே நீண்ட, நெடிய நாடாளுமன்ற அனுபவமும், பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்றவரான வெங்கைய நாயுடுவை மத்திய அரசு, இப்பதவிக்கு முன்னிறுத்தி, தற்போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்டும் உள்ளார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கத்தின் உறுப்பினராக செயலாற்றியவர். பி.ஜே.பி-யிலும், ஆந்திர மாநில அரசியலிலும் முக்கியப் பங்குவகித்த அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில், மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றார். பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவராகவும் பதவிவகித்த வெங்கைய நாயுடு, 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றிபெற முடியாமல் போனதற்கு, தார்மீகப் பொறுப்பேற்று கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 

துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தவேண்டிய கட்டாயம் பி.ஜே.பி.க்கு ஏற்பட்டது. இதையடுத்து, வெங்கைய நாயுடுவை துணை ஜனாதிபதியாக்க பி.ஜே.பி முடிவுசெய்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்.பி.-க்களின் பலத்தைக் கொண்டுள்ள பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் வெங்கைய நாயுடு வெற்றிபெற்றுள்ளார். 

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  இவர், மத்திய அமைச்சரவையில் பல்வேறு காலகட்டங்களில் பல முக்கியத் துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். மிகச்சிறந்த பேச்சாற்றலும், நீண்ட அரசியல் அனுபவமும் கொண்டவர் இவர்.

இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்தினம், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.வெங்கைய நாயுடு எழுதியுள்ள "டயர்லெஸ் வாய்ஸ் ரிலெண்ட்லெஸ் ஜெர்னி (Tireless Voice Relentless Journey)" என்னும் புத்தகத்தை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதில், நாயுடு ஆற்றிய முக்கியமான பேச்சுகள் மற்றும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கான விழாவில் பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெங்கய்ய நாயுடுவெங்கைய நாயுடு, தனது அரசியல் வாழ்வில் கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்.

* ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தவர்.

* B.A., B.L. படித்துள்ள இவர், மாணவப் பருவத்திலேயே பாரதிய ஜனதாவின் இளைஞர் அமைப்பான A.B.V.P.-ல் உறுப்பினராக இருந்தார்.

* இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்.

* 1977-80-ல் ஆந்திர மாநில ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தார்.  

* 1980-83-ம் ஆண்டுவரை அகில இந்திய பி.ஜே.பி. இளைஞர் பிரிவு துணைத்தலைவர் பொறுப்பை வகித்தார்.

* 1978-ல் ஆந்திர சட்டப்பேரவைக்கு உதயகிரி தொகுதியில் இருந்து முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1985-ம் ஆண்டுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

* 1980-85-ம் ஆண்டுகளில் ஆந்திர மாநில பி.ஜே.பி. சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்தார்.

* 1980 முதல் 1985-ம் ஆண்டுவரை ஆந்திர மாநில பி.ஜே.பி தலைவராகவும், 1985 முதல் 1988-ம் ஆண்டுவரை ஆந்திர பி.ஜே.பி. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார்.

* 1993-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை பி.ஜே.பி தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்துள்ளார்.

* 1998 முதல் மூன்றுமுறை கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

* 2000 முதல் 2002-ம் ஆண்டுவரை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

* 2002 முதல் 2004 வரை பி.ஜே.பி. தேசியத் தலைவர் பதவியை வகித்தார். 

* 2014-ம் ஆண்டில் மோடி அமைச்சரவையில், மத்திய நகர்ப்புற மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும், பின்னர்,  தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

தற்போது துணை ஜனாதிபதியாக வெங்கைய நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையை திறம்பட அவருக்கு வாழ்த்துகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்