வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (05/08/2017)

கடைசி தொடர்பு:20:57 (05/08/2017)

குடியரசு துணைத் தலைவர் ஆகிறார் வெங்கைய நாயுடு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். 

வெங்கைய நாயுடு

கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார். இதையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில், தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திமுடித்துள்ளது. 


பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெங்கைய நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இந்தத் தேர்தலில் 98.21 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதில், பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 516 வாக்குகள் பெற்று வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். அதாவது 244 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். 

மொத்தம் 11 வாக்குகள் இதில் செல்லாதவை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக வெங்கைய நாயுடு பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு வெங்கைய நாயுடு நன்றி தெரிவித்தார்.