வெளியிடப்பட்ட நேரம்: 02:44 (07/08/2017)

கடைசி தொடர்பு:06:45 (07/08/2017)

‘டோக்லாம்’ எனும் சிக்கல் முடிச்சு.. இந்தியா - சீனாவுக்கு மீண்டும் ஓர் எல்லை சவால்!

doklam, இந்தியா சீனா

ரம்புகளை சில்லிட வைக்கும் கடும் குளிர், எதிரே இருப்பவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு பனிமூட்டம், முறையாக உணவு கிடைக்காது, போருக்குத் தேவையான ஆயுதம் கிடைப்பதிலும் பலநேரங்களில் சிக்கல் நிலவும்... இதுபோன்ற ஒரு கடின சூழலில்தான் சண்டையிட வேண்டும். ஆம்... சண்டையிட்டே ஆக வேண்டும்! 1962-ல் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் நடந்த இந்தியா - சீனா யுத்தம் பற்றிய இந்த விரிவாக்கத்தை இப்போது மீண்டும் குறிப்பிட வேண்டிய அவசியம் வந்திருக்கிறது..!

சீனாவுடனான உறவு ஒரு பெண்டுலம் போன்றது. அங்கும், இங்குமான ஒரு அலைபாய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். அது, ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலும் சரி, மோடி பிரதமர் பொறுப்பை வகிக்கும் இந்தக் காலத்திலும் சரி! இரு நாட்டுக்கான உறவில் ஒரு நேர்கோடு இருந்ததேயில்லை. இதற்கான காரணங்கள் பலவிதமாகக் கூறப்பட்டாலும், முக்கியத் தலைவலியாக இருப்பது, இவ்விரு நாடுகளுமே ஒரு பெரும் நிலப்பரப்பை தங்கள் எல்லைகளாகக் கொண்டிருப்பதுதான். மங்கோலியா, ரஷ்ய நாடுகளுக்குப் பின், சீனா தனது நீண்ட எல்லையைப் பகிர்ந்துகொள்வது இந்தியாவுடன்தான். பிரிட்டிஷார் காலத்திலிருந்தே சில இடங்களில், எல்லையைப் பிரிப்பதில் தெளிவு இருந்ததில்லை. அக்சாய் சின் பகுதி, ஜான்சன் கோடு, மெக்மோகன் கோடு என எல்லைத் தொடர்பான சிக்கல் முடிச்சுகள் அவிழ மறுக்கின்றன. 

இந்நிலையில், டோக்லாம் பீடபூமி விவகாரத்தில் இந்தியாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா. இந்தியா - சீனா - பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதிகள் இணையும் இடம் டோக்லாம் பீடபூமி. இது சிக்கிம் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜூன் 16-ம் தேதி சாலைப் பணிகளை மேற்கொண்டது சீன ராணுவம். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய ராணுவத்தினர், அப்பணிகளைத் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கே போடப்பட்டிருந்த சாலையை அகற்றிய இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினரையும் வெளியேற்றினர். இந்த விவகாரம் இரு நாட்டு தலைமைகளையும் பரபரப்படையச் செய்தது. அதிருப்தி அடைந்த சீன அரசு, தங்களது ராணுவத்தினரை எல்லையில் குவித்து போர் பயிற்சிகளை மேற்கொண்டது. உடனடியாக இந்திய அரசும் 3000-க்கும் அதிகமான வீரர்களை சிக்கிம் எல்லையில் குவித்தது. போர் பதற்றம் அதிகரித்ததால் அசாதாரண சூழல் உருவானது. ''உங்கள் படைகளை வாபஸ் வாங்குங்கள். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு வரமுடியும்'' என திட்டவட்டமாக தெரிவித்தது சீனா. ஆனால், “பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, இருதரப்பினரும் படைகளை வாபஸ் பெற வேண்டும். அப்போதுதான் அடுத்தக்கட்டத்துக்குச் செல்ல முடியும்” என்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். 

டோக்லாம், doklam

இழுபறி தொடர்ந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில், கடுப்பான சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ரென் குவோகியாங், “இந்திய அரசு செய்துவரும் வேலைகள், நிச்சயமாக அமைதிக்கான வழியாகத் தெரியவில்லை. டோக்லாம் சம்பவம் நடந்துமுடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இந்திய அரசு இன்னும் தங்களது ராணுவத்தை டோக்லாம் பகுதியில் இருந்து திரும்பப்பெறவில்லை. நாங்கள் அமைத்த சாலைகளை அவர்கள் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது தேவையில்லாத சங்கடங்களையே ஏற்படுத்துகிறது. பதற்றத்தைத் தணிக்கவே நாங்கள் அமைதியாக இருக்கிறோம். சீனாவின் வலிமையை எந்த உலக நாடும் குறைத்து எடைபோட வேண்டாம். சீன ராணுவத்தினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டனர். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு தூதரகம் மூலமாக நாங்கள் முயற்சித்தோம். படைகளை வாபஸ் பெறாமல், காலம்தாழ்த்தி காரியம் சாதிக்க நினைக்கிறது இந்தியா. எங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு” என எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், “சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு ராஜதந்திர ரீதியில் முடிவு எட்டப்படும். நம் ராணுவம் மிகுந்த வலிமையான நிலையில்தான் உள்ளது. ஆனால், நாம் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வை எட்டுவோம்” என்றார். 

doklam, டோக்லாம்

இவர்கள் இருவரின் பேச்சிலும் ‘எங்கள் ராணுவம்தான் வலிமையானது’ என்ற பெருமை மேலோங்கியிருப்பதைக் கவனிக்க முடியும். ஆனால், ஒரு யுத்தம் எத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதை இவர்களின் தலைமைகள் உணரவேண்டும். 1962-ல் நடந்த போர் அதை கற்றுத்தந்துவிட்டே போயிருக்கிறது. அதேநேரத்தில், இந்த எல்லைப் பிரச்னை அவ்வளவு எளிதானதல்ல. இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான இந்த டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்தால், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி முற்றிலும் துண்டிக்கப்படும். போக்குவரத்து பாதிப்பு, எல்லைப் பாதுகாப்பில் அச்சுறுத்தல் என போராட்டச் சூழல் தொடர்கதையாகிவிடும். இந்த விவகாரத்தில், பூடான் எல்லையும் சம்பந்தப்பட்டுள்ளது. பூடானுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறது இந்தியா. இதுவும் ஒருவகையில், சீனாவை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இதனால், இப்பிரச்னையை நீள விடுவது 3 நாடுகளுக்குமே நல்லதல்ல. குறிப்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும். 

சுதந்திரம் தந்தபோது பிரிட்டிஷ் பிரகஸ்பதிகள் நமக்கு வைத்துவிட்டுச் சென்ற கண்ணி வெடிகளில் டோக்லாம் விவகாரமும் ஒன்று! அதில் சிக்காமல், செயலிழக்க வைப்பதில் இருக்கிறது ஆட்சியாளர்களின் திறமை!


டிரெண்டிங் @ விகடன்