வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (06/08/2017)

கடைசி தொடர்பு:08:46 (07/08/2017)

கோரிக்கை வைத்த காக்னிசென்ட்: ஏற்றுக்கொண்ட ஊழியர்கள்!

காக்னிசென்ட் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு முன்வைத்த ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

காக்னிசென்ட்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசென்ட், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இந்தியர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு பல கட்ட நடவடிக்கைகளை காக்னிசென்ட் மேற்கொண்டு வந்தது. இந்த முயற்சியில் நிறுவனத்தில் உள்ள மூத்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை காக்னிசென்ட் முன்வைத்தது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னாள் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கைக்கு அப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தற்போது நிறுவனம் முன்னிறுத்திய 400 மூத்த ஊழியர்கள் ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை ஏற்க முன்வந்துள்ளனர். இதன்மூலம், இந்த 400 ஊழியர்களும் தங்களது ஒன்பது மாதச் சம்பளத்தை மொத்தமாகப் பெற்றுக்கொண்டு தங்கள் பணியை ராஜினாமா செய்யவுள்ளனர். இந்த 400 ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் காக்னிசென்ட் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 60 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சேமிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.