இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள்... மத்திய அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள் | 2 types of Rs.500 Notes? Congress Alleges 'Biggest Scam Of Century'

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (08/08/2017)

கடைசி தொடர்பு:15:10 (08/08/2017)

இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள்... மத்திய அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்

நாட்டில், இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு குளறுபடிகளுடன் அந்த நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ்  உறுப்பினர் குலாம் நபி ஆசாத், ''காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரே மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் இரண்டு வகைகளில் ஒருபோதும் அச்சடிக்கப்பட்டதில்லை. அரசுக்காக ஒரு வகையான ரூபாய் நோட்டுகளும், கட்சியின் பயன்பாட்டுக்காக ஒரு வகையான ரூபாய் நோட்டுகளையும் நாங்கள் ஒருபோதும் அச்சடித்ததில்லை. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்'' இது என்று பேசினார்.

அப்போது கபில் சிபல் எழுந்து, அளவு மற்றும் டிசைன் ஆகியவற்றில் மாறுபட்ட இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளைக் காண்பித்தார். அவர் பேசுகையில், 'இந்த அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஏன் எடுத்தது என்பதை இப்போதுதான் நாங்கள் கண்டறிந்துள்ளோம். ரிசர்வ் வங்கி, அளவு மற்றும் வடிவமைப்பில் மாறுபட்ட இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடுகிறது' என்றார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'நேரமில்லா நேரத்தை காங்கிரஸ் கட்சி தவறாகக் கையாள்கிறது. ரூபாய் நோட்டுகள்குறித்து முறையற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைப்பதாகப் பேசினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் காட்டிய ரூபாய் நோட்டுகளை உற்றுக் கவனித்தால், இது எவ்வளவு முக்கியமான பிரச்னை என்பதை அறிந்துகொள்ளலாம்' என்று பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அவை நடுவில் கூடி, அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.