Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுவுக்கு எதிரான 100 நாள் ரியல் பிக்பாஸ் போராட்டம்..! உங்களுக்குத் தெரியுமா? #StandwithDavid

ரியல் பிக்பாஸ் போராட்டத்தில் டேவிட்

மிழக மக்கள் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை இருக்கையின் நுனிக்குக் வரவைத்து வேடிக்கைக் காட்டி வருகிறது பிக்பாஸ்! ஆனால், 'மது இல்லா தமிழகம்' படைக்க தலைநகர் டெல்லியில், ஒற்றை ஆளாகப் போராட்டம் நடத்திவரும் டேவிட் என்ற தமிழக இளைஞரைப் பற்றி யாருக்காவது தெரியுமா? அவரது போராட்டப் பாதை 100 நாள்களைக் கடந்தும் வீரியத்தோடு நீடித்துக்கொண்டிருக்கிற அந்த வைராக்கியம் குறித்து ஏதேனும் தெரியுமா? தெரிந்துகொள்ள கீழே படியுங்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 'ஆற்றூர்'-தான் டேவிட் ராஜின் சொந்த ஊர். வாள் சண்டை வீரரான டேவிட், இந்திய தேசிய அளவில், 10 விருதுகளைக் வாரிக் குவித்தவர். இந்தக் காரணத்தால், கடந்த 2008-ம் ஆண்டு 'ஆர்மி ஸ்போர்ட்ஸ் அகாடமி'யில் இவருக்கு வேலை கிடைத்தது. தமிழகத்தில் மதுவால் பல குடும்பங்கள் அழிந்து வருவதைப் பார்த்த டேவிட், மதுவுக்கு எதிராகப் போராட வந்தவர். மதுவுக்கு எதிராகப் போராடிய சசிபெருமாள் இறந்தபோது, போராட்டம் செய்து சிறை சென்ற இவரை போலீஸ் கடுமையாகத் தாக்கியதில் இடுப்பில் எலும்புகள் உடைந்தன. அதனால் பல மாதங்களாக படுக்கையிலேயே கிடந்தார். அதன்பிறகு தனது நண்பர்களோடு சேர்ந்து திருச்சியில், மதுவுக்கு எதிராகப் போராட்டம் செய்தார். அனைவரையும் கைதுசெய்த போலீசார் 'தேச விரோதிகள்' பட்டம் சூட்டி சிறையில் அடைத்தனர். டேவிட் ராஜ்சிறையில் இருந்து வெளியே வந்த டேவிட், ''நான் தேசவிரோதி என்றால், இந்திய அரசு எனக்குக் கொடுத்த விருதுகளும் பதக்கங்களும் தேவையில்லை'' எனக்கூறி அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டார். அதன்பிறகு 'தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது' என போராட்டம் செய்து வருகிறார். 

''தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள்தான் மதுவுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். அதனால் மத்திய அரசின் காதுகளுக்குக் கொண்டு செல்லலாம் என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியிருக்கிறேன்'' என கடந்த மே 1-ம் தேதி அறிவித்துப் போராட்டத்தை தொடங்கினார் டேவிட். அவர் போராட ஆரம்பித்து இன்றுடன் முழுமையாக 100 நாட்கள் ஆகிவிட்டன. ''எத்தனை நாள்கள் ஆனாலும், இந்தப் போராட்டத்தில் எனது உயிரே போனாலும் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவராமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்'' என்று மன உறுதியுடன் போராடி வருகிறார். இவர் கொண்ட கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று. பல ஆண்டுகளாக டேவிட் காதலித்து வந்த காதலியுடன் திருமணம் செய்ய இருவீட்டிலும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், ''மதுவுக்கு எதிரான எனது போராட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு வரவோ? அல்லது திருமணம் செய்துகொள்ளவோ என்னால் முடியாது'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார். 

மதுவுக்காக அரசு வேலையையும் துறந்து, தனது காதலியுடன் நடக்கவிருந்த திருமணத்தையும் நிறுத்தி, கடந்த 100 நாட்களாக வெயில், மழை பாராமல் ஜந்தர் மந்தரின் சாலை ஓரத்தில் போராடி வரும் டேவிட் நம்மிடம் பேசியபோது... "நான் மதுவுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட ஆரம்பித்து 100 நாட்கள் முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை எந்தவொரு அரசியல்வாதியின் பார்வைக்கும் இதுபோகவில்லை. மக்களின் ஆதரவும் எனக்கில்லை. முதல் 40 நாட்கள் என்னுடன் ஆறு பேர் இருந்தார்கள். ஆனால், அதன்பிறகு நான் தனியாகத்தான் போராடி வருகிறேன். இந்தப் போராட்டம் எத்தனை நாட்கள் போகும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எவ்வளவு நாட்கள் ஆனாலும் நான் போராடிக்கொண்டே இருப்பேன். போராட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு என்னை ஊருக்கு வரச் சொல்கிறார்கள். என் காதலியுடன் திருமணம் நடத்தவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், ஒரு போராட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பி அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தால், அதன் வீரியம் கெட்டுப் போய்விடும். என்ன நோக்கத்துக்காகப் போராட ஆரம்பித்தோமோ, அது நிறைவேறாமல் நாம் பின்வாங்கிவிட்டால், நிச்சயம் நல்ல முடிவு கிடைக்காது. நான் என் காதலியுடன் இதுபற்றி சொல்லிவிட்டேன். அவளும் எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டாள். 100 நாட்கள் அல்ல... எத்தனை நாட்கள் ஆனாலும் நான் போராடிக்கொண்டே இருப்பேன். தமிழகத்தில் மதுவிலக்கு ஏற்படும்வரை நான் போராடிக் கொண்டே இருப்பேன். இனி எனது போராட்ட வடிவம் மாறும். அடுத்ததாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போகிறேன். அதில் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. தமிழக மக்களிடம் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. முதலில் ஒரு போராட்டத்தை கையிலெடுக்கிறார்கள்... அடுத்தப் பிரச்னை வந்ததும் முதல் போராட்டத்தை அப்படியே பாதியில் மறந்துவிடுகிறார்கள். தமிழகத்தை வீணாக்க பல சதிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

போராட்டத்தில் டேவிட் ராஜ்

நாம் போராடவில்லை என்றால் நம் தலைமுறை வாழ முடியாது. நம் தலைமுறைகள் ஆரோக்கியமாக, சந்தோஷமாக நமது தமிழ்நாட்டில் வாழவேண்டும் என்றால் நமது உரிமைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம். எனக்கு ஆதரவு தரவில்லை என்றாலும் பரவாயில்லை.  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் கதிராமங்கலம், நெடுவாசல் மக்கள், விவசாயிகளுக்காவது ஆதரவு கொடுங்கள். நமக்கு தற்போது முக்கியம் பிக்பாஸ் அல்ல என்பதை உணருங்கள். ஓவியாவும், பிந்து மாதவியும்தான் நமது சந்தோஷம் என்றால்.. நாளை நமது பிள்ளைகள் அகதிகளாக வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்போது அழுது புரள்வதால் ஒரு பயனும் இல்லை" என்ற எச்சரிக்கையோடு பேசி முடிக்கிறார். 

டேவிட் சொல்வதும் உண்மைதானே... ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், ஈடுபாட்டோடு கலந்துகொண்ட தமிழக இளைஞர்கள், கதிராமங்கலம் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளின்போது ஈடுபாடு காட்டவில்லையே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement