வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (08/08/2017)

கடைசி தொடர்பு:16:38 (08/08/2017)

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தப் பலனும் இல்லை: நாடாளுமன்ற குழு ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தப் பலனும் இல்லை என்று நாடாளுமன்ற குழுவின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ரூபாய் நோட்டுகள்


கள்ள நோட்டுகளை ஒழிப்பது, கருப்புப் பணப் புழக்கத்தைக் குறைப்பது மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளைத் தடுக்க புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் 8ல் மத்திய அரசு அறிவித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அரசின் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் உள்ள 5 முதல் 7 ஆயிரம் கோடி கருப்புப் பணம் வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஒய்.சித்திக் தலைமையிலான எம்.பி-க்கள் குழு நடத்திய ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. பணமில்லா அல்லது குறைவான பணப்புழக்கம் என்ற நிலையை நோக்கி மக்கள் நகருவார்கள் என்று நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிலையை நோக்கி மக்கள் நகர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்துறையை முடக்கி விட்டதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் 4 கோடி வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டதாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும் பாஜகவின் பாரதீய மஸ்தூர் சங்கமே தெரிவித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அவசர கதியில் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள நாடாளுமன்ற குழு, ஏடிஎம் இயந்திரங்களுக்கு ஏற்ற வகையில் ரூபாய் தாள்கள் வடிவமைக்கப்படவில்லை போன்ற பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. பணப்புழக்கம் சீரடைவதற்குப் போதிய ரூபாய் நோட்டுகள் முன்னதாகவே அச்சிடப்படாததால், மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் முன் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை எந்தவகையிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்ததால், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கல்வித் துறையே என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

- தினேஷ் ராமையா