வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (08/08/2017)

கடைசி தொடர்பு:19:50 (08/08/2017)

வெளிநாட்டு கரன்சியை உப்புமாவுக்குள் வைத்து கடத்த முயன்ற இருவர் கைது

1.29 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை உப்புமாவுக்குள் வைத்து துபாய்க்குக் கடத்த முயன்ற ஒரு பெண் உள்பட இருவர் புனே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். 


புனேவில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல முயன்ற நிஷாந்த் என்பவர் மீது சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் உணவு வகைகளைக் கொண்டு செல்வதற்கான ஹாட் பாக்ஸ் இருப்பதையும், அதனுள் உப்புமா இருப்பதையும் கண்டறிந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அந்த ஹாட் பாக்ஸின் எடை அதிகமாக இருப்பதைக் கண்டு, அதை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில், உப்புமாவுக்குள் பாலீதீன் கவரில் சுற்றப்பட்ட 86,600 அமெரிக்க டாலர்கள் மற்றும் 15,000 யூரோக்கள் மதிப்பிலான கரன்சிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், ரங்லானி என்பவரின் உடமைகளைச் சோதனையிட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அவரும் உப்புமாவுக்குள் மறைத்து வெளிநாட்டு கரன்சிகளைக் கடத்த முயன்றதைக் கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 86,200 அமெரிக்க டாலர்கள் மற்றும் 15,000 யூரோக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு 1.29 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- தினேஷ் ராமையா