வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/08/2017)

கடைசி தொடர்பு:20:00 (08/08/2017)

ஆறு மாதத்தில் கன்னடம் கற்க வேண்டும்; இல்லையென்றால் வேலை காலி! கர்நாடக அரசு அதிரடி

கர்நாடகா மாநிலத்தில் வங்கிப் பணியாளர்கள் ஆறு மாத காலத்துக்குள் கன்னட மொழியைக் கற்காவிட்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கன்னட வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. 


கர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக கன்னட மொழிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தி மொழிக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி மொழி இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை அழித்த சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் கன்னட மொழி வளர்ச்சித்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து கன்னட மொழி வளர்ச்சித்துறை தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா, 'வங்கிகளில் பணியாற்றும் வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் ஆறு மாத காலத்துக்குள் கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியைக் கற்கவில்லையென்றால் பணி நியமன விதிகளின்படி வேலையை இழக்க நேரிடும். அனைத்து வங்கிகளிலும் கன்னட மொழிக் குழு அமைக்கப்படும். மாநில மொழிகளுக்கு வங்கிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை' என்று தெரிவித்தார்.