வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (09/08/2017)

கடைசி தொடர்பு:09:27 (09/08/2017)

100 நாள்களில் 1 லட்சம் பிரதிகள் விற்பனை! அதிரடிக்கும் நாவலாசிரியர் சவி ஷர்மா #SaviSharma

 savi sharma

ஆங்கிலப் புதினங்கள் படிக்கும் பழக்கம்கொண்டவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுத்து, இலக்கியம் சார்ந்த தேடல்கொண்டவர்கள் இந்தப் பெயரை அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். 'Everyone Has A Story' மற்றும் 'This Is Not Your Story' என்ற இரண்டு புதினங்களை எழுதியுள்ளார் சவி ஷர்மா (savi sharma). சூரத்தைச் சேர்ந்த இந்த இளம் பெண் எழுத்தாளரின் வயது 23. எழுத்தாளராகும் கனவில் சி.ஏ படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு பேனா பிடித்தவர். தன் முதல் புதினத்தை (Everyone Has A Story) தானே வெளியிட்டார். வெளியான முதல் வாரத்திலேயே அமேசான் வலைதளத்தில் 5,000 புத்தகங்கள் விற்று சாதனை படைத்தன. பிறகு வெஸ்ட்லேண்டு பப்ளிஷர்ஸ் உடன் கைகோத்தார். 100 நாள்களில் ஒரு லட்சம் பிரதிகள் விற்று மிகப்பெரிய சாதனை படைத்தது. அந்த இரண்டு நாவல்களின் கதையைப் பார்ப்போம்..

savi sharmaEveryone Has A Story: சவி ஷர்மாவின் முதல் புதினத்தின் முதல் பக்கத்தில் Dedicated To You எனக் குறிப்பிட்டுள்ளார். புதினத்தின் முதன்மை கதாபாத்திரங்கள்... மீரா, விவான், கபீர் மற்றும் நிஷா. எழுத்தாளராக வேண்டும் என்னும் லட்சியம்கொண்ட இளம்பெண், மீரா. அனைவர் மனங்களையும் தொடும் வகையில் ஒரு கதை எழுதும் சிந்தனையில் உள்ளவர். விவான், சிட்டி வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிபவர். விவானுக்கு உலகம் முழுதும் பயணம் மேற்கொள்ளும் கனவு. கபீருக்குச் சொந்தமாக ஒரு காபி டே தொடங்கும் ஆசை. நிஷா என்கிற பெண்மணி கடந்தகால வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களால் துவண்டு இருப்பவர். இந்த நான்கு மனிதர்களின் வாழ்க்கை ஒரு நேர்கோட்டில் சந்திப்பதே கதை. 

ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் சவி ஷர்மா. நட்பு, காதல், லட்சியம், துரோகம், துயரம் என அனைத்துத் தளங்களிலும் கதை பயணிக்கிறது. மீராவுக்கு விவான் மீது காதல் வரும் தருணம், விவான் கபீருக்கு காபி டே அமைக்க உதவி செய்யும் தருணம் எனக் கதை மாந்தர்களின் உணர்வுகள் நம்மை ஆட்கொள்கின்றன. விவான் தன் கடந்த கால நிகழ்வுகளை மீராவிடம் சொல்லும் இடத்தில் நம்மையும் அறியாமல் சோகம் ஆட்கொள்கிறது. நிஷாவிடம் கபீர் காதலை வெளிப்படுத்தும் இடத்தில் அன்பான ஆண்மகனாக மதிப்பைப் பெறுகிறார். இந்த நாவல் விரைவிலேயே திரை வடிவம் பெறும் சாத்தியங்கள் உள்ளன. 

This Is Not Your Story: முதல் புதினத்தின் வெற்றியையும் வரவேற்பையும் தொடர்ந்து பல மாதங்கள் செதுக்கி எழுதிய நாவல் இது. இதிலும் savi sharma  ஷரூயா, மிராயா, அனுபவ், கஸ்தூரி என நான்கு பேரை சுற்றி நிகழும் கதை. ஷரூயா ஒரு ஃபிலிம் மேக்கர் ஆர்வம்கொண்ட இளைஞர். தந்தையின் வற்புறுத்தலால் சிஏ படிப்பவர். மிராயா ஒரு இன்டிரியர் டிசைனர். தவறான வாழ்க்கைத் துணையினால் கஷ்டங்களை அனுபவித்து விவாகரத்தானவர். அனுபவ், மிகப்பெரிய தொழிலதிபராகும் லட்சியத்துடன் படித்தவர். வாழ்வின் பல இழப்புகளைத் தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்றவர். ஷரூயாவின் பக்கத்து வீட்டுப் பெண்மணியான கஸ்தூரி, மிராயாவின் உறவினர். இப்படி அனைவருக்குமே ஒரு கடந்த கால சோகம் உள்ளது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டுவந்தனர் என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது கதை. 

நால்வருமே தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை தங்களுக்கானது இல்லை, தாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். அதன்மூலம் வாசகர்களுக்கும் நினைத்த வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்களா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். If You Lamenting Over Your Past, Then You Can Never Build Your Future (உங்களது கடந்த காலத்தை எண்ணியே புலம்பிக்கொண்டிருந்தால், உங்களது எதிர்காலத்தைக் கட்டமைக்க இயலாது) போன்ற வாசகங்கள் நாவல் முழுக்க வருகின்றன. அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற பதற்றம் வந்துவிடுகிறது. ஷரூயாவும் மிராயாவும் காதலை வெளிப்படுத்தும் விதம் அட போடவைக்கிறது. 

savi sharma

அடுத்த படைப்பு எப்போது வெளிவரும் என்று ஆவலை ஏற்படுத்தி இருக்கும் விதத்தில் படைப்பாளியாக வென்றுவிட்டார் சவி ஷர்மா. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியே ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார். இந்த இளம் பெண் எழுத்தாளர் இன்னும் பல இலக்கியப் படைப்புகளைப் படைக்க நம் வாழ்த்துகளைப் பகிர்வோம்!


டிரெண்டிங் @ விகடன்