"அமித் ஷா ஆகிய நான்..!"... ஓவர் டூ நாடாளுமன்றம் | Amit Shah to enter Rajya Sabha soon

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (08/08/2017)

கடைசி தொடர்பு:13:10 (09/08/2017)

"அமித் ஷா ஆகிய நான்..!"... ஓவர் டூ நாடாளுமன்றம்

amit shah, அமித் ஷா

தொழில்வளம் மிக்க குஜராத்தின், பெரும் பணக்காரக் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர் அந்த இளைஞர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது தீவிர ஈடுபாடு அவருக்கு. ஏ.பி.வி.பி-யில் இளைஞர்களுக்கு ‘தல’யாகச் சுற்றி வந்தார். பி.ஜே.பி-யில் முக்கிய இடம், எம்.எல்.ஏ, அமைச்சர் பதவி, டெல்லி அரசியல், பி.ஜே.பி தலைவர் என ஒவ்வொரு நிலையாக படியேறி வந்த அவரின் பெயர் அமித் ஷா! விரைவில் ராஜ்ய சபா உறுப்பினராகப் போகிறார்.

யார் இந்த அமித் ஷா?

அவர் பிறந்தது மும்பையில். அமித்ஷாவின் அப்பா அனில்சந்திர ஷா பெரும் தொழில் அதிபர். பி.வி.சி பைப் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்தவர் அவர். அமித் ஷாவுக்கும் தன் தந்தையைப் போல தொழிலதிபராக வேண்டும் என்ற கனவு. ஆனால், ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி என அரசியல் செயல்பாடுகளிலும் தனிக் கவனம் செலுத்தி வந்தார். கல்லூரியில் பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்த அமித் ஷா, அரசியல் கெமிஸ்ட்ரியையும் படித்துத் தேர்ந்தார். பின்னர், பங்குச்சந்தை முதலீடு, அப்பாவின் தொழில் எனக் கவனம் செலுத்தி வந்தவர், 1995-க்குப் பின்னர் குஜராத் மாநில பி.ஜே.பி-யில், நரேந்திர மோடியின் வருகையையொட்டி அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தொடங்கினார். 1991 தேர்தலில், காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அத்வானிக்காக பரபரவென வேலை பார்த்தார். இதன்மூலம் அத்வானி மற்றும் மோடியின் அறிமுகம் நன்றாகவே கிடைத்தது. ‘மூளைக்காரர்’ அமித் ஷாவை மோடிக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. மோடியுடன் நெருக்கம் அதிகரித்தது.  

amit shah, அமித்ஷா

சர்ச்சை நாயகன் அவதாரம்! 

2002-ம் வருடம் மோடி, குஜராத்துக்கு முதல்வரானபோது, உள்துறை உட்பட 10 துறைகளுக்கு அமைச்சர் ஆனார் அமித் ஷா. மோடிக்கு அடுத்த இடத்தை அலங்கரித்த அமித் ஷா மீது பலமான நம்பிக்கை வைத்தார் மோடி. 2007-ல் மோடி மீண்டும் முதல்வரானபோது, அமித் ஷா இன்னும் பலமான இடத்துக்கு வந்தார். இடையில், 2005-ம் வருடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார் சோரப்புதீன் ஷேக். மேலும், சோரப்புதீனின் நண்பர் துளசிராம் பிரஜாபதியும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். சோரப்புதீன் என்கவுன்ட்டரில், அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. குஜராத் காவல்துறை அதிகாரிகளின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கு தொடர்பாக 2010-ல் கைதுசெய்யப்பட்டார் அமித் ஷா. நீதிமன்றத்தில் ஆஜரான அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இஸ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கிலும், இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்ட புகாரிலும் அமித்ஷாவின் பெயர் பலமாக அடிபட்டது. ஒருகட்டத்தில், அவரை குஜராத்தைவிட்டே வெளியேற உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 

பி.ஜே.பி-யின் தலைமைப் பீடத்தைப் பிடித்த அமித் ஷா!

குஜராத்திலிருந்து வெளியேறிய அமித் ஷா, 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்தரப் பிரதேசத்தில் பி.ஜே.பி-யை வெற்றி பெறச் செய்வதற்காக அங்கே முகாமிட்டார். அப்போது, பி.ஜே.பி-யின் பிரசாரக் குழுத் தலைவராக இருந்த மோடியின் உத்தரவை ஏற்றே அங்கு சென்று பணியாற்றினார் அமித் ஷா. உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை ஒட்டுமொத்தமாக அள்ளி அமோக வெற்றி பெற்றது பி.ஜே.பி. அமித் ஷாவுக்கு சுக்கிரன் உச்சத்துக்கு ஏறினான். அசந்துபோன மோடி, அமித் ஷாவுக்கு அளித்தப் பரிசு என்ன தெரியுமா...? பி.ஜே.பி தலைவர் பதவியில் இருந்த ராஜ்நாத் சிங் பதவி விலக, ‘தலைவர்’ என்ற அரியாசனத்தில் ஏறினார் அமித் ஷா.

அமித் ஷா, amit shah

தொடர் வெற்றிகளைக் குவித்த அமித் ஷா, பீகாரில் அமைக்கப்பட்ட மெகா கூட்டணி விஷயத்தில் கொஞ்சம் சறுக்கினார். ஆனால், இப்போது அந்தப் பிரச்னையும் நிதிஷ் குமாரால் முடித்துவைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் அமித் ஷா, தனது ராஜ்ய சபா கணக்கைத் தொடங்கவிருக்கிறார். குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.-யாகத் தேர்வாக இருக்கிறார். “கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து கண்டிப்பாக நான் விலகமாட்டேன். பி.ஜே.பி தலைவராக நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” எனப் பேட்டியளித்திருக்கிறார் அமித்ஷா. நாடாளுமன்றத்துக்குள் நுழையவிருக்கும் அமித் ஷாவை ஏகமாக வரவேற்கக் காத்திருக்கிறார்கள் -பி.ஜே.பி-யினர். இவரது வருகை நாடாளுமன்றத்தில் உள்ள மற்றக் கட்சியினரையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. 

‘ஸ்பெஷல் வியூகங்களுக்குப் பெயர் பெற்றவர் அமித் ஷா’. அப்படித்தான் மோடி நினைத்துக்கொண்டிருக்கிறார். பலநேரங்களில் அது தப்புத்தாளமாகவும் போயிருக்கிறது. ஆனால், இவ்வளவு நாள்கள் இல்லாமல், இப்போது ஈடேறும் அமித் ஷாவின் நாடாளுமன்ற வருகைக்கான காரணத்தை பி.ஜே.பி தரப்பு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், விரைவில் இந்த வசனம் இந்தியில் ஒலிக்கலாம்.. "அமித்ஷா எனும் நான்...!"


டிரெண்டிங் @ விகடன்