ராமர் கோயில் கட்டுவதற்கான தடை நீங்குகிறதா?

புதிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஷியா மத்திய வக்பு வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

பாபர் மசூதி

அயோத்தியில், ராமர் கோயில் மற்றும் மசூதி அமைப்பது தொடர்பான சர்ச்சைகள், 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெரும் பிரச்னை ஆனது. அதன் பின்னர், இது தொடர்பான வழக்கு நடந்துவந்தது. கடந்த 2010-ம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லாலா ஆகிய மூன்று அமைப்புகள் சரிபங்காகப் பிரித்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது. கடந்த ஏழு வருடங்களாக நடந்துவரும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு  வரும் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  

இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக, உத்தரப்பிரதேச மாநில ஷியா மத்திய வக்பு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "இந்தப் பிரச்னையை சுமுகமாக முடிக்க விரும்புகிறோம். ஆனால், இந்த வழக்கில் கடந்த  ஏழு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் அந்த இடத்தை விட்டுவிட்டு,  இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் வேறு ஒரு பகுதியில் மசூதி கட்ட சம்மதிக்கிறோம். இரண்டும் ஒரே இடத்தில் இருந்தாலும், ஒலிபெருக்கி சப்தங்களால் பதற்றமான சூழ்நிலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே, நியாயமான தூரத்தில் இருந்தால் இரு மதத்தினரும் அமைதியுடன் வழிபட வழிவகுக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான முக்கிய அறிவிப்பு, வரும் 11-ம் தேதி விசாரணையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷியா மத்திய வக்பு வாரியத்தின் இந்த முடிவால், இத்தனை ஆண்டு காலமாக நீடித்துவந்த பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும். இத்தனை வருடங்களாக ராமர் கோயில் கட்டுவதற்கு இருந்த தடையும் தற்போது நீங்கும் என எதிர்பார்கப்படுகின்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!