வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (09/08/2017)

கடைசி தொடர்பு:20:46 (09/08/2017)

பி.ஜே.பி-க்கு பின்னடைவு: குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி தொடருமா?

காங்கிரஸ் - அகமது படேல்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேல் ஒருவழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநிலத்தில் இருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவைத் தேர்தலில் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகிய இருவரைத் தவிர்த்து மூன்றாவதாக அகமது படேல், மிகப்பெரிய அரசியல் நாடக அரங்கேற்றத்திற்குப் பிறகே தேர்வாகி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். அகமது படேலின் இந்த வெற்றியை அம்மாநிலத்திலும், தலைநகர் டெல்லியிலும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

மாநிலங்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காந்திநகரில் நள்ளிரவுக்குப் பின்னர் அகமது படேல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு தலா 46 எம்.எல்.ஏ-க்களும், அகமது படேலுக்கு 44 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 44 பேரின் ஆதரவு போதுமானது என்பதால், அகமது படேல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்காக பி.ஜே.பி. தரப்பில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். அகமது படேலைப் பொறுத்தவரை, குஜராத்தில் இருந்து ஐந்தாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகி இருக்கிறார்.

தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும், அகமது படேல் தனது டுவிட்டரில், 'சத்தியமே வெல்லும்' என்று பதிவிட்டுள்ளார். குஜராத் மாநில அரசு நிர்வாகத்தையும், பணம் மற்றும் ஆள்பலத்தைப் பயன்படுத்தியும் பி.ஜே.பி. மேற்கொண்ட உத்திகன் பலனளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, பி.ஜே.பி-க்கு வாக்களித்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தாங்கள் வாக்களித்ததை வெளியே தெரிவித்ததால், அவர்களின் வாக்கு செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கோரிக்கை விடுத்ததால், மாநிலங்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று பி.ஜே.பி-யும் வலியுறுத்தியது. எனினும், ராகவ்ஜி பாய் படேல், போலோபாய் கோஹில் என்ற இரண்டு எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளையும் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம், அவர்கள் வாக்களித்ததை வெளியே தெரிவித்தது சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறியது.

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதுடன், அகமது படேலின் வெற்றி, பி.ஜே.பி.-க்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியை உடைக்கும் நோக்கில் பி.ஜே.பி. செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர் சிங் வகேலா வெளியேறி பி.ஜே.பி-யில் இணைந்தார். மேலும் சில எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, பி.ஜே.பி-யில் இணைந்தனர். இதனால் அகமது படேல், மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதில் சிக்கல் உருவானது.

இந்நிலையில், குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பெங்களுருவில் உள்ள கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருந்த விடுதி மற்றும் சிவகுமாரின் வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் அதிரடியாகச் சோதனை நடத்தினர். எம்.எல்.ஏக்களுக்கு பணம் வழங்கப்பட்டதா? என்பது குறித்தும் ஐ.டி, துறையினர் விசாரணை நடத்தினர். அமைச்சர் சிவகுமாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. 

அ.தி.மு.க-வில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்தபோது, அக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அவர் பக்கம் சென்றுவிடாமல் இருக்க, சென்னையை அடுத்த கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, வருமான வரித்துறை அங்கு சோதனை நடத்தாதது ஏன்? என்ற பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பின.

இந்நிலையில், ஒருவழியாக குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் முடிவடைந்து, காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அகமது படேலை வீழ்த்தும் பி.ஜே.பி-யின் திட்டம் அரங்கேறாமல் போய் விட்டது. இது அக்கட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. 

அமித் ஷாபீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் இருந்த மெகா கூட்டணியை உடைத்து, தங்கள் கட்சி ஆதரவுடன் அவரையே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ளது பி.ஜே.பி. தமிழ்நாட்டில், ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவருடனும் நெருக்கம் காட்டிக்கொண்டு, இரு அணிகளையும் இணைய மத்திய பி.ஜே.பி. அரசு வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற நிலையில், குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பிளவுபடச் செய்து, எதிர்வரும் அம்மாநில சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதே பி.ஜே.பி-யின் இப்போதைய இலக்காக உள்ளது. 

ஆனால், மாநிலங்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற குளறுபடியை அறிந்து கொண்ட குஜராத் மக்கள், சட்டசபைத் தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் பி.ஜே.பி தோல்வி அடையுமானால், அது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அக்கட்சி கருதுகிறது. எனினும், "இந்த சூழ்நிலைகளை எல்லாம் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொண்டு, அரசியல் லாபம் அடைய வேண்டியதும், அக்கட்சியின் கையில்தான் உள்ளது" என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்