வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (10/08/2017)

கடைசி தொடர்பு:21:59 (10/08/2017)

331 போலி நிறுவனங்களுக்குத் தடை... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

 `சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து பணம் முதலீடு, வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும்' என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 331 போலி நிறுவனங்கள் மீது வர்த்தகத் தடை விதித்துள்ளது இந்திய பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான `செபி'. இதில் ஜெ குமார் இன்ஃப்ரா, பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், பர்சவ்நாத் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1,000 கோடி ரூபாய் முதல் 2,000 கோடி ரூபாய்க்குமேல் இருக்கிறது. 

போலி, banned

சட்டவிரோத வெளிநாட்டுப் பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் 331 நிறுவனங்கள் மேற்கொள்வதாக நிறுவனங்கள் விவகாரத் துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்தன. இதையடுத்து இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 331 போலி நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய, செபி கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த நிறுவனங்கள், இந்த மாதம் வர்த்தகம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படும்.

`முதல் திங்கள்கிழமை மட்டுமே வர்த்தகமாகும்' என, பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் எந்த வகையான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதைக் குறிப்பிடவில்லை. இந்திய பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதலில், இந்த 331 நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், போலி நிறுவனங்களைப் பட்டியலிலிருந்து விலக்கிவைக்கவும் செபி வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கவும் கூறியுள்ளது.

செபி குறிப்பிட்டுள்ள நிறுவனங்ளில் ஜெ குமார் இன்ஃப்ரா, பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ், பர்சவ்நாத் டெவலப்பர்ஸ், பின்கான் ஸ்பிரிட், கல்லண்ட் இஸ்பட், திவிட்டியா டிரேடிங், அதுனிக் இண்டஸ்ட்ரீஸ், பிரைம் கேபிடல் மார்க்கெட், விபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் உள்ளன. இந்தப் போலி நிறுவனங்கள் பட்டியலில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 127 நிறுவனங்களும், மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த 50 நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. குஜராத், டெல்லியில் தலா 30 நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போலி நிறுவனப் பட்டியலில் ஒடிசா, அசாம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள், உடனடியாகத் தனி ஆடிட்டர்களை நியமித்து தணிக்கைப் பணிகளைத் தொடங்க பங்குச்சந்தை வலியுறுத்த வேண்டும். இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படைகள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள செபி வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை இந்தப் பரிசோதனையில் நிறுவனங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால், பங்குச்சந்தைப் பட்டியலிலிருந்து விலக்கவும் செபி பரிந்துரை செய்திருக்கிறது. 

இதுகுறித்து, பங்குச்சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் பேசினோம்... 

``இந்த 331 நிறுவனங்களில் பெரும்பாலும் 300-க்கும் அதிகமான நிறுவனங்கள் வியாபாரமே இல்லாத நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பது எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த நிறுவனத்தின் பங்கிலிருந்து வெளியேறிவிட வேண்டும். அப்படி வெளியேறுவதும் மிகவும் கஷ்டம். ஏனெனில், இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்கவும் முடியாது; யாரும் வாங்கவும் முன்வர மாட்டார்கள். விலையிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. முதலீட்டாளர்கள் இதுபோன்ற போலியான நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது. 

போலியான நிறுவனங்களை எப்படிக் கண்டுபிடிப்பது? 

போலியான நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை. இதுவரை டிவிடென்ட் வழங்கியிருக்காது. லாபம் காட்டியிருக்காது. காலாண்டு முடிவுகளைச் சரியான நேரத்தில் வெளியிட்டிருக்காது. சந்தை மூலதனத்தின் மதிப்பு 50 அல்லது 100 கோடி ரூபாயைக்கூடத் தாண்டியிருக்காது. இதைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமின்றி இந்த நிறுவனங்கள் ஆக்டிவாகச் செயல்படுவதே கிடையாது. இந்த நிறுவனங்கள், தொடர்ச்சியான வருமானத்தை ஈட்டிவருகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இதுபோன்ற அடிப்படை விஷயங்கள் பல இருக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே போதும். மற்ற விஷயங்கள் எல்லாம் முக்கியம் கிடையாது. 

போலி, ak prabhakarஇந்த நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பவர்கள், இதை மறந்துவிடவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. பல நிறுவனங்கள், ஆண்டுக்கணக்கில் வியாபாரம் மேற்கொள்ளாமல் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தின் பங்கு விலை இரண்டு ரூபாய். இது நான்கு ரூபாய்க்குப் போகாது என்ற பேராசையில் பலர் வாங்குகின்றனர். பலர் `இரண்டு ரூபாய்தானே, 20,000 ரூபாய்க்கு வாங்கலாம்; நஷ்டமடைந்தால் பெரிய பிரச்னை இல்லை' என நினைத்து வாங்குகின்றனர். இது முற்றிலும் தவறு.  இதில் ஒருசில நிறுவனங்கள் இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. சில நிறுவனங்கள் செபியிடம், `நாங்கள் ஒழுங்காக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள்தான்' என முறையிட்டுள்ளன. இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு நிறுவனங்கள் தப்பிக்கலாம். போலியான நிறுவனங்கள் மீது பல ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி நிறுவனங்கள் இன்னும் பி.எஸ்.இ-ல் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. எனவே, இதுபோன்ற நிறுவனங்களைக் கண்டுபிடித்துத் தடைசெய்வதுதான் நல்லது. 

பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கிறது என்பதற்காக, பலரும் ஏதேதோ தவறான பங்குகளை எல்லாம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது ஒரு பெரிய மோசடியாக மாறிவிடும். இதை ஆரம்ப நிலையிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆகையால், இதை நினைத்து சந்தோஷம்தான் படவேண்டும். இதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படவேண்டியதில்லை. இதில் ஒருசிலர் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், பலர் சிக்கியிருப்பார்கள். இனிமேலாவது இதுபோன்ற போலியான நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்" என்றார் அவர்.


டிரெண்டிங் @ விகடன்