தந்தையை நடுத்தெருவில் நிறுத்திய கோடீஸ்வர மகன்... ரேமண்ட் நிறுவனத்தில் நடப்பதென்ன?

திருமணம், பிசினஸ் மீட்டிங் என்றாலே `ரேமண்ட்' என்ற பிராண்ட்தான் எல்லோருடைய நினைவுக்கும் வரும். அந்த அளவுக்கு இந்தியச் சந்தையில் பிளேஸர், கோட் சூட் வர்த்தகத்தில் இன்றும் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பிராண்ட் `ரேமண்ட்'. இந்த நிறுவனத்தைத் தொடங்கி இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தவரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?

ரேமண்ட்ரேமண்ட்

ரேமண்ட் நிறுவனத்தைத் தொடங்கி தனது கடின உழைப்பால் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைச் சம்பாதித்தவர் விஜய்பத் சிங்காலியா. இன்று அவர், மும்பையில் வாடகை வீட்டில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சொத்துகள் அனைத்தையும் தன் மகன்களுக்கு எழுதிக்கொடுத்தவர், தன் மகன்களாலேயே இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. அவர் தங்கியிருந்த வீடு, அவருடைய கார் என அனைத்தும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. 

தற்போது 78 வயதாகும் விஜய்பத் சிங்காலியா, இவ்வளவு காலமும் ரேமண்ட் நிறுவனத்தை வளர்க்கப் பாடுபட்டிருக்கிறார். இந்த முதிய வயதில் அவருக்கு ஏன் இந்த நிலை? என்ன நடந்தது ரேமண்ட் நிறுவனத்தில்?

இதைப் பார்க்கும் முன் ரேமண்ட் நிறுவனத்தின் வரலாற்றைப் பார்க்கலாம். ரேமண்ட், ஒரு தனி நிறுவனம் அல்ல; ஜேகே குழுமத்தின் ஒரு நிறுவனமாக இருந்தது. ஜக்கிலால் சிங்கானியா, கம்லாபத் சிங்கானியா ஆகியோரால் 1918-ம் ஆண்டில் தொடங்கியது இந்த ஜேகே குழுமம். 1970-ம் ஆண்டில் ஜேகே குழுமம் டாடா மற்றும் பிர்லாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தது. அதன் பிறகு ஜேகே குழுமம் மூன்றாக உடைந்தது. 

ஜேகே சிமென்ட்ஸ், ஜேகே டெக்னோசாஃப்ட் இரண்டும் கவுர் ஹரி சிங்கானியா தலைமையிலும், ஜேகே டயர், ஜேகே பேப்பர், ஜேகே லஷ்மி சிமென்ட் ஆகியவை ஹரி சங்கர் சிங்கானியா தலைமையிலும், விஜய்பத் சிங்கானியா தலைமையில் ரேமண்டும் பிரிந்தன.  எல்லோரும் தங்கள் நிறுவனங்களை வளர்த்தெடுத்தார்கள். இருப்பினும், இந்தியாவின் டாப் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த பெருமையை இழந்தன. ரேமண்ட் நிறுவனத்தை விஜய்பத் சிங்கானியா மிகச்சிறப்பாக வழிநடத்தினார். 30 ஆண்டுகளுக்கும் மேல் ரேமண்ட் நிறுவனத்தின் வளர்ச்சியைச் சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டார். 

ஆனால், 2000-ல் நிறுவனம் அவரின் இளைய மகன் கவுதமுக்கு கைமாறியது. பணியிலிருந்து ஓய்வெடுக்க விரும்பிய விஜய்பத் சிங்கானியா, மகனிடம் நிறுவனத்தை ஒப்படைத்தார். ரேமண்ட் நிறுவனத்தின் 37.17 சதவிகிதப் பங்குகள் கவுதமுக்குச் சொந்தமானது. மூத்த மகன் மதுபதிக்கு இது கோபத்தை ஏற்படுத்த, தன்னுடைய பங்கை அவர் கேட்க ஆரம்பித்தார். ஆரம்பித்தது குடும்பச் சண்டை.

ரேமண்ட்

2007-ம் ஆண்டில் குடும்பமாகத் தங்கியிருந்த `ஜேகே ஹவுஸ்' என்ற அப்பார்ட்மென்ட் வீடு, ரேமண்ட் மற்றும் அதன் துணை நிறுவனமான பாஷ்மினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவை, விஜய்பத் மற்றும் அவருடைய இறந்த அண்ணனின் மனைவி வீனாதேவி, அவர்களின் மகன்கள் ஆகியோருக்கு பங்கு உண்டு என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அந்த பில்டிங் புனரமைக்கப்பட்ட பிறகு, அதை சதுர அடி 9,200 ரூபாய் வீதம் அதில் உள்ள வீடுகளை விற்க ரேமண்ட் நிறுவனம் முடிவுசெய்தது. விஜய்பத் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கான வீடுகளைக் கோரினர். அதற்கு எதிராக ரேமண்ட் நிறுவனம் முடிவு எடுத்தது.

கடந்த வருடம் முதல், கவுதமுக்கு எதிராக விஜய்பத் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர். விஜய்பத் சிங்கானியாவின் வழக்குரைஞர் ``கவுதம், விஜய்பத் சிங்கானியாவை அனைத்திலிருந்தும் துரத்தியடிக்கிறார். அனைத்தையும் பறித்துக்கொண்டார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ரேமண்ட் நிறுவனம் அவருக்கு மாதம் 7,000  ரூபாய் மட்டுமே கொடுப்பதாகவும் கூறியுள்ளார். 

ஒருகாலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்த விஜய்பத் சிங்கானியா, தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார். மகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதித்து தாரைவார்த்தவருக்கு ஒரு வீடு, கார் கூட தர முடியாத அளவுக்கு அவர்களுக்குள் என்ன பிரச்னை என்பது இன்னும் வெளிவரவில்லை. 

ஆனால், நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் குடும்பத்தினருக்குள் இதுபோன்ற சொத்து பிரச்னைகள் வருவதைப் பார்க்கும்போது, பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!